Monday, January 6, 2014

நேர்காணல் - மா.பாலசிங்கம் (மா.பா.சி)

நேர்காணல் - மா.பாலசிங்கம் (மா.பா.சி)


மா.பா.சி.என அறியப்படும் ஐயம்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் மகன் பாலசிங்கம் அவர்கள்,யாழ்ப்பாணம்-கொட்டடியில் 26.11.1939 இல் பிறந்தவர்.தினகரன் வாரமஞ்சரியில் இவரது முதல் சிறுகதை "ஏமாற்றம்" வெளிவந்தது."இப்படியும் ஒருவன்" என்ற தலைப்பிலான முதல் சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 இலும்,"எதிர்க்காற்று"எனும் சிறுகதைத் தொகுப்பு 2008 இலும் வெளிவந்தன.இன்னொரு தளத்தில் தனது எழுத்து-சமூகப் பணியை முன்னெடுப்பதன் காரணமாய் ஆக்க இலக்கியத்தில் தொடர்ந்தும் பங்கெடுக்காத போதிலும்,அதன் அறுவடையான தலைநகரின் கலை-இலக்கிய-சமூக நிகழ்வோட்ட பதிவுத் தொகுப்பு விரைவில் வெளிவருவதன் வாயிலாக அவரது இயங்காற்றலின் முழுப் பரிமாணம் விரைவில் எல்லோர் கவனத்துக்கும் வரும்.திரை மறைவில் இருந்து இலக்கிய வெளிச்சம் கொடுக்கும் அவரின்   கனதியான பங்களிப்பை வெளிக்கொணரும் சிறு முயற்சியாக,அவரது 74ம் அகவை செவ்வி இது.



  

             உங்களுடைய சமூக நோக்கை, இப்போதைய தளத்துக்கு ஏவிய சம்பவங்கள், ஆளுமைகள் குறித்து, புதிய இளம் வாசகருக்கு அறியத் தருவீர்களா....?


வடஇலங்கைத் தமிழ் பேசும் மக்கள் தற்போது இடப்பெயர்வைப் பற்றி அடிக்கடி பேசி வருகின்றனர். அதெமது குடும்பத்துக்கு 1940 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே ஏற்பட்டுவிட்டது. வில்லூன்றி மயானப் படுகொலை குறித்து இன்றைய இளந்தலைமுறைக்குத் தெரியாதிருந்தாலும் நம்மோடு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை யாழ்ப்பாண மண்ணில் நடந்த சகோதரத் தமிழருக்கெதிரான படுகொலைச் சம்பவத்தை மறந்திருக்காது. யாழ், பலாலி வீதியிலிருந்து வில்லூன்றி மயானத்துக்கு, வள்ளியம்மை என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணொருத்தியின் சடலத்தை, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் கொண்டு வந்து தகனஞ் செய்ய முயன்ற போது, யாழ்ப்பாணத்து நாவலர் பரம்பரை தமிழர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, சின்னத்தம்பியென்ற பஞ்சமனைச் சடலமாக வீழ்த்தினர். இப்படுபாதகச் செயலை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னாள் தலைவர் எம்.சி. சுப்பிரமணியம் போன்ற, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பெற்றிருந்த புத்திஜீவிகள், கொழும்பு உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று கொலைஞனுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தனர். இவ்வழக்கில் கொலைஞன் தண்டனை பெறப் பெரிதும் உதவியது, எனது தந்தையார் ஐ.மாரிமுத்துவின் வாக்குமூலந்தான். இத் தருணத்தில் மற்றொன்றையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் முற்பகுதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பிரவேசத்துக்காக, கே.டானியல், எஸ்.ரி நாகரத்தினம் ஆகியோர் முற்போக்குச் சிந்தனையுடைய, கணிசமான யாழ்ப்பாணத்தாரினதும் உற்சாகமான ஒத்துழைப்போடு, தீண்டாமை ஒழிப்புக்கான புரட்சிகர வெகுஜன இயக்கம் நடத்திய போராட்டத்தில் வெற்றி கண்டதுக்கும் இந்த வில்லூன்றி மயானக் கொலை வழக்கே அடியெடுத்துக் கொடத்ததென்பதை எவருமே மறுக்கமுடியாது! இந்த இரண்டு வழக்குகளிலும், ஆறறிவு படைத்த மனிதர் செய்யாததை, சட்டம் செய்து, பஞ்சப்பட்ட அடிமட்டத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியது. இந்த வகையில் இயக்கங்கனளில் சட்டம் இருட்டறையாக இருக்கவில்லை! தந்தையார் சுயமரியாதைக்காரர். எமது சூழலில் வாழ்ந்த ஏனையோர் உயர் சாதிக்குக் கொடுத்த மரியாதையை அவர் என்றுமே கொடுக்கவில்லை. இத்தகைய அவரது சாதி வெறியர்களுக்கு எதிரான போக்குகளாலும், வழக்கில் பஞ்சமர்கள் பக்கத்தில் நின்றதாலும் எமது குடும்பம் பழிவாங்கப்பட்டது. கொட்டடியில் மிகவும் பிரபலமாக இருந்த காணிச் சுவாந்தவரொருவரின் காணிக்குள் வசித்த எம் குடும்பத்தைக் குறுங்கால அறிவித்தலில் காணிக்காரர் வெளியேற்றினார். குடிபெயர்ந்தோம். சொந்தத் தொழிலைத் தந்தையார் இழந்தார். குந்தியிருக்கச் குடிநிலமற்றிருந்த எமக்குக் குடியமரத் தனது காணித்துண்டைத் தந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான்! குடும்ப சீவியத்தை ஓட்டத் தந்தையார் எமது கிராமத்துக்கு, அயல் கிராமமாகவிருந்த முஸ்லிம் பகுதிக்குள் சென்று மாற்றுத் தொழிலொன்றைச் செய்தார். தாயாரும் குடும்பத்துக்காகத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டார். இந்நிகழ்வு என் மனதில் விதையாகி விளைந்தது....

