சூட்டி நங்கி
கொ.பாபு
'அம்மே ............. அம்மே கோ அம்மே'?
என்று தனது வேண்டுகோளை நிறைவேற்றும் முகமாக இல்லாத தொல்லைகள் கொடுத்துக் கொண்டு நின்றாள்; சூட்டிநங்கி.
சிலுப்பாக் கோழி போல் கட்டையாக வெட்டப்பட்ட தனது கொண்டையை ஒரு முறை சிலிர்த்து விட்டாள். துரு துரு என்று விழிக்கும் குழந்தையின் கண்களையும் மூக்கையும் தலை முடி மூடிக் கொண்டது.முடியின் இடைவெளியினூடே கண்கள் பளிச்சிட்டன. கரு கருவென்ற அம்முடி சிறியதோர் கொப்பான் தேன்கூடு போன்றிருந்தது.
வாய்க்கால் நீரில் சேர்ந்தோடும் மீன்குஞ்சு போல், கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா ஓர் இடத்தில இருக்கவோ, பேசாமல் இருக்கவோ அவளால் முடியாது.வாயும் கண்ணும் கதை சொல்லும்.
'அம்மே அம்மே இண்டைக்கு மட்டும் விளையாட விடுங்கம்மா.இனி நான் கேட்கவே மாட்டேன்.நீங்க சொல்லுகிற நேரத்துக்கு ஓடோடி வந்திடுவேன்.என்னைப் போக விடுங்க' இவ்வாறு இறக்கை விரிக்க தயாராகிக்கொண்டிருந்தாள்.
அடுப்போடும் நெருப்போடும் சுழல்பந்தாய் விரையும் பிரேமலதாவுக்கு கோபம்.....கோபமாய் வந்தது.
'நீ இப்ப நல்லா என்னட்ட அடி வேண்டுவா!
தாத்தா வந்த நல்லா உத போடச் சொல்லுவேன்.
அந்தப்; பிள்ளைகளுக்;கு சிங்களம் தெரியாது.உனக்குத் தமிழ் தெரியாது.எப்படி விளையாடுவீங்க? அப்பிடி என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு'?
உள்வீட்டுச் சண்டை சச்சரவுகளை அறியாத பக்கத்து வீட்டு குழந்தைகள் இரண்டும் சூட்டி நங்கியை தூண்டில் போட்டு இழுக்கும் நோக்கத்துடன் உரத்த குரலில் பாடிக்கொண்டு நின்றார்கள்.ஒரு பச்சைக் கிளியாய் பறக்க குழந்தையின் மனசு தவியாய் தவித்தது.பிஞ்சு இதயத்தை பிய்த்தெறியும் துக்கம் துளைக்கும் போதெல்லாம் கட்டிலில் கிடக்கும் தலையணையில் முகம் புதைத்துப் படுத்திருக்கும் வழக்கம் கொண்டவள் சூட்டிநங்கி.
தாத்தாவின் தடித்த குரல் வெடிகுண்டு போல் அதிரும் போது கண்களைக் கசக்கி, சோம்பல் முறித்து, அடுப்புச் சாம்பலை தட்டி விட்டுச் செல்லும் பூனையைப் போல, அன்றாட விசாரணைக்குச் செல்வாள்.
நுகேகொடையில் இவர்களுடைய வீடு அமைந்திருந்தது.இலங்கை இராணுவத்தில் கடமை புரிந்த பிரேமலதவின் கணவர் வடக்கு,கிழக்கு முகாம்களுக்கு மாற்றலாகி தொழில் புரிந்த காலங்களிலெல்லாம் நாளும் பொழுதும், துக்கம் சுமந்த துயரோடே பொழுதுகள் புலர்ந்தன எத்தனையோ இரவுகள் அவள் கடைக்கண்களில் வழிந்தோடியது கண்ணீர்.ஆனால் தற்போது அண்மையில் தலைநகர் கொழும்பை அண்டிய பகுதியில் வேலை என்பதால் அடிக்கடி வீட்டிற்கும் வந்துபோவார்.
ஆடைத் தொழிற்சாலைகளும், வேறு பலவித தொழிற்சாலைகளும் ஆங்காங்கே இருப்பதால் பத்துப் பதினைந்து, சோற்றுப் பார்சல்கள் கட்டி விற்பனை செய்வது பிரேமலதாவின் தலையில் பொறிந்தது.
ஓன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து செல்லும் வாகன இரைச்சல் சத்தங்கள் மங்கலாய் சுழன்று வந்து மூச்சை திணறடிக்கும் தூசிகள்.
மதில்;;களால் சுற்றி வளைக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள.;முகம் தெரியாத மனிதர்களது நடமாட்டம்.குபுக் குபுக்கென்று பறந்தபடியிருக்கும் தொழிற்சாலைகளின் புகை.வெளியுலகை மறைத்து சிறை வைத்திருக்கும்.ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள்.இவ்வாறானதோர் சூழலில் அமைந்திருந்தது.சூட்டி நங்கியின் வீடு.
அயல் வீட்டு குழந்தைகளோடு,தானும் விளையாட்டில் கலந்து கொள்ளாததையிட்டு தாய் மீதே அதிக வெறுப்புற்றிருந்தாள்.தனது வெறுப்பை வெளிக்காட்டும் முகமாக,தாய் கொடுக்கப் போகும் தேநீரைக் குடிப்பதில்லை,பகல் உணவை சாப்பிடுவதில்லை,என்று மனசுக்குள் சபதம் எடுததுக்கொண்டாள். ராங்கி............ராங்கி பொல்லாத பிடிவாதக்காரி. வாய்க்கு வாய் காட்டுவாள் வயசுக்கு மீறிய கதை பேச்சு.
