Sunday, April 13, 2014

சிறுகதை- மல்லியப்புசந்தி திலகர்

வலி 

 -
 


கனம்,
அன்புள்ள பாப்பாவுங்க அப்பா, பெரிய பாப்பா, சின்ன பாப்பா, மகன் பிரசாந் அனைவருக்கும். நான் நல்ல சுகம். நீங்கள் எல்லோரும் நல்ல சுகமா. நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விடயம் அறிந்தேன். பெரிய பாப்பாவுக்கு கால் சுகம் எப்படி. கவனமா பார்த்துக்கங்க. நான் முதல் கடிதத்தில எழுதுன மாதிரி வேலை செய்யிற இடம் அவ்வளவு நல்லம் இல்லனு நினைக்கிறேன். வீட்டுகார பெரிய ஆளு ரொம்ப பேச மாட்டது. அங்கிட்டு இங்கிட்டுப் போகும் போது பார்த்துட்டு பார்த்துட்டு மட்டும் போவது. ஆனால் மூத்த மகன்காரன்தான் போறப்ப வாறப்ப எல்லாம் ஏதாவது சொல்லுவான். எனக்கு ஒன்னும் வெளங்காது.
ஒருநா வீட்டுக்கார நோனா ஏசுனாங்க. எனக்கு ஒன்னும விளங்கல.. தும்புக்கட்ட கம்பை எடுத்து மண்டையில அடிச்சிட்டா. வலி தாங்க ஏலாம அடிக்காதீங்கனு கையெடுத்து கும்பிட்டேன். அதுக்கு பெறகுதான் ரொம்ப ஏசி கூடவே அடிச்சிப்புட்டா. அப்புறந்தான் எனக்கு விசயமே விளங்கினுச்சி. நான் முக்காடு போடலை. நான் முஸ்லிமு இல்லனு அவுங்களுக்கு தெரிஞ்சுவிட்டது. நான் முக்காடு போடாம இருந்திருக்கேன். அதுனாலதான் கோவம்.  நம்ம வீட்டு சீலைய இறுக்கமா இடுப்புல சுத்திகிட்டு வேலை செஞ்ச எனக்கு இங்க முக்காட போட்டுக்கிட்டு முழுசா கவுன போட்டுகிட்டு ஓடியாடி வேல செய்ய முடியல. சரி அதவுடுங்க. ஏன்னோட தலை எழுத்து. அத நெனச்சி கவல படாதீங்க. எல்லா ஒங்களுக்காகத்ததான் கஷ்டப்படுறேன். இப்ப அரபி கொஞ்சம் வெளங்குது. மூனு பேரும் நல்லா படிங்க.
பெரிய பாப்பாவுக்கு தோட்டத்து ஆஸ்பத்திரி மருந்துக்கு சொகமாகலைனா பிரவட்ல மருந்து கட்டி ஊசி போடுங்க. கறல் பிடிச்ச ஆணி குத்துனா வெசமாகிறபோவுது.
தம்பிய தவறாம பள்ளிக்குடம் அனுப்பிருங்க. நான் வந்த பெறகு அழுதுகிட்டே இருந்தானு சென்னீங்களே. இப்பவும் அப்பிடியா.. எனக்கு அவன் நாவகமேதான். படிப்புதான் முக்கியம். சின்ன பாப்பாவும் நல்லா படிகக்கனும். இந்த வருசம் கவர்மண்ட் டெஸ்ட் வருதுதானே. நீங்கள்ளாம் படிச்சு நல்ல வேலை செய்யனும் எங்கமாதிரி கச்;டப்படவேணாம். உங்கள படிக்க வைக்கத்தான் நான் இப்பிடி தண்ணியில்லாத ஊருக்கெல்லாம் வந்திருக்கேன். சவுதில ஏங்க பார்த்தாலும் மணலாதான் கெடக்குது. பச்ச தேயில மலைய பார்த்துட்டு கெடந்த எனக்கு  இங்கு பச்ச கலரே கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. வீட்டுக்குள்ளேயே கெடக்குறேன். பெரிய பாப்பா கால் நனையாம பார்த்துக்கொள்ளவும். கால் நனைஞ்சு சலம் வச்சிட்டா பெரிய வருத்தமா போயிரும்.