எனது சமூக நோக்கு விசாலிப்பில் எனது குடும்பத்தின் பங்களிப்பு காத்திரமானது. தமையனார் மா. கந்;தசாமி தீவிர வாசகர். பத்திரிகைகள், சஞ்சிகைள் வாங்களி வீட்டுக்குக் கொண்டு வருவார். சோஷசலிச நாடுகளின் பிரசுரங்களும் இதில் அடங்கும். அப்துற் ரஹீமின் ஷமனிதப் புனிதன் ஆப்பிர லிங்கன்| என்ற நூலும் இவ்வழியில் கிடைத்தது. மலிவுப் பதிப்பு நூல்களும் கொண்டு வரப்பட்டது. விளங்கியதோ இல்லையோ எனது பாடநூல்களோடு அந்த இளம்பராயத்தில் இவற்றையும் வாசிப்பேன். இந்த அத்திவாரந்தான், பின் நாட்களில் நான் நூல்களைத் தேடிவாசித்து எனக்கானதொரு செல்நெறியை வகுத்துக்கொள்ள ஆதாரமாகவிருந்தது....

பின் தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் எமது பகுதிக்கு அடிக்கடி வருகை தரும் பிரமுகராக, அன்று தோழர் மு. கார்த்திகேசன்தான், இருந்ததை நான் உணர்;நதேன். எவ்விதமான பாகுபாடும் காட்டாது, எமது வீடுகளுக்குள் வந்து, எம்மோடிருந்து, தான் வரித்துக் கொண்ட பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி, அவர் காலத்தைக் கணக்கிடாது பேசுவது எனக்கு அதிசயமாக இருந்தது. ஏனைய தனிப்பெருந் தலைவர்கள் இதற்குப் பெரிதும் விதிவிலக்காக இருந்தனர். தோழர் மு. கார்த்திகேசனின் போக்கு என்னோடு ஒட்டிக் கொண்டு, எனக்குள்ளுமொரு பகுத்தறிவாளன், முற்போக்குவாதியை உருவாக்கியதென்றால் மிகையாகாது. பஞ்சமர் இலக்கிய முன்னோடி அமரர் கே.டானியல், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, வி.பொன்னம்பலம், இளங்கீரன் ஆகியோரது அன்றைய மேடைப் பேச்சுகளும் சாதீயத்தின் விஷப் பற்களை எனக்குத் தெரியப்படுத்தி, அதற்கெதிரானதொரு போராளியாக நான் உருவாக உதவியிருக்கின்றனவென்பதை நான் இத்தருணத்தில் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

             சமூக மாற்ற உலைக்களமாக இருந்த, ஐம்பது எழுபதுகளில், அவற்றுடனான உங்களது ஊடாட்டங்கள் எத்தகையவையாக இருந்தன?

