சிப்பிலியாட்டம் -மாற்றான்
இன்றைக்கு இருக்கும்
பெரிசுகளும்(நயின்ரிகளும்) மறந்துவிட்டிருக்கக்கூடிய ஒரு விளையாட்டு
சிப்பிலியாட்டம்;அந்த மறதியின் அரசியலைப் பேசுவதல்ல இந்த அரசியல்
பக்கத்துக்கான கட்டுரை.அதுவும் பேசப்பட வேண்டிய விவகாரம் என்றாலும்
இப்போது நாம் சிப்பிலியாடப்படுவதை இங்கு பேசுவதோடு இந்தச் சந்திப்பை நிறுத்திக்கொள்வோம்.மணலுக்குள் புதைத்துவைத்த குச்சியைக் கையில் ஏந்தியிருக்க,கண்ணைப் பொத்தியவர் எம்மைத்
தள்ளியபடி 'எவடம்,எவடம்' என்று கேட்டுக்கொண்டே சிறிய
இடமொன்றுக்குள் முன்னும்-பின்னும்,இடமும்-வலமுமாய்ச் சிப்பிலியாட்டிவிட்டு
ஒருஇடத்தில் போட்டு,கை மணலாலேயே மூட வைத்து,மீண்டும் சிப்பிலியாட்டி தொடங்கிய இடத்தில் கொண்டுவந்து விட்டு விடுவார்;இப்போது வைத்த இடத்தைக் கண்டுபிடித்து,குச்சியை எடுத்துக்
காட்ட வேண்டும்.அவர் 'எவடம்' கேட்கும்போது நாங்கள் 'புளியடி,புளியடி' என்று சொல்லி வருவோம்.ஆயினும் எந்தப் புளியடியில் போய்த் தேடினாலும் நாம் போட்ட குச்சி இருக்காது.
இன்று எம்மைச்
சிப்பிலியாட்டுகிற அரசியல் சக்திகள் நாம் தொலைத்த தீர்வை கண்டடைய இடம் தராத வகையில்
மிக மோசமாக சுற்ற வைக்கிறார்கள்.அரசு-தமிழ்த்தலைமை-மேலாதிக்க வல்லரசு என்ற முத்தரப்பு எம்மை திக்குத் திசை அறியாத வகையில் சிப்பிலியாட்டுகிறார்கள்.தமிழ்த் தலைமை எம்மால் தெரிவுசெய்யப்பட்ட,எமக்கான,எம்மைப் பிரதித்துவம் செய்யும் அமைப்பு;எம்மை அடக்கியாளும்
அரசையும்,ஆதிக்க அரசியலை மேற்கொள்ளும் மேலாதிக்க வல்லரசையும்
அதனோடு சம இடத்தில் வைத்து எப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி நியாயமானதுதான்;ஆயினும், ஜனநாயகத்தின் பேரால் எம்முன் நிறுத்தப்படுகிற
அவர்கள் அப்படியே எமது அபிலாசைகளை நிறைவு செய்ய அவசியமில்லை.எம்முள்
ஒரு பகுதியே அவர்கள் என்றாலும் எம்மில் வேறான தனி விருப்பங்களை உடைய பகுதியொன்றின்
தேவைகளை நிறைவு செய்வதிலேயே அவர்களது கவனம் குவிய வாய்ப்புள்ளது அல்லவா?
இந்த மூன்று தரப்பும்
பண்ணுகிற அரசியல் சதுராட்டத்தில் எமக்கான விடுதலை தொலைந்து போய்விடாமல்,எமக்கான
பாதையைக் கண்டடைய நாம் கொள்ளவேண்டிய விழிப்புணர்வு குறித்து எச்சரிக்கையாய் இருப்பது
அவசியம்.போகிற போக்கில் அவ்வப்போது ஒவ்வொன்றுக்கும் ஆத்திரம்
கொண்டு,எதையாவது அவசரகோலமாய் சொல்லிப் போயிருப்போம்.அப்படியே ஓடிக்கொண்டிருந்தால் தலையில் சம்பல் அரைக்கிறவர்கள் அரைத்து எல்லாவற்றையும்
வழித்தெடுத்துவிடுவார்கள்;எமது அடிமைத்தனம் நீடிக்கவே செய்யும்.கடந்து போகிறவை பற்றி பார்க்கும்போது எமக்கான பாதை பற்றித் தெளிவு பெறவும்
இயலும்.