பாப்பாவுங்க அப்பா ரொம்ப குடிக்காதீங்க. நல்லனா பெருனாளுக்கு கொஞ்சம் குடிச்சா பரவால்ல. எந்த நாளும் குடிக்காதீங்க. ஒங்கள நம்பிதான் பிள்ளைகள உட்டுட்டு வந்திருக்கேன். அடுத்த மாசம் காசு அனுப்பி வைக்கிறேன். பெரியபாப்பாவையும் கூட்டிக்கிட்டு போயிட்டு பிரவட்ல மருந்து கட்டுங்க. கொமரு புள்ள. நாளைக்கு ஒன்னுக்காட்டி ஒன்னு ஆகிரிச்சுனா. அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு. கவனமா பாருங்க.
தம்பி எப்பிடியிருக்கான். ஏந்நேரமும் கிரிக்கெட் அடிக்க விடாதீங்க. பாப்பாவுங்க அப்பா அவன அடிக்காதீங்க. சின்ன பாப்பா டிவி நாடகம் பார்க்காம படிக்கவும். டெஸ்ட் முடிஞ்சதும் வீட்லேருந்து நாடகம் பார்த்துக்கலாம்.
அடுத்த வீட்டு சின்னபுள்ள அபி எப்பிடியிருக்குது. நான் வேலை செய்யிற வீட்ல ஒரு சின்ன பாப்பா இருக்கு. எனக்கு அபி நெனவேதான் வரும். மூனு வயசு இருக்கும். நாடகத்துல வாற அபி மாதிரியே இந்தபுள்ளயும் அழகா இருக்கும். அத நான்தான் பார்த்துக்குவேன். அது வீட்ல அஞ்சாவது புள்ள. மத்தவுங்க எல்லாம் பெரிய புள்ளக. எல்லாருட்டு உடுப்பும் கழுவும்போது எனக்கு ஒங்க எல்லா நாபகம்தான் வரும். டொமி எப்பிடியிருக்கு. இங்க வீட்ல நாய் எல்லாம் வளக்க மாட்டாங்க.
பெரிய பாப்பாதான் பொறுப்பா எல்லாத்தையும் பார்த்துக்கனும். கால கவனமா பார்த்துக் கொள்ளவும்.
எல்லாரையும் கேட்டேனு சொல்லவும்..
விரைவில் பதில் போடவும்.
இப்படிக்கு
அன்புள்ள
முத்துலெச்சுமி

                      அம்மாவிடம் இருந்து வந்திருந்த கடிதத்தை பார்த்த கமலாவுக்கு ஒரு பக்கம் கவலை. அடிக்கொரு தடவை தன் காலில் ஆணி குத்திய காயத்தைப்;பற்றியே  கவலைப்பட்டு  எழுதியிருக்கும் அம்மா மேல் இரக்கமாக வந்;தது. கண்கலங்கினாள்.   மறுபக்கம் கனவும் வந்தது. அம்மா பணம் அனுப்பப் போகிறார். ஹட்டன் போனால்  காலுக்கும் மருந்துக்கட்டிக்கொண்டு தனக்கு தேவையான மேக்கப் சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற கனவுதான். வீட்டில் எல்லோருக்கும் கடிதத்தை வாசித்துக்காட்டினாள்.
முத்துலெட்சுமிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் கமலாதேவி. சாதாரண தரம் வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். கணிதத்தில் கோட்டைவிட்டதால் உயர்தரம் படிக்க முடியவில்லை. இப்போது இருக்கிற படிப்பை வைத்துக்கொண்டு ஏதாவது வேலை தேடுவது அவளது வேலை. லட்சணமானவளும் கூட. தன்னை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவாள்.
இளையவள் தேவிகா. இந்த முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகிறாள். கடைசி பிள்ளை பிரசாந் எட்டாம் வகுப்பு படிக்கிறான். கணவன் மணிவேலு தோட்டத் தொழிலாளி.