ஐம்பதுகளில் நான் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி மாணவன். அறுபதுகளில் உத்தியோகத்துக்காகக் கொழும்பு வந்தேன். எழுபதுகளிலும் வாழ்க்கை கொழும்பில்தான் தொடர்ந்தது. சமூக மாற்ற நடவடிக்கைகளில், எனது ஊடாட்டம் எழுத்து, வாசிப்பு மட்டங்களில் தான் இருந்ததென்பதை மறைக்கமுடியாது. எனது ஷதழும்பு| நாவல் முக்கியமானது. சாதீயம் இன அழிப்புக்கு இட்டுச் செல்லுமென்பதை, சாதீய வெறியர்களுக்குப் புகட்டியுள்ளேன். பேரினவாதிகள் தமிழினத்தை அழிப்பதாகக் கூச்சலிடுகின்றோம். ஆனால் நாமே அதற்குத் தூண்டுதலாக இருப்பதை உணர்வதில்லை. ஷதழும்பு!| இதைத் தான் உள்ளீடாக கொண்டுள்ளது.

தனதெழுத்தூழியத்தில் அதி உச்சமாக சாதீயத்தை கையாண்டவர் அமரர் கே.டானியல். யாழ்ப்பாணத்துச் சாதீயவாதத்தை மிகவும்மூர்க்கமாகத் தாக்கினார். ஆனால் இப்போக்கிலிருந்து விலகி, சற்றுச் சமரசமாக, முற்போக்கு உயர்சாதித் தோழரையும் அனுசரித்து ஷநமக்கும் விடியுமா?| என்ற நாவலைப் படைத்தேன். இதில் முக்கிய பாத்திரமான சாதி வேளாளன் கோபாலன், தனது சமூகத்தையும் பொருட்படுத்தாது சீவல் தொழிலைச் செய்கிறான். இந்நாவல் போட்டிக்கு விடப்பட்ட போது பரிசொன்றையும் பெற்றது. சாதீயப் போராட்டத்துக் அநுசரணையான சிறுகதைகளை எழுதியுள்ளேன். அதை முன்னெடுத்தவர்கள் பக்கம் சார்ந்து நின்றுள்ளேன். சமூக மாற்றத்தை வற்புறுத்திய தேசாபிமானி, மல்லிகை, செம்பதாகை, சரஸ்வதி போன்ற ஏடுகளின் தொடர் வாசகனாக இருந்துள்ளேன். கே.டானியலின் நாவல்கள், செ.கணேசலிங்கனின் ஷநீண்ட பயணம்| என்பவற்றை வாசித்து நண்பர்களோடு பகிர்ந்துள்ளேன். எனது கொழும்பு வருகை நிகழாதிருந்தால், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து, தீண்டாமை எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தின் ஊடாகச் சமூக மாற்றத்துக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்திருக்க முடியும்.