முச்சந்தியில்,மூன்று பக்கமும் வேலி இல்லாத வீட்டை,முழுதாக வாடகைக்கு எடுத்து ஆறுமாதமாக குடியிருக்கும் அயல் வீட்டுக்குழந்தைகள் இரண்டும்,வீதியோரமாய் நின்ற மாமரத்தின் கீழ் மணல் மேடொன்று இருந்தது.அம்மேட்டில் நின்றே விளையாடுவது வழக்கம்.ஒரு சில தென்னை மரங்கள்,மாமரங்கள்,பலாமரங்கள்,இவைகள் வீட்டின் முன்புறத்தை மறைத்திருந்தபடியால்.மதில் இல்லாத குறையை ஓரளவு தீர்த்தது, அவ்வீட்டாருக்கு மனதுக்கு திருப்தி அளித்தது.
சூட்டி நங்கியின் வருகைக்காக எல்லா விளையாட்டு வித்தைகளும் விட்டு களைத்துப்போனார்கள் அயல் வீட்டுக்குழந்தைகள்.
நிமாலிஹா என்பதே அவள் பெயர்.தாயும்,தந்தையும் செல்லமாக சூட்டிநங்கி என்று அழைப்பதைக் கண்டுபக்கத்து வீட்டுக் குழந்தைகளும் அவ்வாறே அழைப்பார்கள்.
பம்பரம் போல் சுழலும் தாயை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
குதிகால்கள் இரண்டையும் வீட்டு விறாந்தையின் நிலமதிரக் குத்தினாள்.
தன்னை அம்மா விளையாட மறுக்கும் காரணத்தை சின்ன மனசு குடைந்தது.
பக்கத்து வீட்டு நெல்லிஅக்காவின் பிறந்த தினம் அன்று,தங்கள் வீட்டு ஜன்னலை இலேசாக திறந்து,கம்பிகளின் அடிப்பாகத்தைப் பிடித்தபடி,அவர்களது திறந்த ஜன்னல் ஊடாக,உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றாள் சூட்டி நங்கி.
சற்றுத் திரும்பி விழித்தபடி அருகில் நின்று அம்மா சொன்னாள், 'இதில் நின்று மூச்சுக் காட்டக்கூடாது'.
அம்மா மிக மிக இரகசியமாக கூறிய கட்டளைகளுக்கு இணங்கி நடந்து கொண்டாள்.
இரவு உணவு வேளையின்போது அம்மா தாத்தாவிடம் பேசிக்கொண்டாள்.
'அயல் வீட்டிற்கு யார் யாரோ வந்து, போனார்கள் தடித்த மீசையுடன் ஓருவர் வந்தார்.விகாரமான இருவர் மோட்டார்சைக்கிலில் வந்தார்கள.;'இவர்கள் இருவரினதும் சம்பாசனைகளையும் தான் நித்திரையின்றிக் கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.பெரியவர்களின் முணு முணுப்பையும்,குசு குசுப்பையும் குழந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சந்தேகத்தை அளவுகோலாகவைத்தே ஒவ்வொரு விடயங்களும் அவதானிக்கப்பட்டு வந்தது.
கூர்ப்பான மணல்மேட்டின் உச்சியில் நின்றபடி சிறுவன் கூறினான்.
'அக்கா என்ற வகுப்பில எனோட படிக்கின்ற சுரேஸ்,என்ர பென்சில ஒருக்கா எடுத்துக் கொண்டு தரமாட்டேன் என்று சொன்னான்.அவன் இப்ப என்னோட யாழு-(கூட்டாளி) அவன் படிக்கிற பாட்டப் படிக்கிறேன் பாரு' என்று,சத்தத்தோடு ஒரு பாடல் பாடினான்.
மணலின் அடிப்பாகத்தில்,தனது கால் பெருவிரல் நகத்தால் மணலை கிண்டிக்கொண்டிருந்த கவிதா.
'டேய் தம்பி அம்மா உனக்கு என்ன சொன்னா?
இப்பிடி தொண்டை போட்டுப் பாட்டுப் படி என்று சொன்னதா'? சிறுவனுக்கு ஆறுவயது கவிதாவுக்கு எட்டு வயது அம்மா அடிக்கடி சிறுமியிடம் சொல்வது அவளுக்கு ஞாபகம் வந்தது.
'தம்பி சின்னப் பெடியன். நீ வளர்ந்த பிள்ளை,அதுவும் பொம்பிளப் பிள்ளை,தம்பி என்ன பிழை செய்தாலும் நீதான் திருத்தவேணும்'.
தனது பாடல் உப்புச் சப்பில்லாது போனதை ஏற்றுக்கொள்ளாத சிறுவன்,
'நீ மட்டும் பாட்டுப் படிக்கலாம்.நான் மட்டும் பாட்டுப் படிக்கக்கூடாதோ? நல்லா இருக்கு நீ சும்மா வாயப் பொத்திக் கொண்டு இரு.'
துடிப்பான பதிலோடு உறுதிப்படக் கூறினான். 'நான் சத்தமாய் பாட்டுப் படிப்பேன்';. வெடுக்கென்று கூறி முகத்தை உம் என்று வைத்துக்கொண்டான்.தங்கள் வீட்டுப் பக்கமாய் முகத்தை திருப்பி 'அம்மா' என்று கூப்பிட்டாள் கவிதா.
அக்காவின்; முறைப்பாட்டுக்கான கூக்குரல் சற்றுச் சிறுவனை உலுக்கிவிட்டது.வட்டக் கழுத்து வெனியனுக்குள் புகுந்து,வழுகி நின்ற கறுப்புக் கால்சட்டையை இழுத்துவிட்டான்.நெற்றி அலை வடிவில் சுருங்கியது.அக்காவுடன் தொடர்ந்து மோதிக்கொள்ளமுடியாத நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டான். ஓர் இடைப்பொழுது சமாதானத்துக்கு குதிரை போல் எண்ணங்கள் தாவியது.