மூன்று பிள்ளைகளையும்; படிக்க வைத்து குடும்பம் நடாத்துவது என்பது தோட்டத்து சம்பளத்தில் குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஓவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யும் போதும் ஏதாவது கூடும் என எதிர்பார்த்தாலும் கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சுதான் கூடுமே தவிர சம்பளம் கூடாது. தேயிலைத் தோட்டங்களும் முன்பு போல் பராமரிக்கப்படுவதில்லை. இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மக்களின் எதிர்காலம் மிகுந்த கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. அவர்கள் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. அவரவர் வசதிக்கும் திறமைக்கும் ஏற்றாற்;போல வேறு வேறு தொழில்களை தேடிக்கொண்டு செல்கிறார்கள். வீட்டுச் சுமை அழுத்தத்தைக் கொடுக்க பெண்களே முதலில் அடுத்தத் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் அதில் கொழும்பு பங்களாக்களில் வீட்டு வேலைக்குப் போவதும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதும் அதிகமாக நடக்கிறது. இந்த அவலம் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு இட்டுச்செல்கிறது.
இந்த அவலத்தைப் பற்றியெல்லாம் யோசிக்க முத்துலெட்சுமிக்கு அறிவுபோதாது.  ஏட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு தோட்டத்தில் பேர் பதிந்து வேலைக்கு சேர்ந்தவள்;. மணிவேலுவுக்கு வாக்கப்பட்டு இருபது வருடங்களாகப்போகிறது. மூன்று பிள்ளைகளையும் கரை சேர்க்க அவளும் படாத பாடில்லை. மணிவேலுவும் தானுமாக நிறைய முயற்சிகளை எடுத்தும் வீட்டுச்சுமைகளை சமாளிக்க முடியவில்லை. மாடு வளர்த்துப்பார்த்தார்கள்.
மாடு வளர்ப்பது மலையகத்தில் தனிக்கலை. மற்றைய ஊர்களைப் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அந்திப்பொழுதில் கட்டிப்போட்டு பால் கறக்கும் நிலைமை மலையகத்தில் இல்லை. வெளியில் மேய விட்டு வளர்த்தால் அது தெயிலைத் தொட்டத்துக்குள் புகுந்துவிடும். பிறகு தொழிலாளி தான் செய்யும் தொழிலையம் இழந்து தோட்டத்து காரியாலயத்தில் விசாரணைக்கு நிற்கவேண்டியிருக்கும். அதனால் மாட்டுக்கு பட்டிக் கட்ட வேண்டும். மழையோ, வெயிலோ மூன்று வேளைக்கும் மாட்டுக்கு புல் கொண்டு வந்து போடவேண்டும். காசுக்கு புண்ணாக்கு வாங்கி காலையும் மாலையும் மாட்டுக்குத் தண்ணி வைக்க வேண்டும். இரவைக்கு காடியில் கிடந்த புல்லை அள்ளி மாட்டுக்கு படுக்கைப் புல் போடவேண்டும். ஆக, தன்னை விட சொகுசாக மாட்டை வளர்த்தால்;தான் அதில்; இருந்து ஏதும் வருமானம் பார்க்கலாம்.
முத்துலெட்சுமி மலை வேலை முடிந்த கையோடு ஒரு கட்டுப்புல்லை தலையில் சுமந்தபடிதான் வீடு வந்து சேருவாள். மணிவேலுவும் அப்படியே. பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்லை. வாகனத்தில் வந்து பால் சேகரிப்போருக்கு அதனை விற்பார்கள். அவர்களிடமே புண்ணாக்கும் வாங்கிக்கொள்வார்கள். பால் கணக்கு புத்தகத்தில் தினமும் விற்கப்படும் பாலின் அளவு எழுதப்படும். புண்ணாக்குக் கணக்கும் எழுதப்படும்.  தோட்டத்துச் சம்பளம் போலவே அதுவும் மாதத்திற்கு ஒரு முறை கணக்குப்பார்த்து புண்ணாக்கு செலவுக்குப்போக எஞ்சியது கையில் கிடைக்கும். கூட்டு ஒப்பந்தம் இல்லாத இன்னொரு கூலி முறை அது. அவ்வளவுதான். அவர்களின் உடல் உழைப்புக்கு ஏற்றதாக அந்த வருமானம்  இருக்காது.