 
             ஐம்பதுகள், எழுபதுகளில் வரலாறு படைத்த சமூக மாற்றச் செல்நெறி மீது தற்போது கவனம் கொள்ள வேண்டிய விமர்சனங்களாக, நீங்கள் எவற்றைக் காண்கிறீர்கள்?
இக்கால கட்டத்தில் சமூக மாற்ற உலைக்களமாக இருந்தது வட இலங்கைதான். யாழ் மக்கள் கண்டறியாத வினைப்பாடுகள் சாதிவெறியர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டன. ஆண்டான், அடிமை முறைமை கட்டுடைப்பெடுத்தது. நாயிலும் கடையரென மிதிப்பட்டு வாழ்ந்த மக்கள் கொதித்தெழுந்தனர். இம்மக்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே உன்னதமான இலக்கியவாதிகள் சிலிர்த்தனர். சாதீயத்துக்கு எதிரான இலக்கியங்கள் பொலிந்தன. இதில் சுபைர் இளங்கீரனின் பங்களிப்பும் மிகவும் தாக்கமாக இருந்தது. இப்பேரெழுச்சிக்குக் கணிசமான இடது சாதீய உயர் சாதியினரும் தமது உழைப்பைத் தந்தனரென்பதை மறந்து விடக்கூடாது.
இன்றைய நிலையில் இந்த எழுச்சியை எடை போடும்போது, இதே போராளிகளன் இன, மொழி சார்ந்த கரிசனையையும் காட்டியிருந்திருக்க வேண்டுமென்பதே அனுபவத்தில் நான் கண்ட உண்மை. ஒரே தேசியம் என்ற ஒருத்துவம் தமிழன் சிந்தனையில் இருந்ததே தவிர, இன்றும் ஆதிக்க சித்தியைப் பெற்ற பெரும்பான்மை இனத்திடம் இல்லை! அன்றிதைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜன இயக்கம் போன்ற பஞ்மசாதியினரின், அமைப்புகள் உணர்ந்திருக்க வேண்டும்! இருந்தும் தமிழீழப் போராட்டத்தில், உயிரிழந்த போராளிகளில் சரிக்குச் சரி தாழ்த்தப்பட்ட தமிழர்கள் இருந்துள்ளதை மறைக்க முடியாது! இதை இப்போ சில இடதுசாரிய அமைப்புகளும் உணர்ந்துள்ளதை அவைகளது தற்போதைய வினைப்பாடுகள் அத்தாட்சிப்படுத்துகின்றன. ஆடுவதுக்கு ஒரு ஆடுகளம் தேவை! பாகுபாடுகளற்ற ஒரு ஆடுகளத்தை அமைத்துத் தம்முள்ளிருக்கும் பேதங்களைத் துறந்து அனைத்து ஈழத் தமிழரும் செந்தமிழராவது எதிர்காலத்தமிழ் இன சுபீட்சத்துக்கு வழிகோலும். தாம் பிறந்த குடும்பத்தையிட்டும் ஒருபக்க பெருமிதமம் கொள்ளலாம் எனப் பொது மேடைகளில் பிரமுகர்கள் பிரவாகிப்பதை நிறுத்தவேண்டும். இதற்குத் தாழ்த்தப்பட்ட தமிழரும் விதிவிலக்காக முடியாது! இது எனக்கு இலங்கை மண் கற்றுத் தந்த பாடமே தவிர, எந்தவொரு நிர்ப்பந்தத்தாலும் இதைச் சொல்லவில்லை.

             இன முரண்பாடு முனைப்புற்று, யுத்த கட்டத்தில் மூழ்கடிகப்பட்டிருந்த காலமும், பின் யுத்தச் சூழலும் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்?

இன முரண்பாடுமுனைப்புற்றிருந்த காலத்தில், ஜனநாயக பாரம்பரியத்தைச் சங்கை செய்து, ஈழத் தமிழனைத் தட்டிக் கொடுத்த பிற நாடுகள் யுத்தக் கட்டத்தில் தமது சுய இலாபங்களுக்காகக் கைவிட்டன. யுத்த சூழலில் தம்மையொத்த ஆதிக்க சக்திகளின் வழி நின்று அதாவது வர்க்கச் சார்பு நிலையெடுத்து ஈழத் தமிழனை அழிப்பதற்கு உதவின. இதன் மூலமாக ஜனநாயகத்தை, மனிதநேயத்தை, நியாயத்தைக் கை கழுவின. இச்சூழலில் தன் கையே தனக்குதவி என்ற பாடத்தை ஈழத் தமிழன் கற்றுக் கொண்டான்!
             எமது சமூக இருப்பும் இயங்காற்றலும் ஆரோக்கியமாக முன் செய்வாதாகக் கருதுகிறீர்களா?

சமூக இருப்பும் இயங்காற்றலும் ஆரோக்கியமாக முன்னெடுக்கப்படுவதாக எப்படிச் செல்ல முடியும்? யுத்தப் புயல் கடந்த பூமியில் எம் மக்கள் அவல வாழ்வு வாழ்கின்றனர். சொந்தங்களை இழந்த துயர் அவர்களது துடைக்க வேண்டிய அரசு எமது வெப்பிசாரத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. எமது தமிழ்ச் சமூகம் இன்னமும், இந்த அவலங்களைக் கண்ட பின்னும் அதன் தீண்டாமை, விதவைகள் மறுமணம் என்பவற்றில் மறுவாசிப்புச் செய்வதாக இல்லை. அந்த வகையில் எமது சமூக இருப்பும் இயங்காற்றலும் துயர் பகிர்லுமே கழிகின்றது.