-1-
பொதுநலவாய
உச்சி மாநாடு என்ற சிறப்புத் திருவிழா முடிந்து,வரவு-செலவுத்திட்டம் என்ற அடுத்த திருவிழாவும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.சம்பள ஏற்றம் எப்படி-எவ்வளவு என்று நாம் புலம்பிக்கொண்டிருக்க,வலது கையால் தருவதை இடது கையால் பிடுங்கும் கைங்கரியத்தில் அரசு கில்லாடித்தனமாய்
வெற்றிபெற்றுவருகிறது.அபிவிருத்தி என்ற பெயரால் பண முதலைகளுக்கு
வாய்பு வசதிகளைப் பெருக்கி,வற்றும் வயிற்று வெறுமையை வெளிப்படுத்த
வீதிக்கு வரும் மக்களை கொன்றொழித்து அடக்கிவைக்க விரையும் இராணுவத்துக்கான வீதி அபிவிருத்தியும்
அமோகமாய் நடந்தேறுகிறது.விலையேற்றம் மோசமாவது தவறான அரசியல் போக்கோடும்
தொடர்பானது என்பதை மறைத்து,அரசு விரும்பாமலே அவரவர் விலையேற்றம்
செய்துவிடுகிறார்கள் என்பதுபோல மக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள்.இதற்கான அண்மைக்கால உதாரணம் பஸ் கட்டண உயர்வு.பஸ் உரிமையாளர்கள்
நீதிமன்றத்தையும் நாடித்தான் கட்டண உயர்வைச் செய்ய இயலுமாம்!அப்படியும்
அவர்கள் விரும்பிய உயர்வை விடவே இல்லையாம்.
இந்த ஏமாற்றுகள்
ஏதோ ஒரு சில அரசியல்வாதிகளது கைங்கரியம் என்பதற்கில்லை.பெரும்
வலைப்பின்னலோடு பணமுதலைகள் தமது ஆடம்பர வாழ்வைப் பாதுகாக்கும் அரண்களைப் பல்வேறு தளங்களின்
வாயிலாக மேற்கொள்வதின் ஒரு பகுதியே அரசியல்வாதிகளது இந்தத் திருகுதாளங்கள்.இந்த ஏமாற்றும் கலையில் இவர்கள் வல்லவர்களில்லை என்று கண்டால் பணமுதலைகள் இன்னொரு
கபடதாரியை ஜனநாயக வழியில் நாமே தெரிவுசெய்ய வாய்ப்பும் தந்து மாற்ற ஏற்றதாகத்தான் எமது
அரசியல் முறை உள்ளது.அவர்களும் போதிய காலம் ஏமாற்றி அம்பலமானபின்னர்
மீண்டும் பழையவர் அல்லது இன்னொரு 'கறைபடியாத கை'."எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று
வானொலியும் பாடிக்கொண்டே இருக்கிறது;ஏமாற நாம் உடன்பட இவ்வளவு
என்ற கால வரையறை எதுவும் இல்லை என்பதால் ஆள்மாற்றி ஆள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த
ஏமாற்றும் தளத்தில் பிரதானமான ஒன்று ஊடகம்.எம்மைச் சிந்திக்கவும் இடம் தராமல்,நீங்களே தீர்மானிக்கிறீர்கள் என்று பழியையும் எம்மீதே போட்டு,எதைத்தந்து எந்த முடிவை எப்படி எடுப்பது என்பதற்கேற்ப வடிவமைத்துத் தருகிற
அவர்களின் தகவல்களில் இருந்து நாம் வந்தடைகிற இடம் பண முதலைகளைப் பாதுகாக்கும் அரண்.அந்த இடத்தில் சரியாகவே வந்து சேர்ந்திருக்கிறோம் என்று கணிசமான காலம் இருந்து
உழன்ற பின்னர்,மாற்றம் வேண்டுமா - இவரைக்
கவனியுங்கள் என்று ஊடகம் விளம்பரப்படுத்தி எம்தலைமேல் ஏற்றும் இன்னொரு கபடதாரி மற்றொரு
அரணுக்குள் மேலும் கணிசமான காலத்துக்கு எம்மை இட்டுவைப்பார்.கூட்டு
முன்னணி அரசு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 1970 இல்
அதிகாரத்துக்கு வந்து,புதிய குடியரசு அமைப்பொன்றைக் கொண்டுவந்து
இன முரண்பாட்டை கூர்மைப்பட வைத்தது;அவர்களது தவறுகள்
ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு ஐ.தே.க.அரசு அதிகாரம்பெற வகைசெய்தது."யுத்தமென்றால் யுத்தம்"
என்று அதிகாரத்துக்கு வந்த 1977 இலிருந்து முன்னெடுத்த
போரின் வாயிலாகவே காலத்தை ஓட்ட முனைந்தது அந்த ஐ.தே.க.அரசு."பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட
முடியாது,அதனோடு எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்"
என்று அந்த வேதாளம் வேதாந்தம் வேறு ஓதியது. அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலான(ஜே.வி.பி.) ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவந்தபோதிலும்,இன மோதலை வைத்துக் காலம்தள்ள விரும்பினர்.