அம்மா சொன்ன அறிவுரைகள்,கண்டிப்பான கருத்துரைகள் இடித்த மாவை அரைப்பது போல் அரைத்துக் கொண்டிருந்தது.
'சுற்றம் சூழ சிங்கள ஆக்கள்,நம்மட குடும்பம் மட்டும் தான் இதுக்குள்ள தமிழ் ஆக்கள்,ஐயோ எண்டு சொன்னா ஓடி வர ஆள் இல்லை.தமிழிலகதைக்காதீங்க,அப்படி கதைத்தாலும்;;; சத்தம் போட்டுக் கதைக்;காதீங்க.
பட்ட சிறுப்பினைகள் போதும்,உரலுக்கு ஒரு பக்கம் இடி,மத்தாளத்துக்கு இரண்டு பக்கமும் இடி, கரைச்சல் குடுக்காதீங்க.தண்ணிய வெண்ணிய குடிச்சிட்டு சும்மா புத்தகத்த எடுத்துப் படிங்க.அப்பா வேலையால வார நேரம் வீண் வம்ப விலைக்கு வேண்டாதீங்க.
மீண்டும் கவிதா 'அம்மா' என்று சத்தம் வைத்தாள்.
இருள் மேகம் போல் முகத்தை வைத்துக்கொண்டு,சரிவாக நின்ற செவ்விளனி மரத்தோடு சாய்ந்தான்.ஒருபுறம் தெரிந்த அக்காவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான்.
நெல்லி அக்காவின் சற்று உரத்;த சத்தம் கட்டிலில் படுத்திருந்த சூட்டி நங்கியையும் தட்டி எழுப்பிவிட்டது. 'ஐ அண்ட காணவா'-(ஏன் கூப்பிடுறீங்க?) என்று கேட்க வேண்டும் போல இருந்தது.; சட்டென்று கட்டிலில் இருந்து தவளைப்பாச்சலில் குதித்து இறங்கினால். குட்டையான தலைமுடியை வாரிக் கொண்டிருக்கும் தாயின் அருகில் சென்றாள். இவளை கணக்கெடுக்காமல் சிடுசிடுப்பாக இருந்தால் பிரேமலதா. திடீர் என குழந்தை மீது ஒரு பரிவு பிறந்தததும் மிருதுவாய் குழந்தையின் தலையை கோதியபடி பிரேமலதா கூறினாள். 'இஞ்ச பார் மகள் அவங்களோட தேவையில்லாம கனக்க கதை பேச்சு வைச்சுக்கொள்ளக்கூடாது.'
'அதுதாம்மா ஏன் கதைக்கக்கூடாது.'
'அது தேவையில்லாத பிரச்சனை வரும்'
'நாங்க சண்டை பிடிக்காமத்தானே ஒற்றுமையா விளையாடுகின்றோம்.அப்ப ஏன் பிரச்சனை வருது.'?
'அது வேற பெரிய கதை அது உங்களுக்குத் தேவையில்லை.' பெரிய கதையா? அப்பிடிண்டா சொல்லுங்க'? நீங்க சின்னப் பிள்ளைகள் இப்ப உங்களுக்கு அவசியமில்லை'.
'நான் ஒருவருக்கும் சொல்லமாட்டன்.எனக்குச் சொல்லுங்கம்மாசொல்லுங்க'
'அது அவங்கட ஆக்களுக்கும்,எங்கட ஆக்களுக்கும் இடையில் முந்தியிருந்தே சண்டை.
'ஏன் சண்டை வந்தது'?
'நீ இப்படி கேக்காதை'
'அப்ப நான் எபபடி கேக்க'?
'நான் சொல்லுறத மட்டும் கேளு'.
'உங்களுக்குள்ள வாற சின்னச் சின்ன சண்டையிண்டா பரவாயில்லை உடனே அடுத்த நிமிஷம் சேந்திடலாம்;;.
ஆனால்? அது அப்படி இல்லை.
நம்மட சீயாட காலத்துக்கு முந்தி வெள்ளக்காரண்ட ஆட்சிக்கு முந்தி இருந்து தொடங்கின சண்டை சச்சரவு.
'அடேங்கப்பா அவ்வளவு காலமாச் சண்டையா? இந்தச் சண்டையை மூட்டிவிட்டது யார்?
'அதுபற்றி எனக்குத் தெரியாது.ஆனா வெள்ளைக்காரனுக்கு முந்தி அரசர்களிட காலத்திலயும் சண்டை நடந்திருக்கு'.
'யாரோட யார் மோதினாங்க'?
யானையிலயா?குதிரையிலயா? சண்டை போட்டாங்க?
(அநய் ஹேகாணவா) 'ஏன் சத்தமாக் கத்துறா? மெதுவாக் கதைக்க தெரியாதா உனக்கு?
'நான் மெதுவாத்தானே கதைத்தேன்';.
'அந்தக் காலத்தில இந்தியாவில இலங்கையில எல்லாம் மன்னர்களிட ஆட்சி தான் நடந்தது. தமிழ் அரசர்களிடையே சண்டை அதே மாதிரி சிங்களஅரசர்களிடையேயும் சண்டை.தமிழ் அரசர்களுக்கும் சிங்களஅரசர்களுக்கும் சண்டை.
'இதெல்லாம் எங்கம்மா நடந்தது.'?
'இந்தியாவில அதே மாதிரி இலங்கையில நடந்தது.'