             எமது சமூக ஊடாட்டம் சமகாலப் படைப்புகளோடு எவ்வாறு இணைவு பெற்றிருக்கிறது?
ஈழத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கம் வீறுகொண்டெழுந்த பின் படைப்புகள் சமூக ஊடாட்டங்களின் கொள்கலனாகின. வாழ்வின் கண்ணாடியாகின. அதன் பின் யுத்த காலத்திலும் அதன் நீட்சி காணப்பட்டது. ஆனால் இவைகளோடு எமது சமூகத்தின் ஊட்டாத்தைக் கணித்துச் சொல்வதாகில், மக்கள் பெரிதாக இலைகளைக் கண்டு கொள்வதில்லையென்றே சொல்ல வேண்டும்! ஏனெனில், இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நூல் வெளியீடுகளில் 200 பிரதிகள் விற்கப்பட்டால் அது பெருஞ்சாதனையெனப் பிரபல இலக்கியவாதிகள் கூறுவதைக் கேட்டக முடிகிறது!
             கடந்து வந்த எமது வரலாற்று ஓட்டத்தை ஒரு படைப்பாளியாகவும், ஊடகவியலாளராகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஷஎமது| என்ற விழித்தலுக்கு நான் இலங்கைத் தமிழனென்றே அர்த்தங் கொள்கிறேன். எம் சகோதர சிங்கள அரசியலாளர்கள் போல், தமிழ் அரசியல் தத்துவாச்சார முன்னோடிகள், ஈழத் தமிழ்ப் பேசும் மக்களது எதிர்கால இருப்பைத் தீர்க்க தரிசனத்தோடு பார்க்கத் தவறிவிட்டனர். வெறும் அரசியல் செய்தார்களே தவிர இராஜதந்திரிகளாக இருக்கவில்லை! மலையகத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அரவணைக்காத இமாலயத் தவறை இப்போ உணர்கிறோம். எனவே பொல்லுக் கொடுத்துத் தான் இப்போ அடி வாங்குகிறோம்! மக்கள் இலக்கிய படைப்பாளியென்ற வகையில் கடந்து வந்த எமது வரலாற்று ஓட்டம் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகவே படுகிறது. மாற்றம் என்றதைத் தவிர மற்றதெல்லாம் மாறுமென்பதே கோட்பாடு. அது இன்னமும் ஈழத் தமிழரின் அரசியல் சிந்தனையில் தலைகாட்டவில்லை!

             புலம் பெயர்ந்த ஈழத் தமிழரின் தாயகக் கரிசனை, எதிர்காலத்தில் அதன் இருப்பு என்பவை பற்றி.....

ஈழத்திலிருந்து பெயர்ந்த, அந்த மூத்த பரம்பரை இன்னமும் அதன் தேகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் தாயகத் துகள்களைக் கழுவி விடாதது கண்டு மகிழ்கிறேன்.... ஆனால், இவர்களது வாரிசுகள் அத்தகைய சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. தாங்கள் பிறந்த மண்ணிலேயே இந்த வாரிசுகள் ஷசெற்றி|லாக எத்தனிக்கின்றனர்! இவ்வினைப்பாடு எமது சிங்களத் தோழர்களும் தங்களோடு கலப்பு மணஞ் செய்து இலங்கையில் வாழ முடியாதா? என்ற கேள்வியை எழுப்பாதா?

             இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளீர்கள். உங்களது படைப்பாக்க அநுபவம் குறித்து அறியலாமா.....