இந்தத் தொழிலை முறைப்படி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கலாம். 'கொத்மலை'யும், 'அம்பேவலை'யும் கூட மலையகத்தில்தானே இருக்கிறது. ஆனால் மலையக மக்களிடம் இந்த தொழிலை முறையாக முன்னெடுக்கும் திட்டங்களதான் முன் வைக்கப்படவில்லை. மாடு வளர்க்கும் தொழிலாளிகளும் சிறுபண்ணையாளர்களும் தங்களது தொழிலை முறைமையாக்குமாறு கோரி ஹட்டன் நகரில் பால்குளியல் போராட்டம் நடாத்தியும் பார்த்தார்கள். ஹட்டன் பாதைகளில் 'பாலாறு' ஓடிய காட்சிகள் மட்டுமே வரலாறாகியது. எதும் நடந்த பாட்டையென்றால் காணோம். ஆனால் மாடு வளர்ப்புக்கான மந்திரி பதவிகள்; மட்டும் அவர்களின் தலைவர்களிடம்தான் வருஷ காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மாடுகள் மீதும் மந்திரிகள் மீதும் நம்பிக்கை இழந்து போனதால்தான் முத்துலெட்சுமி,  'முனவ்வரா பேகம்' ஆக மாறி சவுதி போனாள்.
ழூழூ
'நாளைக்கு ஹட்டன் போறேண்டி.....' கமலாவின் குரல் உற்சாகமாய் ஒலித்தது.
மறுமுனையில் கிடைத்த பதில்கள் அவளுக்குள் பூரிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கமலா கையில் இருந்த 'மொபைல்' தொலபேசியில் மின்னிய கலர் வெளிச்சங்கள் அந்த உரையாடலின் சந்தோஷத்தைக் காட்டியது.
'அப்பாவும் நானும் தான் வாறோன்...டீ'
'.......'
'அதுவொன்னும் பிரச்சினையில்ல...டீ. நான் எப்பிடி சமாளிக்கிறேன்னு பாரு..டீ'
அடிக்கடி 'டீ' போட்டு 'டீ' போட்டு பேசினாள். அடுத்தப்பக்கம் தோழியாக இருக்க வேண்டும்.
மணிவெலுவும் மகள் கமலாதேவியும் போகிற போக்கில் தங்களது பட்டியலை சரிபார்த்துக் கொண்டார்கள்.
'வீட்டுக்கு ஒரு சிற்றிலிங்க் போன் வாங்குவோம்பா... அப்பதான் அம்மாகூட எல்லாரும் அடிக்கடி பேசலாம். இல்லாட்டி என்னோட மொபைலுக்கு தானே அம்மா எடுக்கிறாங்க'
தன்னுடைய கைக்குள் மாத்திரமே கைப்பேசியை வைத்திருக்க புது 'ஐடியா' வைக் கொடுத்தாள் கமலா.
கமலாவின் கோரிக்கை நியாயமாகத் தெரிந்தது மணிவேலுக்கு. சிற்றிலிங்க். பட்டியலில் முதலிடம். புpடித்தது.
'அப்புறம் மறக்காமல் ... கேபிள் டிவி காசு கட்டிரனும்'
'அப்புறம், எனக்கு ஒரு மூவாயிரம் கையில தாங்கப்பா... எனக்கும் தங்கச்சிக்கும் தேவையான சாமான்கள கொஞ்சம் வாங்கனும்'
குமர் பிள்ளைகளின் தேவைகளை  உணர்ந்தவனாய் தலையாட்டினான் மணிவேலு.
'தம்பிக்கும் ஏதாவது வாங்கிக் குடுங்க..பிள்ளைகளா...'
;சரிங்கப்பா... அவன் ரெண்டு கொப்பியும்... 'பென்டன்' சிடியும் , கிரிக்கெட் பெட்டும் கேட்டான். அம்மா போன் பண்ணுனப்போ சொன்னுச்சி ... பெட்டு கேட்டு கரச்சல் பண்ணுறான். நானும் இல்லாத நேரம் அவன் வெளையாண்டானாவது என்னை மறந்துட்டு இருப்பான்... வாங்கிக்கொடுங்கனு..'
பட்;டியல்கள் நீண்டன.....குண்டும் குழியுமான பாதையில்; ஆடியாடி நகர்ந்த பஸ் நகரத்தை அடைந்தது.
