Monday, March 17, 2014

இதழ் -2

'புதியதளம்' இதழ் -2


March 16, 2014 at 1:38pm

 'என்ன இருந்தாலும் சிங்கள மக்களை நம்பமுடியாது', இந்த முடிவுக்கு இப்போ வந்திருப்பது ஆளும் தரப்பு. புலிகளை அழித்து நாட்டுக்கு இரண்டாவது சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கிறோம் என்றவர்கள், அதை வைத்தே காலா காலத்துக்கும் தேர்தல்களில் வென்றுவிடுவோம் என்றிருந்தார்கள். இப்போசிறிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலே தான் ஜெனீவாவில் குற்ற விசாரணை மேகம் சூழ்ந்து கோடை இடியாக அச்சுறுத்தும் மார்ச் மாத இறுதியில் மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல்களை நடாத்த முடிவு செய்திருக்கிறார்கள். வரி உயர்வுகளும் விலை ஏற்றங்களும் அரசின் கட்டுப்பாட்டையும் மீறி நடந்துவிடுவதாக எத்தகைய நாடகங்கள் ஆடினும், மக்கள் அறிவார்கள் அரசின் ஆடம்பர மோகமும் ஊழல் பெருச்சாளிகளின் கொட்டமும் தமது வாழ்வாதாரங்களை தொடர்ந்து நாசமாக்கி வருகிறது என்பதை. யுத்தவெற்றி என்ற நிலாவைக் காட்டி வயிற்றில் அடிப்பதை எத்தனை நாட்களுக்கு மறைக்க இயலும்? தம்மை ஓட்டாண்டிகளாக ஆக்கிக்கொண்டே அரச தரப்பினர் ஊதிப்பருத்து மில்லியனராகி வருகின்றனர் என்பதை மக்கள் அறியாமல் இல்லை. பள பளக்கும் வீதிகளும் சவாரிக் கார்களும் தங்களது உயிர் மூச்சை வற்றடித்து ராசபோகம் அனுபவிக்கும் இளவரசர்கள் கும்மாளம் அடிப்பதற்கு போடப்பட்டனவே அல்லாமல் தமக்கானது அல்ல என்பதை எவரும் சொல்லி அறிய அவசியமில்லை. பல வீதிகளில் செல்லக் கொடுத்தாக வேண்டிய பணத்துக்கு வழி இல்லாமல் நேரத்தை விழுங்கும் மாமூல் பாதைகளிலேயே சென்றவாறுதான் பலரதும் வாழ்க்கைத் தண்டவாளம். எத்தனையோ நாட்கள் உயர் மத்தியதர வர்க்கத்தினர்க்கும் கூட வீதி உரிமை மறுக்கப்பட்டு ராச குமாரர்கள் கொண்டாட வீதிகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றை மறந்து அரசு தரப்புக்கு வாக்கு சேர்ப்பதற்கு உதவப்போவது நம்ம ஜெனீவா! தமிழ் இனவாதிகள் ஜெனீவாவுக்கு காவடி தூக்கும் போது 'புலி வருகுது, புலி வருகுது' என்று சொல்லியே வெல்ல முடியும் என்பதால் மார்ச்சில் தேர்தல். தமிழ்ப் பேரினவாதம் தமிழ் நாட்டையும் துணைக்கு அழைக்கும்போது வந்தமைகிறது என்பதால் சாதாரண சிங்கள மக்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளாமல் அரச ஏமாற்றுக்களுக்கு உடன்பட்டுப் போகிறார்கள். இடதுசாரி உணர்வோடு உழைக்கும் சிங்கள மக்கள் வாழ்வாதாரத்தை வென்றெடுக்கப் போராடுவதில் பெயர் பெற்றவர்கள். இருதரப்பு இனவாதங்களும், புலிவந்துவிடும் என்ற அச்சமுமே இன்று அவர்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டிருக்க வகைசெய்துள்ளன. சிங்கள மக்களின் சுதந்திர உணர்வும், போர்க்குணமும் காரணமாக இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கும் செயற்திட்டத்தைக் கொடூரமான வழியில் நிறைவேற்ற ஆற்றுப்படுத்தியிருந்தது. தமிழ் இயக்கங்களை உள்வாங்கி, அவை ஒன்றுபட்டுப் போராட இடம் தராமல், தனது நோக்கத்துக்கு இலங்கையைப் பணியவைக்க முதல் பதினைந்து வருட யுத்தம். ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தம் சாத்தியமான போதிலும் சிங்கள மக்கள் அதனை எதிர்த்தனர். தனது நேரடி ஆணைக்குள் அடங்காத புலிகள் தலைமையை எடுத்தபோதிலும், பின்புலத்தில் தனது இயங்காற்றலை வடிவப்படுத்திய வகையில் அடுத்த பதினைந்து வருட யுத்தத்தில் 16 ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கை அடிமைகொள்ளப்பட்டுள்ளது. இப்போதும் இனப்பிரச்சனையை முழுதாகத் தீர்க்க நிர்ப்பந்திக்கவில்லை; ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தில் நாலாவது விவகாரமாகவே அது இருந்ததைப் போலவே இப்போதும் இடைவெளி விடப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டு இராணுவத்தை எதிர் காலத்தில் கொண்டுவரும்போது வெறும் 16க்கு மேற்பட்ட ஒப்பந்தம் போதாது, எங்களுக்காக வருவார்களாம்! இவ்வாறாக எம்மை ஏய்த்து சவாரி செய்து, சுரண்டிக் கொழுப்போருக்கான போடுதடியாகவே எப்போதும் இருக்கப்போகிறோமா? முப்பதுவருட யுத்தத்தில் தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மை ஆகுதியாக்கியவர்கள் பலநூறு பேர். ஆயினும் அது எமக்கான வரலாறு படைக்கும் செயற்திட்டமாக இருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக்கு எம்மை அறியாமல் கருவியாகிய செயற்பாடு. இப்போதும் ஜெனீவாவில் மினைக்கெட்டு ஆக்கிரமிப்பாளருக்கு மட்டுமல்லாமல் இலங்கை மக்களை ஏமாற்றும் அரசுக்கும் உதவப்போகிறோம். அக்டோபர் 21 (1966) எழுச்சி மார்க்கம் என்கிற வரலாறு படைத்த அனுபவம் எமக்கு உண்டு. மிகப்பிரமாண்டமான இனத்தேசிய விடுதலைப் போராட்ட எதிர் அனுபவங்களுடன் அதனையும் கற்று, புதிய இரத்தத்தை உற்பவிப்போமானால் எமது மஹாகவி சொன்னது போல மீண்டும் தொடங்கும் மிடுக்கு வாலாயமாகும். ஆம், நாமும் நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்!! இனியேனும் எமக்கான வரலாறு படைக்க அவசியமான மார்க்கத்தை வகுக்க முயல்வோம். புதியதளம் அதற்கான உரையாடலுக்குக் களம் அமைக்கும்.
-ஆசிரியர் குழு.

No comments:

Post a Comment