1962இல் இருந்து எனது சிறுகதைகள், நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதல் சிறுகதை ஷஏமாற்றம்|. மக்களிடமிருந்து பெற்றதை மக்களுக்குக் கொடுப்பதையே படைப்பாக்குகிறேன். எனது மேற்படி முதல் சிறுகதை, யாழ்ப்பாணத்தார் அன்று கள்ளத் தோணிகளென முத்திரை குத்திய ஒரு இந்தியத் தமிழ்த் தொழிலாளி பற்றியது. அக்காலத்தில் நான் தினசரி உணவருந்தும் கொழும்பு உணவகமொன்றில் சிப்பந்தியாகக் கடமை புரியும் ஒரு இளைஞன், ஷதுரை எங்கள் பிரச்சினையை நீங்கள் என்னமா எழுதியிருக்கிறீங்க....| என வாழை இலையில் வைத்த இடியப்பத்தின் மேல் சாம்பாறை ஊற்றியபடி சொன்னான். பாராட்டினான். இதை எனது முதல் சிறுகதைக்குக் கிடைத்த நற்சான்றிதழாக வரவேற்றுப் பேருவகை கொண்டேன். யாருக்காக எழுதினேனோ அவர்களிடமது சென்றிருந்ததை உணர்ந்தேன். அந்தப் பலத்தோடு தான் இன்றும் புனைவிலக்கியத்தைத் தொடர்கிறேன். ஷஇப்படியும் ஒருவன்|, ஷஎதிர்காற்று| என இதுவரை இரு சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. இதற்காக புனைவிலக்கிய விடயத்தில் நிபுணத்துவம் கொண்ட அறிஞர்கள், மூத்த படைப்பாளிகளை நிராகரிக்கிறேனென்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது! அவர்களது சிந்தனைப் பரவல்களை புனைவிலக்கியத்தின் செல்நெறியைச் செம்மைப்படுத்துகிறேன். ஆனால் எவரிடமும் பிரிதியைக் காட்டிச் செம்மைப்படுத்தவில்லை.

             படைப்பாளி சமூகம் என்ற இடைத் தொடர்பில், விமர்சகர்களின் பாத்திரம், பங்களிப்பு என்பன எவ்வகையில் அமைய வேண்டுமெனக் கருதுகிறீர்கள்.....

படைப்பாளி சமூகம் என்பவைக்கு மிகவும் நெருக்கமானவனாக விமர்சகன் இருக்க வேண்டும். சொல்லப் போனால் அவனுமொரு படைப்பாளி தான்! வாசிப்பில் மட்டுமே தங்கி படைப்பொன்றின் தாரதர்மியத்தைச் சொன்னால் போதாது. படைப்பாளி ஆராதிக்கும் கருத்தியலை அறிந்திருக்க வேண்டும். படைப்பு நிகழ்களத்தின் வாழ்வியலின் அசைவியக்கத்தைப் புரிந்தவனாகவும் இருக்க வேண்டும். தெரியாததொன்றைப் புனைவிலக்கியமாக்குவது மட்டுமன்றி திறனாய்வு செய்தலும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காது. விமர்சனங்கள் செம்மையான ஓர் இளந்தலை முறையை உருவாக்குவதாக இருக்க வேண்டும். தளிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பவன் விமர்சகன் என்பார்கள். ஒரு சிப்பி கொள்ளும் கணியத்திலானது தளிர்களுக்குப் பாராட்டுப் பன்னீரைத் தெளிக்க வேண்டும். அதே நேரம் மூத்த படைப்பாளிகள் படைப்பிலக்கியத்துறைக்கு ஆற்றிய செம்மையான பணிகளுக்காக அவர்களது படைப்புகளில் காணப்படு;ம தவறுகளைக் கண்டு கொள்ளாது விடவும் கூடாது. ஆனைக்கும் அடி சறுக்குமென்பது அநுபவ வாக்கல்லவா!