வங்கிக்கு சென்று கணக்கு புத்தகத்தை நீட்டியவர்களுக்கு சந்தோஷம் தாளவில்லை. முத்துலெட்சுமி சொன்னது போலவே இருபதினாயிரம் அனுப்பியிருந்தாள்.
சொன்னபடி சாமான்களை வாங்கிய மணிவேலு. கமலா கையில் மூவாயிரத்தை கொடுத்தான்.
'அப்பா.... காலுக்கு மருந்து கட்டச் சல்லி'
'அதான் அடுத்தடுத்து தோட்டத்து ஆஸ்பத்திரியில கட்டுனோமே...'
'இல்லப்பா..அங்க அதே மருந்ததான் ...திரும்;ப திரும்ப.. கட்டுறாங்க. அம்மா டவுனுக்குப் போனா பிரவட்ல கட்ட சொல்லி கடுதாசில எழுதியிருந்திச்சு... மறந்துட்டீங்களா..?'
'ம்ம்...எங்க காலத்துல எந்த எழவு காலுல குத்துனாலும் அத இன்னும் கொஞ்சம் குத்தி.. மஞ்சளையும், உப்புக்கல்லையும் நுணுக்கி, வெளக்கெண்ணையும் வச்சு சின்னதா ஒரு சூடு போட்டா காஞ்சி போயிரும்.... நீயும் ஒங்கமமா போன ஒரு வருஷமா... காலு வருத்தம் காலு வருத்தம்னு மருந்து கட்டுற... ஏன்...புள்ள ஒரு ஆணி குத்துனா.. இம்புட்டு நாளைக்குமா ஆற மாட்டேங்கது'
'இல்லப்பா அது... கறல் புடிச்ச ஆணியினால அடிக்கடி ஊசி போடனும்னு பிரவட் டொக்டர் சொன்னாருப்பா'
ஏதோ இளம் பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு சொல்லி மூவாயிரமும் சொல்லாமல் ஐநூறும் கேட்பதாய் எண்ணிய மணிவேலு இன்னுமொரு ஐநூறையும் கொடுத்தான்.
கமலாவுக்கு மகிழ்ச்சி...
'நான் வந்துட்டேன்..டீ... நீ எங்கே நிற்கிற....' தோழிக்கு அழைப்பெடுத்தாள்.
மறுமுனை பதிலை செவிமடுத்தவள். சுற்றி முற்றி பார்த்தாள். ஏதோ உணர்ந்தவளாய்...
'சரி நான் வந்திடுறேன்...டீ'  என அப்பாவுக்கு விடை கொடுத்தாள்.
மகளை தனியாக அனுப்ப மணிவேலுவுக்கு விருப்பமில்லைதான்.
'குமர் பிள்ளைகள் தங்களுக்கு தேவையான சாமான்களை வாங்கப் போகுதுகள்..நாம போனாள் அதுகளுக்கு அசௌகரியமாக இருக்கும்' என மனதுக்குள் எண்ணியவனாக..
'சரிம்மா..... மருந்தக் கட்டிக்கிட்டு..சாமான்களையும் வாங்கிட்டு மூனு மணி பஸ்ஸுக்கே  பத்திரமா... வீட்டுக்குப் போயிடு. இன்னும் ரெண்டு வேலையிருக்கு அதை முடிச்சிக்கிட்டு வீட்டுச் சாமான்களையும் வாங்கிட்டு நான் அந்திக்குத்தான் வருவேன்...'
'சரிங்கப்பா...'      விரைந்தாள் கமலா.
ஒரு பக்கம் மகள் கமலா தனியே கழன்று போவதும் மணிவேலுக்கு வசதியாகத்தான்  இருந்தது. மெதுவாக நடந்து மேட்டு வீதியில் ஒதுக்குப்பறமாக இருக்கும் 'பார்'க்குள் நுழைந்தான்.