'அவங்க ஏம்மா சண்டை போட்டாங்க'?
'நிலத்துக்கு'
'நிலம் ஏம்மா ஓடிப்புடிச்சு விளையாடவா'?
'இல்ல ஆட்சிக்காக,அதிகாரத்துக்காக'
அப்ப நெல்லியக்காமாதிரிஆக்களுக்கும் ,நம்மள மாதிரி ஆட்களுக்கும்ஆட்சிக்காக. அதிகாரத்துக்காக சண்டை வந்ததா?அவங்க அடிபட்டுச் செத்தாங்களா?
'அப்படி நடந்ததா நான் சரித்திரப் புத்தகத்தில படிக்கல,எனக்கு யாரும் படிப்பிச்சதாவும் ஞாபகம் இல்ல.'
வெள்ளக்காரனுக்கும்,ராசாமாருக்கும் பைத்தியம் பிடிச்சா நமக்கென்னம்மா.?
நான் இண்டைக்கு மட்டும் நெல்லியக்கா வீட்ட போய் விளையாடிற்று வாறேனம்மா.'?
'உம்ப ஹட்ட தெங் வெடி மங்ஹஹனவா'-(உனக்கு வாய் இப்ப கூட நான் அடிப்பன் ).யாருக்குப் பைத்தியம் பிடிச்சாத்தான் உனக்கு என்ன?வர வர கதையும் பேச்சும் கூடிப் போச்சு.எல்லாம் அக்கம் பக்கத்துக்குப் போறதால தான்.உனக்கு இப்ப நாக்கு நீண்டு போச்சு'.
ஒரு நகரப்புரத்தின் யந்திரச் சுழற்சியுள் எத்தனையோ பரபரப்பான வேலைகளிடையே, பொறுமையுடன் பிரேமலதா சூட்டிநங்கிக்கு இவ்வளவு கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
மகளுடைய கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டால்,அத்தோடு மகள் அலட்டாமல் அடங்கிவிடுவாள்.இன்னுமொரு முக்கியமான விடயமும் இருந்தது.தனது கணவர் இராணுவத்தில் இருப்பவர்.இல்லாதது பொல்லாதது எல்லாம் அவள் கதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பக்கத்தில ஒரு தமிழ் குடும்பம் புதுசா வாடகைக்கு குடியிருக்க வந்தது.நமக்கு அது தொல்லையாப் போச்சு.சூட்டி நங்கியை கட்டுப்பாடா வீட்டோட வச்சுக்கொள்;ளுறதுதான்எல்லாத்துக்கும் நல்லது.தனக்குள்ளாக சிந்தித்தபடி ஒரு முடிவுக்கு வரத்தொடங்கினாள். மீண்டும் மெதுவாக விட்ட குறையிலிருந்து கதையைத் தொடங்கினாள்;.
'ஓயாம ரெண்டு பகுதிகளுக்கும் சண்டை.'
'இந்தச் சண்டையில யாரு வெண்டா?' சிங்கள ஆக்களிட அதே மாதிரி தழிழ் ஆட்களிட தரித்திர புத்தகங்களில என்ன எழுதியிருக்கு'?
'தரித்திரப் புத்தகமில்லை மாடு அது சரித்திரப் புத்தகம். (சிங்கள ஆக்களிட அதே மாதிரி தழிழ் ஆட்களிட தரித்திர புத்தகங்களில என்ன எழுதியிருக்கு'?
'தரித்திரப் புத்தகமில்லை மாடு அது சரித்திரப் புத்தகம்.)
மாறி மாறி அதையும்,இதையும் கேட்டுக் கேட்டு ஆக்கினை குடுக்காத,பேசாம உன்ர பாட்டப் பாரு. இடக்கு முடக்கா இவ எதையாவது கேட்டுத் துளைப்பா.'
'இது என்ன சண்டையாமே நான் எத்தின பேரோடு கோவம் போட்டு பிறகு நேசமாகிவிட்டன்.அம்மா சொல்லுறது உண்மையா இருக்குமா? என்றவாறு தன் மனசுக்குள் எண்ணிக் கொண்டது குழந்தை.
நெல்லிக்காய்கள் தான் சூட்டி நங்கியுடன் அயல் வீட்டுக்குழந்தைகள் நட்பாய் இருக்ககாரணம்.
அடுத்த வீட்டு உரிமையாளர், அவரது இன்னுமோர் வீட்டில், பத்தரமுல்லையில் குடியிருப்பதால் இளநீர், மாங்காய், நெல்லிக்காய்கள் இவற்றுக்கு வாடகை வீட்டாரே சொந்தங்கொண்டாடுவது வழக்கம்.
சில வாரங்களின் முன்னர், ஒரு நாள், நெல்லி மரத்தின் காய்களை கவிதாவும், அவள் தம்பியும் நீளமான தடியைக் கொண்டு தட்டினார்கள். தங்கள் வீட்டுப் படலை ஓரமாக, சூட்டி நங்கி பார்த்துக்கொண்டு நின்றாள்.
தடியால் ஓங்கி அடிக்கும் வேளை குலை, குலையாக கிடந்த நெல்லிக்காய்கள், குழியில் போடும் ஜில் போளைகள் போன்று சிதறியது.
தடியைக் கீழே போட்டு விட்டு இன்பம் நின்றுலாவும் சிட்டு மனசோடு போட்டி போட்டுக் கொண்டு பரபரப்பாய் பொறுக்கி எடுத்தனர்.
பின்னர் அருகில் வைத்திருந்த கிண்ணத்துள் போட்டு நிரப்பினர். சூட்டி நங்கியின் அருகில் சென்று சிறிதளவு நெல்லிக் காய்களை அள்ளி நீட்டினாள் கவிதா.
வேண்டுவதா? எப்பா (வேண்டாம்) என்று சொல்வதா? சற்றுத் தடுமாற்றத்துடன் துரு துருவென விழித்தாள். பின்னர் குடு குடுவென்று தாயிடம் சென்று, திரும்பி வந்து வேண்டிக் கொண்டாள். அன்று தொட்டு கவிதாவை அவள் நெல்லி அக்கே என்றே அழைப்பது வழக்கம்.
அந்த அறிமுகத்தின் பின்னர் அவ்வரங்கில் சூட்டி நங்கியும், கவிதாவும், சிறுவனும் கடிவாளம் இட்ட கன்றுக்குட்டிகளாய் சில தினங்களின் பின்னர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கவிதாவும் ஓரளவு சிங்களம் பேசக்கூடியதாக இருந்ததாலும், தம்பியும் சிறுவர் பாடசாலையில் சிங்களம் படித்ததாலும், சூட்டி நங்கியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு இலகுவாக இருந்தது.
வலது கரத்தின் விரல்களை வாயின் முன்னே மடக்கி, ஒலி வாங்கியின் முன்பேசுவது போல் நின்ற கவிதா,
'தற்போது தரம் ஒன்றில் தமிழ் படிக்கும் தனது தம்பியை பாடல் பாடும்படி மேடைக்கு அழைத்தாள';. சட்டென்று நேர்க்கோடு போல் ஆகியவன் வகுப்பில் தாங்கள் குசு குசுவென படிக்கும் பாடல் நினைவுக்கு வரவே
'விக்ஸ் விக்ஸ் விக்ஸ்
வீட்டு நம்பர் சிக்ஸ்
அதோ பாரு ரெயிலு
ரெயிலு மேலே குயிலு
குயிலப் பாத்துச் சையிற்றடிச்சா
ஆறு மாதம் ஜெயிலு
ஜெயில விட்டு வெளிய வந்தா
சுப்பர் சாரு சையிலு'
பாடி முடிந்த கையோடு சூட்டி நங்கியும் கவிதாவும் கைதட்டினார்கள். பெருமிதத்துடன் சிறுவன் மேடையை விட்டு இறங்கினான்.
'அடுத்ததாக சூட்டி நங்கி ஒரு பாடல் பாடுவார்.' தலையை ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுச் சென்றவள்
'பிசு பூசா நேவா
சென் பவுடர் தெம்மா
பொண்ணக் கிவ்வே தேவத்துற
பகீலா தியென்னே மடவத்துற
கண்ணக் கிவ்வே பாஸ்போட்
அறங் தியன்னே காட்போட்
தம்பியுடன் சேர்ந்து கவிதாவும் குலுங்கி குலுங்கிச் சிரித்தாள். பாடலின் பொருளை சிறிது புரிந்து கொள்ளாத தம்பி விளக்கம் கேட்க,
'அதுடா தம்பி ஒரு பைத்தியப் பூனை முழுகிச்சாம், பிறகு வாசப் பவுடர் போட்டுதாம், குடிக்கச் சொன்னது தேத்தண்ணி, ஆனா குடிச்சது சேற்றுத் தண்ணி, எடுக்கச் சொன்னது பாஸ்போட், எடுத்தது காட்போட்';.
பாடலின் பொருளை முழுதும் புரிந்து கொண்டான் சிறுவன். ஆதன் பின்னர் அருகில் கிடந்த சிறு தடியை எடுத்துக் கொண்ட சூட்டி நங்கி, 'ஏய் பிள்ளைகளே! எல்லாரும் வாங்க, நான் சொல்லுறத வடிவாக் கேளுங்க.'
சிறுவனிடம் கணக்குகள் கேட்டாள்.பிழையாக சொன்னவுடன் பிரம்பால் அடித்தாள்.
'இண்டைக்கு எங்கட அப்பாட்ட சொல்லித் தாறன்'.
தம்பிக்கு அடித்தவுடன் கோபங் கொண்ட கவிதா,சூட்டி நங்கியின் முகத்தோடு முகத்தை முட்டுமாற் போல் நின்று
'தம்பிக்கு ஏன் அடித்தீங்க'?
'நான் ரீச்சர் அது தான் அடித்தேன்'.
அப்பிடி அடிக்க ஏலா,
'நான் ரீச்சர் என்றா அடிப்பன்.
நான் எங்கட பள்ளிகூடத்தில எத்தின அடி வேண்டி இருக்கிறன் தெரியுமா உங்களுக்கு?
சூட்டி நங்கியின் ராங்கியான வார்த்தைகள்,சின்னவனை அடிபட்ட நாகம் போல் கோபம் கொள்ள வைத்தது.
மெழுகுவர்த்தியில் வடியும் மெழுகு போன்று கன்னங்கள் வழியே கண்ணீர் ஓயாது வடிந்து கொண்டிருந்தது.தம்பியையும் அணைத்துக்கொண்டு அம்மாவிடம் செல்ல எண்ணிய கவிதா,திடீரென சற்றுத் தயங்கினாள்.
சூட்டிநங்கியின் மனமும் ,ஏதேதோ ஆதங்கப்படத் தொடங்கியது.சின்னவன் தனது வீட்டிற்குள் நுழைய,அவளும் தனது வீட்டுக்குப் பாய்தோடி விட்டாள்.
'அவங்களுக்கும் நமக்கும்முந்திக் காலத்தில இருந்தே சண்டையாமே
அதுதான் போல எங்களுக்கும் சண்டை வந்திருக்கு.அவங்கட வீட்ட வந்த மீசைக்கார ஆக்கள் எங்களோட சண்டைக்கு வருவாங்களோ?அம்மாவும்,நானும் தானே வீட்டில் தனியா இருக்கிறோம்.நான் சிங்களம் இல்லைத்தானே?ரீச்சர் தானே அதுதானே அடிச்சன்.அதுவும் மெதுவாகத்தானே, இப்பிடி எங்கள மாதிரி விளையாட்டில தான் தமிழ் ஆக்களுக்கும்,சிங்கள ஆக்களுக்கும் சண்டை வந்திருக்கும் போல அம்மாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுப் போடுவா.கையில் வைத்திருந்த பிரம்பை உற்றுப் பார்த்தாள் சூட்டி நங்கி.பின்னர் ஏய் சனியனே!நீதான் எங்களுக்குள்ள சண்டையை உண்டாக்கின.சின்னத்தம்பி பாவம் தானே?நீ வேணாம் எனக்கு.நீ வேணாம் எனக்கு.என்றபடி முழங்காலை மடக்கி இரண்டு மூன்று துண்டுகளாய் உடைத்து வேலியோரம் வீசி விட்டு யன்னல் கம்பிகளின் வழியே எட்டி எட்டிப் பார்த்தாள்.
குழந்தையின் மனதினுள்ளே பயபீதி ஊடுருவி நின்றது.முகத்தில் கவலையின் குறியீடு காணப்பட்டது.
'சின்னத்தம்பி பாவம் நெல்லியக்காவும் நல்லவ.அவங்களுக்கு பிஸ்கற் கொண்டு போய் கொடுப்போமா?ஐயோ (மட்டபே) -எனக்கு ஏலா-அவங்கட வீட்ட போக பயமா இருக்கு.
சின்னவனும்,கவிதாவும் தங்கள் தாயிடம் முறைப்பாடு சொல்லப் புறப்பட்டாலும் பின்னர் தயங்கி நின்றார்கள்.
'அம்மா சொல்லுவா கீரியும்,பாம்பும் போல அவங்களுக்கும் நமக்கும் பகை.சொல்லச் சொல்ல கேட்காம விளையாடப் போறீங்க.மெத்தக் கவனம்.சின்னப் பிரச்சனை எனறாலும் அவங்க கத்தியையும்,கம்பு தடிகளையும் தூக்கிக்கொண்டு வருவாங்க.முந்திக் காலத்தில இருந்து இன்று வரைக்கும் மாறி,மாறி எவ்வளவோ பிரச்சனை நடந்து வருகுது.
நீங்க சின்னப்பிள்ளைகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது.அவங்க வேற இனம் நாம வேற இனம்.அதால தான் நான் சொல்லுறன் மெத்தக் கவனம்.நடு றோட்டில நின்று நக்குப்பட்ட சீவியம் சீவக்கிறம்.இதெல்லாம் என்னத்தால வந்தது என்று நினைக்கிறீங்க?இந்த நாசம் விழுந்த சண்டையால தான்.இந்தச் சண்டை எப்ப ஓயுதோ?; ஊரில இருந்த பாடில்லை,அங்க ஒழுங்காவும் இருக்க விடமாட்டாங்க.அப்பாவுக்குப் பெரிய நாட்டுக்கு போற வாய்ப்பும் இல்லை.சின்ன நாட்டுக்குப் போற வாய்ப்பும் இல்லை.நமக்கு உதவ வெளிநாட்டில யார் இருக்கிறாh?;.வீட்டு வாடகைக்கு மாதா மாதம் காச அள்ளி இறைக்கனும்.எந்த நேரமும் நம்ம தலையில இடி விழலாம்.தாய் பிள்ளைகளையும் சொந்த பந்தங்களையும் கண்டு கதைக்காமலேயே செத்துப்போய்விடுவோம் போல ஊரிலயும்,அயலிலயும் எத்தின செத்த வீடுகள் நடந்தது.யாரிட முகத்தில முழிச்சோம்.பொலிசும்,ராணுவமும் நடுச்சாமத்திலயும் வந்து கதவத் தட்டி துலைப்பாங்கள்.சின்னஞ்சிறுசுகளையும்,குமர் குட்டிகளையும் வைத்துக் கொண்டு,பாஷையும் தெரியாம எங்கட ஈரல் குல கலங்கும்.எந்த நேரமும் எதுவும் நடக்கும்.நாலும் நடந்தாலும் நமக்காக கேட்கப் பறிக்க யார் இருக்கிறாங்க.? சடுதியாய் சாகிறதுக்கெண்டே நாம பிறந்திருக்கிற மாதிரி,காலத்துக்கு காலம் கலவரம் வரும்.தமிழறாப் பிறந்திட்டோம் அதனால தான் இந்தத் துயரமோ தெரியாது.எங்கட காலத்தோட தலை முழுகிடலாம் எண்டு பார்த்தா அது மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில ஏறின கதையா மாறி வருது.வீடு வாசல்களோட போய் குந்தியிருந்து நாலுபிடிச்சோறு எப்ப நிம்மதியாச் சாப்பிடப் போகிறோம்.அதுக்குப் பிறகு தான் நமக்கெல்லாம் நிம்மதி.அது வரைக்கும் நமக்குச் சிறுப்பினை மாறாது.'
அம்மா என்றோ கூறிய கதையெல்லாம் நினைவுக்கு வர இருவரும் தயங்கி நின்றார்கள்.
சுp தினங்கனிள் பின் பின்னர் ஓர் நாள் தொலைபேசித்தொடார்பு மின்னல் வேகத்தில் பொறுப்பான இராணுவ முகாம்களிடையே குசுகுசுத்தன.
மின் காந்தம் பாய்ச்சப்பட்ட சுருள் சுருள் கம்பிகள் முகாமைச் சுற்றியிருந்தன.பொறுப்பான அதிகாரிகளால் திட்டம் ஒன்று போடப்பட்டது.அத்திட்டத்தின்படி கரிய இருள் மண்டிய இரவொன்றில் கவிதாவின் வீட்டைச் சுற்றி இராணுவத் துருப்பினர் குவிக்கப்பட்டனர்.சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக துருப்பினர் ஓட்டி வந்த ரக்வண்டிகளையும்,ஐPப்வண்டிகளையும் சுமார் இருநூறு மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிறுத்தி இருந்தனர்.கிடைக்கப்பெற்ற தகவல் உண்மை தான்.
அவர்களது வீட்டின் தென்கிழக்கு மூலையில் பப்பாசி மரத்தின் அருகாக ஆழமாய் தோண்டி இரவு வேளையில் புதைத்திருக்கிறார்கள்.
கவிதா வீட்டார் புதைத்ததற்கு போதிய ஆதாரம் உண்டு.
அருகிலுள்ள மேல்மாடி வீடுகளில் இருந்தார்கள.; கண்ணூடாக கண்ட சம்பவம் இது.கறுப்பு பொலித்தீன் பையொன்றில் இருந்த பொருளைகவிதாவின் அம்மா கையிலிருந்த டோச் லைற்றைப் பிடிக்க கவிதாவின் அப்பா ஆழமான கிடங்கொன்றை வெட்டிப் புதைத்தார்.
பின்னர் அதன் மேல் நன்றாக மண் போட்டு மூடினார்கள்.அவர்களது குழந்தைகளுக்கு இது தெரியாது.இரவு வேளை என்பதால் குழந்தைகள் தூங்கிவிட்டார்கள்.
தகவல் பொய்யானது அல்ல நம்பகமானது.துருப்புக்கள் உசார் அடைந்தனர்.அவர்கள் வீட்டைச்சுற்றி காவல் போட்டனர்.
முக்கியமான சந்திகளிலும் ராணுவத்தினரை நிறுத்தினர்.மேலிடத்து உத்தரவு புதைக்கப்பட்ட பொருளை முதலில் தோண்டி எடுக்க வேண்டும்.அதன் பின்னர் குடும்ப தலைவரை கைது செய்ய வேண்டும்.
திட்டமிட்டபடி இயங்கும் முகமாக கையில் கொண்டு வந்த மண்வெட்டியால் மிக ஆர்வமும் எச்சரிக்கையும் பொதிந்த மனோநிலையில் உரிய இடத்தைத் தோண்டத் தொடங்கினர்.சிறிது தோண்டிய பின் அந்த கறுப்பு பொலித்தீன் பேக் கண்ணுக்குப் புலப்பட்டது.
பொது மக்கள் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல் உண்மையானது என உணர்ந்து கொண்டனர்.
மேலிடத்தில் இருந்து கைத்தொலைபேசி அழைப்புக்கள் அடிக்கடி மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
உரிய பொறுப்பானவர்கள் அதற்கு உரித்தான பதில்களை பேசிக் கொண்டிருந்தனர்.
மண்ணை அகற்றி மூக்கை வளைத்து ஒரு இராணுவவீரன் துணிகரமாக அந்தக் கறுப்பு பேக்கை மேலே தூக்கி வைத்தான்.
என்ன அதிசயம்!என்ன ஆச்சரியம்!
கிடங்கின் அருகில் குவிந்து நின்ற படையினர் சற்றுப் பின் வாங்கினர்.அவர்கள் எல்லோரினதும் வாயும் மூக்கும் வலது புறமாகவும்,இடது புறமாகவும் மாறி மாறிக் கோணத் தொடங்கின.மிக அருகில் நெருங்க முடியவில்லை.
அவ்வேளையில் அச்சூழலில் வாழ்ந்த மக்கள் நித்திரையில் துயில் கொண்டிருந்தனர்.நாற்புறமும் நாய்களின் குரைப்புச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தன. மேகங்கள் ஒன்றையொன்று துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தன.இரண்டு நாட்களின் முன் தினம் அவ்வீதியில் ஒரு பூனை காரில் அடிபட்டு செத்துக் கிடந்தது.அவ்வீதி வழியாகச் சென்N;றார் அனேகர் கண்டும் காணாதது போன்று சென்று கொண்டிருந்தனர்.
கவிதாவின் தாயும் தந்தையும் அன்று இரவு வேளை அதனை எடுத்துப் புதைத்தனர்.
ஊதிப் பருத்துப் புழுத்து நாறும் அந்த நாற்றத்தின் முன்னே நின்ற படையினர் திணறிப்போனார்கள்.மீண்டும் தோண்டியெடுத்த அந்த அபூர்வ பொதியை புதைத்து விட்டு கனரக வாகனங்களிலும் சாதாரண வாகனங்களிலும் புகையாகப் பறந்தனர். இவை எதுவும் அறியாது காவல் நிலையில் நின்று ஜீப்வண்டிக்குள்பாய்தேறிய பண்டார மெல்ல வீரசிங்காவின் காதுக்குள் இரகசியமாக என்ன மச்சான் புலியைப்பிடிச்சாச்சா? இல்லை மச்சான் புளுத்த பூணையை புடிச்சோம் என்றான் கடுப்புடன். மறு நாட் காலையில் இச்சம்பவம் பரபரப்பாகப் பேசப்படடது.
கவிதாவின் தாய் தந்தையிடையே இச்சம்பவம் ஒருவித அச்சத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியிருந்தது.பிள்ளைகள் இருவரும் இது பற்றி எதுவும் அறியமாட்டார்கள்.
'நாம ஊரோட போய் வாழுறதே உசிதமான காரியம்.தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்கு காகம் என்று சொல்லுவாங்க.
செத்து தொலைந்தாலும் பரவாயில்லை நம்மட அயல்அட்டைகளோடையும் வயல் வாய்க்காலோடையும் ஒதுங்கிடுவோம்.'என்ற ஒரே முடிவுக்கு வந்தனர்.
'நான் சின்னத் தம்பிக்கு அடித்து சண்டை போடடேன் தானே அதுதான் அவர்கள் இந்த ஊரைவிட்டுப் போகப் போகின்றார்கள்.-(அனே பவ்வு தமாய் ஏ கட்டிய)- ஐயோ பாவம் தானே அவர்கள்.
எனது இந்தக் கெட்ட காரியத்தால் அவர்களது மனசு எவ்வளவோ துக்கப்பட்டு துன்பப்படுமல்லவா?நெல்லி அக்காவின் அம்மா ஒரு நாள் எனக்கு தோசே சம்போல் சாப்பிடத் தந்து தலையை அன்பாகத் தடவி விட்டார்.அக்காவுக்கும் தம்பிக்கும் நடுவில் நான் இருக்க அந்த அம்மா எனக்கும் சோற்றைக் குழைத்து ஊட்டிவிட்டார்.
நான் சின்னப் பிள்ளை தானே பெரியவர்கள் மாதிரி சண்டை போட்டு கொலை செய்தேனா?கொள்ளையடித்தேனா? இருக்கிற இடத்தை விட்டுத் துரத்தியடித்தேனா?அவர்கள் வீடு வாசலை நொறுக்கினேனா?முந்தி முந்திக் காலத்தில சண்டை பிடிச்ச மாதிரி சண்டை பிடிச்சுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.சேர்ந்து விளையாடத்தான் விருப்பம்.
கொஞ்ச நாள் தான் பழகி ஆனால் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.இனி எல்லாம் தொலைஞ்சு போகப் போகுதோ.எப்படியும் அவர்களை இங்கிருந்து போகவிடாமல் செய்ய வேண்டும்.அதற்கு என்ன வழி?
நெல்லியக்காவுக்கு ஒரு வடிவான பொம்மையும் சின்னத்தம்பிக்கு ஒருபச்சை நிறத்தில் நீளக் கோச்சியும் கொடுப்போம்.அதோட கோபமெல்லாம் மறைஞ்சு போயிடும்.
சூட்டிநங்கியின் சின்ன மனசுக்குள் ஒரு ரோஜா சிரிக்க ஆரம்பித்தது.அவர்கள் பயணத்தை நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
சில வாரங்களின் பின்;;
ஒரு போயா தினம் வந்த ஒர்நாள்.வீட்டைக்காலி பண்ணும் நோக்கில்கவிதா வீட்டார் சாமான் சட்டுக்களை லொறியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.விட்டில் பூச்சியாய் பறந்தடிக்கும் எண்ணத்தோடு தாய் பிரேமலதா கொடுத்த கிரிபத்தைச் சாப்பிட முனைந்தாள் சூட்டிநங்கி. 'டேய் சின்னத்தம்பி வாங்கி நா சொன்னா வெளங்கி இவ்வாறு கொச்சையாக தமிழ் கதைப்பதை பெருமிதமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
கவிதாவும்,தம்பியும் தங்கள் பாடப்புத்தகங்கள்,கொப்பிகள் என்று சேர்த்து அடுக்கினார்கள்.
எதை எதையோ எண்ணியபடி தாய் பிரேமலதாவுக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு பூனைகுட்டி போல பதுங்கிப் பதுங்கி. கவிதா வீட்டு முற்றத்தில் வந்து நின்றாள் சூட்டி நங்கி.
கையிலிருந்த பொம்மையையும் கோச்சியையும் இருவருக்கும் கொடுத்த பின்னர்
கவிதாவும்,சின்னத்தம்பியும் சூட்டி நங்கியின் அருகில் போய் நின்றார்கள்.
'நான் இனி உங்களோட சண்டை பிடிக்கமாட்டன்.நீங்கள் இங்கேயே இருங்க.'
திடீரென்று கவிதாவின் அம்மாவை நோக்கி குசினிக்குள் ஓடி,
'அன்ரி..... அன்ரி....நான் சின்னத்தம்பியோட சண்டை போடமாட்டன்.நீங்கள் இங்கேயே இருங்க.
தெரியாமத்தான் அன்ரி நான் சின்னத்தம்பிக்கு அடிச்சன்.நீங்க போக வேணாம் இஞ்சேயே இருங்க.இனி நான் அவனுக்கு அடிக்கமாட்டன.; கவனமாய் பார்த்துக்கொள்ளுவன்' என்ற வண்ணம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
'நாங்க வேறு வீடு பாத்திற்றம்.அங்கதான் போகப்போறம்.'என்றாள் கவிதாவின் தாயார்.
பரபரப்பாக சாமான் சட்டுக்களை வாகனத்தில் ஏற்றி முடித்தார்கள்.
பின்னர் விரைந்து செல்ல தயாராகி நின்ற வாகனத்தில் வீட்டார் ஏறிக் கொண்டார்கள்.
கவிதாவும்,சின்னத்தம்பியும்,சூட்டிநங்கியிடம் வழிப்பயணம் சொல்லி ஏறிக்கொள்ள, கிடங்கு முடங்கான பாதையில் ஆடி அசைந்து அவர்களைச் சுமந்தபடிஅவ்வாகனம் அவ்விடத்தை விட்டு மறைந்தது.
கூடி விளையாடும் மணல்மேட்டில் அவர்கள் சென்ற வீதியையே இமைகொட்டாமல், பார்த்தபடி தனியாக நின்றாள் சூட்டி நங்கி.
முற்றும்.
No comments:
Post a Comment