             அவையில் குறைவான தலைகளே தெரிகின்றன..... பரவாயில்லை. மா.பா.சி. வந்திருக்கிறார். நிகழ்வின் நடப்புகள் பரவலான சன சமுத்திரத்தைச் சென்றடையும்| எனக் கூறப்படுவதைக் கேட்டிருக்கிறோம். இவ்வகைப் பாராட்டைப் பெறும்படியாக நிகழ்ச்சித் தொகுப்புகள் எழுவதில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ள உங்களுக்கு, இவ்வகையான எழுத்துப் பணிக்கு உங்களை அர்ப்பணிக்கக் காரணிகளாக இருந்தவைகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இலக்கியம், சமூகம் சம்பந்தமான கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எனக்கு அன்றும் இன்றும் பெருவிருப்புண்டு. அறிவுத் தளத்தை விரிவுபடுத்தத்தக்கவைகளாகவும் இவைகள் இருப்பதை அநுபவங்கள் கற்றுத் தந்தன. ஆனால் ஊடகங்கள் இவைக்குத் தக்கமுறையில் பிரசித்தம் கொடுப்பதில்லை. அரசியல், குழுச்சார்ந்த கண்ணோட்டங்களோடு இவைகளைத் தள்ளி வைப்பதை உணர்ந்தேன்.... மாறாகச் சிலவேளைகளில் முன்னணியில் இருக்கும் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலைமறை காயாக இருக்கும் கல்விமான்கள், கலைஞர்களுக்கு இருட்டடிப்புச் செய்வதுமுண்டு. இதெனக்குத் தப்பாகவே பட்டது... தமிழிலக்கியத் துறையோடு சம்பந்தப்பட்டிருப்பதால் பொலிந்து கொண்டிருக்கும் ஈழத்துத் தமிழிலக்கிய நூல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை நன்கறிவேன். அழைப்பிதழில் பெயர் அச்சிட்டு, மேடைக்கு அழைத்து, பிரதம அதிதிமூலமாக நூலை வழங்கினாலும் வெளியீட்டு விழாச் செலவே சேராத துர்ப்பாக்கிய நிலையில் எமது நூல்வெளியீட்டாளர்கள், நூலை வெளியிட்டபின் அந்தரப்படுகின்றனர். கிராம அணில் செய்த பணிக் கணியத்திலாவது இப்புது நூல்களுக்கு எனது பங்குப் பணியைச் செய்யவிழைந்தேன்....

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை மல்லிகைக்காக தொகுத்துத் தரும்படி கேட்டார். அதற்கிணங்க கொழும்புத் தமிழ்சங்க மண்டபத்தில் நிகழ்வுகளின் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போது, ஷதினக்குரல்| பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், ஷஇதைத் தொகுத்து எழுதிய கொப்பியொன்றை எனக்குந் தாரும் பாலா!| எனக் கேட்டார். கொடுத்தேன். மாற்றங்களேதுமின்றிஅ து ஷதினக்குரல்| தினசரியொன்றில் ¾ பக்கத்துக்கும் மேலாக வெளியிடப்பட்டது. கூட்டமொன்றின் குத்து விளக்கேற்றலிலிருந்து நன்றியுரை வரைக்கான சகல நிகழ்வுகளையும் அனைத்தத் தமிழ் பேசும் வாசகரும் இவ்வகையில் விலாவாரியாக அறிய வைக்கும் ஷதினக்குரல்| பத்திரிகைக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் நன்றி கூறவேண்டும்.

ஷஒரு நல்ல படைப்பாளி நாசமாகின்றான்!| என்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளாது நான் இப்பணியைத் தொடருவதுக்கு மேற்கூறியவைகளே ஊக்கமாத்திரையாக உதவுகின்றன.

             இச் செயற்பாடு தொடர்பில் கசப்பான அநுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்! அப்படியேதாவது....

சாய் இதுவரை இல்லை.... நானெல்லாருக்கும் தோழனல்லவா.....

             இப்பணி விரிவாக்கம் பெற என்ன செய்ய வேண்டும்?

இவைகளை ஆவணப்படுத்தினால், எதிர்காலக் கலை இலக்கியத் தேடல்களுக்கு உதவக் கூடும். காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சொன்னார், தனது நூலொன்றின் வெளியீட்டு விழா பற்றி நானெழுதித் ஷதினக்குரல்| இல் வெளியான பத்தியின் ஒரு பகுதியைத் தனது நூலொன்றில் பிரசுரித்திருப்பதாக. இவை ஷநிகழ்ச்சிகளில் கேட்டவை|ப் பத்தியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறதல்லவா! வௌ;வேறு அமைப்புகளின் கூட்ட நிகழ்வுகள் கணிசமாகப் பதிவாக உள்ளன. இவ்வமைப்புகள் கரிசனையெடுத்து நூலாக்கி ஆவணப்படுத்தினால் அவைகளது செயற்பாடுகள் இனிவரும் சந்ததிகளையம் சென்றடையும்.