மணிவேலு பெரிய குடிகாரன் கிடையாது. அவ்வப்போது கொஞ்சம் எடுப்பான். ஆனால் முத்துலெட்சுமி வெளிநாடு போன பிறகு கையில் கொஞ்சம் காசு புழங்கியது. அந்திப்பட்டால் ஒரு 'கால்' எடுத்துவிட்டு படுத்துவிடுவான். முத்துலெட்சுமி இல்லாத கவலையில் சில நாளைகளில் அது 'முக்காலாகவும்' போவதுண்டு. அப்போதெல்லாம் நாலு காலில் தான் வீட்டுக்கே வந்து சேருவான். இதைக் கேள்விபட்ட முத்துலெட்சுமி 'பாப்பாவுஙக அப்பா .. ரொம்ப குடிக்க வேணாம்' என எழுதாமல் கடிதங்களை முடிப்பதேயில்லை.
ழூழூ
முன்னிரவை வரவேற்கும் மலையகத்தின் கறுத்த மாலைப் பொழுதில் தலைக்கு மேலே மூடையுடன்.. தலைக்குள்ளே போதையுடன் வீடு வந்து சேர்ந்த மணிவேலுவை தேவிகாவும், பிரசாந்தும் சூழ்ந்து கொண்டார்கள்.
'இந்தாங்கடா..கண்ணுகளா' என தான் வாங்கிக்கொண்டு வந்தவற்றில் 'சிற்றிலிங்கை' விஷேசமாக எடுத்து நீட்டினான் மணிவேலு.
'ஹய்யா... இனிமே ஒரு கோல் எடுக்க அக்காகிட்ட செல்போனுக்கு தொன்னாந்துகிட்டு இருக்க தேவையில்ல..'
என புதுப் போனை எடுத்து இயக்கிப்பார்த்தாள் தேவிகா..
நன..நன...நனனனனன.... மெல்லிய இன்னியசையோடு இயக்கத்தை ஆரம்பித்தது சிற்றிலிங்க்.
'உங்களுக்குத்தான் அக்கா ஏதேதோ..வாங்கியாரேனுச்சே...தம்பி உனக்கு என்னடா வாங்கியாந்துச்சு' என்று மகன் தோளைத் தட்டினான்.
'அக்கா எங்கப்பா..?' என தனது சாமான்களை பார்க்க ஆவலாகக் கேட்டான் பிரசாந்;த்.
'அடே... அது மூனு மணி பஸ்ஸுக்கே வந்திடுச்சிடா..' என்றான் மணிவேலு, சிரித்துக்கொண்டே...
'இல்லப்பா .. நானும் தம்பியும் ஸ்கூல் முடிச்சு..டியுஷனுக்கும் போயிட்டு... அஞ்சு மணிக்குத்தான் வந்தோம். வீடு பூட்டிதான் இருந்திச்சு... ஆறாயி அம்மாகிட்ட சாவிய வாங்கி நான்தான் வீட்டைத் தொறந்தேன்... அக்கா இன்னும் வரலையே.. நீங்க ரெண்டு பேரும் வாறிங்கனுதான் நாங்க இருந்தோம்'
தேவிகா விபரமாச் சொல்ல மணிவேலுவின் போதை கொஞ்சம் குறையுமாப்போல் இருந்தது. அந்திக் குளிரிலும் கொஞ்சம் வியர்;த்தது.
'அக்காளுக்கு கோலைப் போடு'
'நீங்கள் அழைத்த தொலைபேசி இலக்கம்..நிறுத்திவைக்கப்பட்டுள்ளது'
'அப்பா...அக்காவுட்டு போன்னும் வேலை செய்யலங்ப்பா....'
தேவிகாவின் பதில்  அவனை என்னமோ செய்தது. மணிவேலு கலவரமடைந்தான்.
அக்கம் பக்கம் உள்ளவர்களை விசாரித்தான். மூனு மணி பஸ்ஸில் வரும் பாடசாலைகளை பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லி தேவிகாவை அனுப்பினான்.
'அக்கா மூனு மணி பஸ்ஸில வரலையாம்... ஆனால், ஹட்டன்ல ஒரு அண்ணன்கூட பேசிக்கொண்டு நின்னத ஒரு பிள்ள பார்த்தேனு சொல்லுது' தகவல் தேடி வந்தாள் தேவிகா.
மணிவேலுவுக்கு சந்தேகம் வந்தது. 'அக்காளுட்டு கூட்டாளிமாருங்களுக்கு போனை போடு..'
'யாரோ..ஒரு கூட்டாளியோடத்தானே பேசிக்கிட்டு பிரவேட் ஆஸ்பத்திரி..போறேன்னுச்சு...' மணிவேலுவின் வார்த்தைகள் நம்பிக்கையிழந்தன.
 நாட்டில் நடக்கும் செய்திகளை நினைத்து அவனுக்குள் ஒரு படபடப்பு வரத்தொடங்கியது
'சிற்றிலிங்க்' வந்ததும் வராததுமாக சுழன்றுகொண்டிருந்தது தேவிகா தனக்கு தெரிஞ்ச அக்காவின் எல்லா கூட்டாளிகளுக்கும் அழைப்பு எடுத்துப்பார்த்தாள். எங்கும் சாதகமான பதில் இல்லை.
'அப்பா எனக்கு ஒரு சந்தேகம்... அந்தப் பொண்ணு, ஒரு அண்ணனோட அக்காவை பார்த்தேனு ..சொன்னிச்சே... அடிக்கடி அக்கா யாருகிட்டையோ போன்ல பேசிக்கிட்டே இருக்கும்பா....' தேவிகா தனது சந்தேகத்தைச் சொன்னாள்.
மணிவேலுவின்..தலைசுற்றியது.. இது போதையினால் அல்ல. பிள்ளைகளை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு இரவோடிரவாக அங்கும் இங்கும் விசாரிக்கத் தொடங்கினான். வேகமாக நடந்தான். ஆட்டோ ஒன்றை  எடுத்துக்கொண்டு அவசரமாக டவுனுக்கு புறப்பட்டான். அதிகம் கலவரப்பட்டான். ஆட்டோ டிரைவருக்கு இவனைப்பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்.
'இனி தேடி பிரயோசனம் இல்லண்ணே..... எனக்கு தெரிஞ்சப்பையன்தான்... அவங்க ரெண்டு; பேத்துக்கும் ரொம்ப நாள் பழக்கம்..'
அட்டன் போய் சேரும் முன்னமே ஆட்டோ டிரைவரிடமே விடை கிடைத்து விட்டது. அவனும் ஆட்டோ டிரைவர் தானாம். கமலா ஓடித்தான் போய்விட்டாள்....
காலுக்கு மருந்து கட்டுவதாகச்சொல்லி காதலுக்கு மருந்துப்போட்டிருக்கிறாள் கமலா.
விக்கித்து நின்ற மணிவேலுவிற்கு விடை கிடைத்து விட்டது.
ஆனால் மணிவேலு மனதில் வினாக்கள் எழுந்துகொண்டிருந்தன.
முத்துலெட்சுமிக்கு என்ன பதில் சொல்வேன்....?
கமலா 'டீ' போட்டு 'டீ' போட்டு பேசியது அவள் தோழிக்குத்தானா..?
என் குடிப்பழக்கம்தானா இந்த நிலைமைக்கு ஆளாக்கியது..?
முத்துலெட்சுமி இருந்திருந்தால் இது நடந்திருக்குமா...?
இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் அவனைக் குடைந்தன.. ஆனால்  மனதிற்கு  கிடைத்த ஒரே பதில்
'விடிந்தால் மானம் போயிடும்....!
வேறு வழியில்லை. வீட்டுக்குத்தான் போகவேண்டும். எஞ்சிய இரண்டு பிள்ளைகளையாவது.......
நாட்கள் மாதங்களாயின... மகள் ஓடிப்போனதை நினைத்து இப்போது அதிகமாகவே குடிக்க ஆரம்பித்துவிட்டான் மணிவேலு. இரண்டாவது மகளும் பரீட்சையில் உரிய பெறுபேற்றைப் பெறவில்லை. மகன் ஏதோ பாடசாலை போய்க் கொண்டிருந்தான். அந்த ஆட்டோ போகும்போது தனது நண்பர்கள் தன்னைக் கேலி செய்வதாக அடிக்கடி தேவிகாவிடம் சொல்லி கவலைப்படுவான்.
முத்துலெட்சுமியிடம் கடிதத்துக்குப் பதிலாக  இடைக்கிடை தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம்.. கமலா காலுக்கு மருந்து கட்டப் போய்விட்டதாகச் சொல்லி சமாளித்தார்கள்.
ஆணி குத்திய இடம் சலம் பிடித்துவிட்டதால் அடிக்கடி மருந்து கட்ட இருப்பதாக கமலா தனக்குச் சொன்ன பொய்யை மணிவேலு இப்போது முத்துலெட்சுமிக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.  பிள்ளைகளையும் அதே பொய்யைச் சொல்லச் சொன்னான். தேவிகா சொல்லமாட்டாள் என நினைத்தாலும் ஆனால் மகன் உளறிவிடுவானோ என்ற பயம் வேறு இருந்தது. அதனால் முத்துலெட்சுமி தொலைபேசி எடுக்காவிட்டால் நல்லது என்பது போலவே எண்ணத் தொடங்கினான். அதுபோலவே முத்துலெட்சுமியிடம் இருந்து அழைப்புகள் வருவதும் குறைவடைந்தது. கவலையிருந்தாலும் அதை விரும்பினான் மணிவேலு.
ழூழூ
கமலா கர்ப்பமானாள். ஆட்டோ ஓட்டிய அசதியில், அந்தியில் அரை போதையில்; வீட்டுக்கு வரும் கணவன்  சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவான்.  அம்மா அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது கமலாவுக்கு. தாய்மையடையும் போதுதானே அம்மாவின் வலி தெரியும்.
அம்மாவுக்கும் தன் குடும்பத்துக்கும் துரோகம் செய்ததை நினைத்து அடிக்கடி வருந்தினாள். தோழியின் உதவியுடன் வீட்டு தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டவள் ஒரு நாள் தயக்கத்துடன் அழைப்பெடுத்தாள். தங்கை தேவிகாதான் பேசினாள். அம்மாவுக்கு விசயம் தெரியாது என்றும் அம்மாவுடன் ஆறுமாத காலமாக எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவிகா சொன்னது கமலாவுக்கு மேலும் கவலையைத் தந்தது.
கணவனுடன் 'கிளினிக்' புறப்பட்டாள். அதே பிரைவட் ஆஸ்பத்திரிக்கு. கணவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு செல்ல பின் சீட்டில் தனியாய் அமர்ந்திருந்தவளுக்கு அருகில் அம்மா இருக்க வேண்டும் போல் இருந்தது. ஒவ்வொரு முறை 'கிளினிக்' போகும்போதும் என்றோ ஆறிவிட்ட காயத்தைச் சொல்லியே அம்மாவிடம் காசு கறந்ததையும், காதலுக்காக அந்த காயத்தை காட்டி அப்பாவை ஏமாற்றியதையும்  நினைத்து வருந்தினாள்.
'அம்மானா சும்மா இல்லடா...அவ இல்லனா யாரும் இல்லடா' கணவனின் ஆட்டோவில் பாட்டு.. சத்தமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கமலாவுக்கு அம்மாவின் நினைப்பு அதிகமாகவே வந்துகொண்டு இருந்தது.
பிரைவட் ஆஸ்பத்திரியை சென்றடைந்தவள். தனது சுற்று வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கமலாவுக்கு வயிறு மட்டுமல்லாது மனமும் சுமையாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த  பெண்மணி கையில் இருந்த 'சூரியாந்தி' யில் எதேச்சையாக அந்த செயதியைப் படித்தாள் கமலா.
'சவூதிக்கு வேலைக்குச் சென்ற பெண்ணின் உடலில் ஆணியேற்றப்பட்டு கொடுரம்-
நாட்டுக்கு அழைத்துவரப்பட்டப் பெண் வைத்தியசாலையில் அனுமதி'
செய்;தியோடு பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தை சற்று உற்றுப்பார்த்தாள் கமலா.
'அம்மா.........!!!!'  கமலாவின் அலறல் ஆஸ்பத்திரியையே ஆட்டியெடுத்தது..
மயங்கி சரிந்த  அவளை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 'ஸ்ரெச்சஸில்' ஏற்றினார்கள். கமலாவின் கால்களில் ஆணி குத்திய தழும்புகள் கூட மறைந்திருந்தன. ஆனால் அவளுக்கு வலி தாங்க முடியாது துடித்தாள்....

(முற்றும்)

No comments:

Post a Comment