முள்ளிவாய்க்கால்
முடிவு அவர்கள் இருந்திருந்தால் நடந்தேறியிராது என்ற கருத்து எம்மில் பலரிடம் உண்டு.அதில் ஒரு
பகுதி உண்மை உண்டு.புலிகளை அழித்த இவர்களுக்கும் புலம்பெயர்ந்த
புலிப் பூச்சாண்டியைக் காட்டித்தான் சிங்கள மக்களை ஏமாற்ற வேண்டியுள்ளது.என்றாலும் உள்ளூரில் முழுதாக யுத்தம் இல்லாத சூழல் இவர்களுக்கு அவசியப்படுவதுபோல
ஐ.தே.க.விற்கு இருந்திருக்காது.மற்றொருபகுதி உண்மை,முள்ளிவாய்க்காலையும் விட அதிகமாகவே
நீண்ட காலத்துக்கு அலங்கோலப்படும்படி யுத்தத்தை தொடர்ந்திருப்பார்கள் ஐ.தே.க.வினர்;எங்களுடைய தலைமையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சண்டைபோட்டுக்
கொண்டு இருந்திருப்பார்கள்.அது இல்லாமல் சீவிக்க முடியாத யுத்தப்பிரியர்களுக்கு
இது சிரமதசைதான்.
இந்தச் சண்டையின்
சிப்பிலியாட்டத்திலிருந்து கட்டுரையின் போக்கை இப்போதைக்கு காக்க அவசியமுள்ளது.
ஐ.தே.க. அவ்வாறு யுத்தத்தை நீடிக்க
விரும்பியபோதிலும்,சிங்கள மக்கள் சமாதானத்தையே வேண்டி நின்றார்கள்.சமாதானத்தை முன்னிறுத்திய ஐக்கிய முன்னணி(சிறீலங்கா சுதந்திரக்
கட்சி தலைமையில்) அரசாங்கம் ஒன்று 1994இல்
மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.இருதரப்பினரது தவறுகளினால் மீண்டும்
தொடங்கிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாலேயே இந்த அரசு எவ்வளவுதான் வயிற்றில்
அடித்தாலும் நீடிக்க முடிகிறது.மீண்டும் ஐ.தே.க. அதிகாரத்தைப் பெற எவ்வளவு
முயன்றும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை காவாந்து பண்ணி நிற்கிறது.ஆயினும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற அடிமடையர்களாக மக்கள் இருக்கப்போவதில்லை.அதேவேளை, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்குவதோடு
தமது அடிப்படைப் பிரச்சனைகளின் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்கும் சரியான மார்க்கத்தைக்
கண்டடையும் முயற்சிக்கான நாட்டம் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படாத இடைவெளி இருந்துகொண்டே
உள்ளது.யுத்த வடு ஆறும் கால அவகாசம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?
-2-
முழு
நாடும் சார்ந்த ஆரோக்கியமான அந்த மாற்றத்தின் வாயிலாகவே ஏமாற்றுகிறவர் சுழலில் இருந்து
விடுபட்டு,மக்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களை வென்றெடுக்க இயலும்.பணமுதலைகளது
அபிலாசையைவிட்டு மக்களுக்கான தேவைகளைத் தீர்ப்பது முதல்நிலை அடைந்தால்,இனவாதத்தை முன்வைத்து சண்டை சச்சரவுகளை நீடிப்பதால் தமது அரசை நீடிக்கும் அவசியம்
எழாது.இன்றைய அரசும் மக்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைவிடவும்,அதிகாரத்தில் உள்ள சுரண்டல் கும்பலைக் கொழுக்க வைக்கவே நாட்டம் கொண்டது.அதன் வெளிப்பாடாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் தனக்கு அளவான இனவாதத்தை கக்கிவருகிறது.
யுத்தக்
குற்றத்தை விசாரிக்க வேண்டுமென்று பிரித்தானியா சொன்னால்,உன்னுடைய
விசாரணை முப்பது வருடம் என்றால் என்னுடையது அறுபது வருடம் என்று சொல்லிக் காலம் கடத்த
முயல்கின்றனர்.அயர்லாந்துக் குற்றவாளி அனுராதபுரத்தை ஒருக்கால்
கடக்க முடியாவிட்டால்,மறுகால் யாழ்ப்பாணம் போக இயலாதென்று இல்லையே?போனார்கள்,என்ன பெரிதாக ஆகிவிட்டது?பிரித்தானியாவைப் புண்ணிய பூமியாக நினைக்கிறவர்களல்ல,இந்த நாட்டின் உழைக்கும் மக்களே முக்கியம்.அவர்களது
நீண்டகால நலங்களுக்கு விரோதமாக தமிழ்-சிங்கள-முஸ்லிம்
மக்களைப் பிளவுபடுத்துவதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன.
பிரித்தானியப்
பிரதமரோடு மொட்டைமாடியிலிருந்து மக்களைப் பார்த்த நம்ம தலைவர்கள் நீங்கள் சிங்களத்தில்
செய்வதைத் தமிழில் செய்கிறார்கள்;அவ்வளவுதானே வித்தியாசம்!நீங்கள் பொது உணர்வோடு உங்களுக்கு அவசியமான இனவாதத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள்;பிரச்சனைத் தீர்வின் பொருட்டு மக்கள் இனபேதங்கடந்து ஐக்கியப்பட்டுவிடக் கூடாது
என்பதில் மட்டும் கவனமாக இருப்பீர்கள்.
மக்கள்
அவ்வாறு ஐக்கியப்பட்டுவிடக்கூடாது என்பது இவர்களது கருத்தென்றால்,முழுமையாக
இனவாதத்தையே அடிப்படையாகக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் இன்னும் மோசமான மோதல்களை மக்கள்
மத்தியில் விதைப்பவர்களாக இருக்கிறார்கள்.இவர்களது கபடத்தை அம்பலப்படுத்துகிறோம்
அல்லது எதிர்க்கிறோம் என்று அந்த மோசமான இனவாதிகளின் சதிக்குள் சிக்கக்கூடாது.பிரித்தானியாவையோ அமரிக்காவையோ எமது விமோசனத்துக்குரியவர்களாகக் காட்டும் இனவாதிகள்
இத்தகையவர்கள்.அந்த 'சர்வதேச சமூகம்'
அழுத்தம் கொடுத்துப் பொன்முட்டை எதுவும் கிடைப்பதில்லை;எந்தப் பொன்முட்டையிடும் வாத்தையும் கசாப்புக்கடைக்கு அனுப்பி ஏப்பம்விடுவதே
அந்த மேலாதிக்க சக்திகளின் வாடிக்கை.
வட்டுக்கோட்டையில்
தூக்கிய காவடி முள்ளிவாய்க்காலுக்கு போவான் ஏன்,பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்தும்
கழித்தல் பெறுமானத்தில் நிலைமை முடிந்தது ஏன் என மறுமதிப்பீடும்,எமது தவறுகள் குறித்த சுய விமரிசனமும் செய்யாமல்,துன்பியலுக்கு
பிறரையே குற்றம்சாட்டி,ஓடிய திசையில் தொடரோட்டம் நிகழ்த்த விரும்புகிறவர்களாக
இந்த இனவாதிகள் இருக்கிறார்கள்.இவர்கள் தமிழபிமானத்தின் பேரால்
இந்த மண்ணில் உழைக்கும் தமிழ் மக்களை அவல வாழ்வு வாழவிட்டு தாங்கள் உப்பரிகைகளில் நீச்சலடிக்க
நினைக்கின்றனர்.
இவர்களையும் சமாளித்தபடி,இவர்களளவு சண்டப்பிரசண்ட இனவாதமாக இல்லாத-ஏனைய இனங்களின் உழைக்கும் மக்களோடு ஐக்கியப்பட அனுமதிக்காத அளவிலான இனவாதத்தை முன்னெடுக்கும் தலைமை கூட்டமைப்பு என்பதாக வாய்த்துள்ளது.யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் முற்போக்கான தேசிய உணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்தபோது,ஜி.ஜி.பொன்னம்பலம் இனவாத அரசியலை முன்னிறுத்தினார்.அதன் தொடர் வளர்ச்சியே முள்ளிவாய்க்கால் வரை நீண்டது.இது குறித்த மறு மதிப்பீடும்,யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸின் இன்றைய பரிணமிப்பும் பற்றிய தேடல் இன்றைய தமிழ்த் தலைமையிடமும் இல்லை.
நேற்று வரை முன்னெடுத்த
பிரிவினைவாதத்தை இவர்கள் கைவிடும்போது,இவர்களைக் காட்டிக் கொடுப்பவர்களாக
இன்றைய அதிதீவிரவாத ஈழ வாதிகள் குற்றம்சாட்டுவர்.இவர்களை இயக்கும்
மேலாதிக்க சக்தியின் அபிலாசையை நிறைவேற்ற முனையும்போது,இவர்கள்
மிதமான இனவாதத்துக்கு இறங்கி அரசோடு இணங்கிவருகின்றனர்.யுத்தக்
குற்றவாளியாக ஈழவாதிகள் குற்றம் சாட்டும் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர்
பதவிப்பிரமாணம் மேற்கொள்வது இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பே!!!
No comments:
Post a Comment