             இயந்திரமய வாழ்க்கை, அதி நவீனமயப்பட்ட தொடர்பாடல் வசதியால் சுயமான உறவுகளிலிருந்து அந்நியப்படல் என்பவையால், உயிர்ப்பான வாழ்வைத் தொலைத்து வரும், இன்றைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புத்திமதி சொல்லி வாழ்வை நெறிப்படுத்துவதுக்கு எனக்கு உரிய தகுதி உண்டா என்பதில் எனக்கு சமிசியமுள்ளது! இன்றைய தலைமுறையின் தலையில் பெரிய சுமை ஏற்பட்டுள்ளது. புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல்ல என்பது பாரம்பரியமான செல்நெறி. மாற்றமென்ற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறத் தக்கவை என்பதும் மனித அறிவின் முதிர்ச்சி தந்த சிந்தனை வெளிப்பாடு. எனவே எந்தவொரு இன்றைய மனிதனும் உலகத்தோடு ஒத்தோடத்தான் வேண்டும்! ஆனால் உயிர்ப்பான வாழ்வைத் தொலைத்தல், உறவுகளிலிருந்து அந்நியப்படல் சமுதாயப்பாட்டுக்கு உதவாது. இன்று ஈழத் தமிழ் மண்ணில் இன அடையாளங்கள் தேடி அழிக்கப்படுகின்றன. இந்த அனர்த்தத்திலிருந்து தன் மண்ணை மீட்டெடுக்க இன்றைய தலைமுறை அதற்கான நேரத்தை ஒதுக்கிச் செயலாற்ற வேண்டும். அனைத்துத் தமிழனும் ஒன்றுபட்டு உழைக்கத் தக்க புதிய பண்பாட்டுத் தளத்தை ஏற்படுத்துவதில் ஊக்கங் காட்ட வேண்டும். அந்நிய நாடு சென்று அங்கும் அந்நியராக வாழும் மனப்போக்கை மறுவாசிப்புச் செய்து, எம் மண்ணில் நாம் வாழ வேண்டும். அதை ஆழவும் வேண்டுமென்பதில் ஊக்கம் கொள்ள வேண்டும்.
             புதிய பண்பாட்டுத் தளம் அதன் வெளியீடான ஷபுதியதளம்| சஞ்சிகை என்பன குறித்து...

புதிய தலைமுறைக்கு நான் சொன்னவைகளை அடியொற்றியதாகப் புதிய பண்பாட்டுத்தளம் அமைய வேண்டுமென விரும்புகிறேன். எந்தவொரு வெளிநாட்டின் அரசியல், கலாசார, பண்பாட்டு நகலாக அது அமையக் கூடாது. இதுவரை கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, தமிழ் அரசியல், வாழ்க்கை, இலக்கியம் என்பவற்றுக்கான செம்மையானதொரு தளத்தை அமைப்பதில் மக்களுக்குத் தெளி நிலையை ஏற்படுத்த வேண்டும். பழைய தவறுகளை மீட்டிப் பார்த்துத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதில் காலத்தை வீணடிக்கக்கூடாது.
ஷபுதிய தளம்| சஞ்சிகையின் முதலிதழில் எனது நேர்காணலை வெளியிடமுன் வந்த கலாநிதி ந. ரவீந்திரன் உட்பட்ட ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன், இன்றைய இலக்கியச் சிற்றிதழ்கள், அவைகளது முன்னோடிச் சிற்றிதழ்கள் போலல்லாது பத்திரிகை எழுத்தாளர்களையே தயார்ப்படுத்துகின்றனவென அண்மையில் கருத்தொன்றை முன்வைத்திருந்தார். எனவே, புதிய தளம்!| சஞ்சிகை மக்கள் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க வேண்டும். இன்றைய தமிழனின் அவல வாழ்வை யதார்த்தமாக வெளிப்படுத்தும் ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும். ஒடுக்கப்படும் ஏழை, தொழிலாள மக்களின் மறைக்கப்படும். பிரச்சினைகளை வாசகருக்குக் கொடுக்க வேண்டும். விமர்சனம், திறனாய்வு என்பவற்றுக்குப் புதிய பரிமாணத்தை ஏற்படுத்த வேண்டும். இச்சஞ்சிகையை நகர எல்லைக்குள் மட்டுப்படுத்தாது கிராமங்களுக்குள் வாசகர் வட்டத்தைப் பெருக்க வேண்டும். இணையத்திலும் புதிய தளம்| வாசிக்கும் வசதியைச் செய்து கொடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment