Monday, April 28, 2014



மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாகும்.1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் வெடித்த போராட்டத்தினால் இன்று நாம் அனுபவிக்கும் 8 மணிநேர வேலை என்கிற திட்டம் கிடைத்தது

அறிந்ததே.!ஆனால் அங்கு மேதினம் என்ற நிகழ்வே இல்லை. அதற்குப் பதிலாக தொழிலாளர் தினம் என்று ,மத்திய விடுமுறை (மத்திய அரசு, DC மற்றும் அமெரிக்க பிரதேசங்கள்) மற்றும் மாநில விடுமுறை கொண்டாட்டங்கள் அணிவகுப்பு, திறந்தவெளி விருந்துகள் எல்லாமே செப்டம்பர் மாதத்து முதல் திங்கள் அன்று தான் நடைபெறுகிறது..

உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!

ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

Tuesday, April 15, 2014

சிறுகதை - சூட்டி நங்கி


சூட்டி நங்கி              

 கொ.பாபு




'அம்மே ............. அம்மே கோ அம்மே'?
என்று தனது வேண்டுகோளை நிறைவேற்றும் முகமாக இல்லாத தொல்லைகள் கொடுத்துக் கொண்டு நின்றாள்; சூட்டிநங்கி.
சிலுப்பாக் கோழி போல் கட்டையாக வெட்டப்பட்ட தனது கொண்டையை ஒரு முறை சிலிர்த்து விட்டாள். துரு துரு என்று விழிக்கும் குழந்தையின் கண்களையும் மூக்கையும் தலை முடி மூடிக் கொண்டது.முடியின் இடைவெளியினூடே கண்கள் பளிச்சிட்டன. கரு கருவென்ற அம்முடி சிறியதோர் கொப்பான் தேன்கூடு போன்றிருந்தது.
வாய்க்கால் நீரில் சேர்ந்தோடும் மீன்குஞ்சு போல், கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா ஓர் இடத்தில இருக்கவோ, பேசாமல் இருக்கவோ அவளால் முடியாது.வாயும் கண்ணும் கதை சொல்லும்.
'அம்மே அம்மே இண்டைக்கு மட்டும் விளையாட விடுங்கம்மா.இனி நான் கேட்கவே மாட்டேன்.நீங்க சொல்லுகிற நேரத்துக்கு ஓடோடி வந்திடுவேன்.என்னைப் போக விடுங்க' இவ்வாறு இறக்கை விரிக்க தயாராகிக்கொண்டிருந்தாள்.
அடுப்போடும் நெருப்போடும் சுழல்பந்தாய் விரையும் பிரேமலதாவுக்கு கோபம்.....கோபமாய் வந்தது.
'நீ இப்ப நல்லா என்னட்ட அடி வேண்டுவா!
தாத்தா வந்த நல்லா உத போடச் சொல்லுவேன்.
அந்தப்; பிள்ளைகளுக்;கு சிங்களம் தெரியாது.உனக்குத் தமிழ் தெரியாது.எப்படி விளையாடுவீங்க? அப்பிடி என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு'?
உள்வீட்டுச் சண்டை சச்சரவுகளை அறியாத பக்கத்து வீட்டு குழந்தைகள் இரண்டும் சூட்டி நங்கியை தூண்டில் போட்டு இழுக்கும் நோக்கத்துடன் உரத்த குரலில் பாடிக்கொண்டு நின்றார்கள்.ஒரு பச்சைக் கிளியாய் பறக்க குழந்தையின் மனசு தவியாய் தவித்தது.பிஞ்சு இதயத்தை பிய்த்தெறியும் துக்கம் துளைக்கும் போதெல்லாம் கட்டிலில் கிடக்கும் தலையணையில் முகம் புதைத்துப் படுத்திருக்கும் வழக்கம் கொண்டவள் சூட்டிநங்கி.
தாத்தாவின் தடித்த குரல் வெடிகுண்டு போல் அதிரும் போது கண்களைக் கசக்கி, சோம்பல் முறித்து, அடுப்புச் சாம்பலை தட்டி விட்டுச் செல்லும் பூனையைப் போல, அன்றாட விசாரணைக்குச் செல்வாள்.
நுகேகொடையில் இவர்களுடைய வீடு அமைந்திருந்தது.இலங்கை இராணுவத்தில் கடமை புரிந்த பிரேமலதவின் கணவர் வடக்கு,கிழக்கு முகாம்களுக்கு மாற்றலாகி தொழில் புரிந்த காலங்களிலெல்லாம் நாளும் பொழுதும், துக்கம் சுமந்த துயரோடே பொழுதுகள் புலர்ந்தன எத்தனையோ இரவுகள் அவள் கடைக்கண்களில் வழிந்தோடியது கண்ணீர்.ஆனால் தற்போது அண்மையில் தலைநகர் கொழும்பை அண்டிய பகுதியில் வேலை என்பதால் அடிக்கடி வீட்டிற்கும் வந்துபோவார்.
ஆடைத் தொழிற்சாலைகளும், வேறு பலவித தொழிற்சாலைகளும் ஆங்காங்கே இருப்பதால் பத்துப் பதினைந்து, சோற்றுப் பார்சல்கள் கட்டி விற்பனை செய்வது பிரேமலதாவின் தலையில் பொறிந்தது.
ஓன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து செல்லும் வாகன இரைச்சல் சத்தங்கள் மங்கலாய் சுழன்று வந்து மூச்சை திணறடிக்கும் தூசிகள்.
மதில்;;களால் சுற்றி வளைக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள.;முகம் தெரியாத மனிதர்களது நடமாட்டம்.குபுக் குபுக்கென்று பறந்தபடியிருக்கும் தொழிற்சாலைகளின் புகை.வெளியுலகை மறைத்து சிறை வைத்திருக்கும்.ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள்.இவ்வாறானதோர் சூழலில் அமைந்திருந்தது.சூட்டி நங்கியின் வீடு.
அயல் வீட்டு குழந்தைகளோடு,தானும் விளையாட்டில் கலந்து கொள்ளாததையிட்டு தாய் மீதே அதிக வெறுப்புற்றிருந்தாள்.தனது வெறுப்பை வெளிக்காட்டும் முகமாக,தாய் கொடுக்கப் போகும் தேநீரைக் குடிப்பதில்லை,பகல் உணவை சாப்பிடுவதில்லை,என்று மனசுக்குள் சபதம் எடுததுக்கொண்டாள். ராங்கி............ராங்கி பொல்லாத பிடிவாதக்காரி. வாய்க்கு வாய் காட்டுவாள் வயசுக்கு மீறிய கதை பேச்சு.
முச்சந்தியில்,மூன்று பக்கமும் வேலி இல்லாத வீட்டை,முழுதாக வாடகைக்கு எடுத்து ஆறுமாதமாக குடியிருக்கும் அயல் வீட்டுக்குழந்தைகள் இரண்டும்,வீதியோரமாய் நின்ற மாமரத்தின் கீழ் மணல் மேடொன்று இருந்தது.அம்மேட்டில் நின்றே விளையாடுவது வழக்கம்.ஒரு சில தென்னை மரங்கள்,மாமரங்கள்,பலாமரங்கள்,இவைகள் வீட்டின் முன்புறத்தை மறைத்திருந்தபடியால்.மதில் இல்லாத குறையை ஓரளவு தீர்த்தது, அவ்வீட்டாருக்கு மனதுக்கு திருப்தி அளித்தது.
சூட்டி நங்கியின் வருகைக்காக எல்லா விளையாட்டு வித்தைகளும் விட்டு களைத்துப்போனார்கள் அயல் வீட்டுக்குழந்தைகள்.
நிமாலிஹா என்பதே அவள் பெயர்.தாயும்,தந்தையும் செல்லமாக சூட்டிநங்கி என்று அழைப்பதைக் கண்டுபக்கத்து வீட்டுக் குழந்தைகளும் அவ்வாறே அழைப்பார்கள்.
பம்பரம் போல் சுழலும் தாயை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
குதிகால்கள் இரண்டையும் வீட்டு விறாந்தையின் நிலமதிரக் குத்தினாள்.
தன்னை அம்மா விளையாட மறுக்கும் காரணத்தை சின்ன மனசு குடைந்தது.
 பக்கத்து வீட்டு நெல்லிஅக்காவின் பிறந்த தினம் அன்று,தங்கள் வீட்டு ஜன்னலை இலேசாக திறந்து,கம்பிகளின் அடிப்பாகத்தைப் பிடித்தபடி,அவர்களது திறந்த ஜன்னல் ஊடாக,உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றாள் சூட்டி நங்கி.
சற்றுத் திரும்பி விழித்தபடி அருகில் நின்று அம்மா சொன்னாள், 'இதில் நின்று மூச்சுக் காட்டக்கூடாது'.
அம்மா மிக மிக இரகசியமாக கூறிய கட்டளைகளுக்கு இணங்கி நடந்து கொண்டாள்.
இரவு உணவு வேளையின்போது அம்மா தாத்தாவிடம் பேசிக்கொண்டாள்.
'அயல் வீட்டிற்கு யார் யாரோ வந்து, போனார்கள் தடித்த மீசையுடன் ஓருவர் வந்தார்.விகாரமான இருவர் மோட்டார்சைக்கிலில் வந்தார்கள.;'இவர்கள் இருவரினதும் சம்பாசனைகளையும் தான் நித்திரையின்றிக் கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.பெரியவர்களின் முணு முணுப்பையும்,குசு குசுப்பையும் குழந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சந்தேகத்தை அளவுகோலாகவைத்தே ஒவ்வொரு விடயங்களும் அவதானிக்கப்பட்டு வந்தது.
கூர்ப்பான மணல்மேட்டின் உச்சியில் நின்றபடி சிறுவன் கூறினான்.
'அக்கா என்ற வகுப்பில எனோட படிக்கின்ற சுரேஸ்,என்ர பென்சில ஒருக்கா எடுத்துக் கொண்டு தரமாட்டேன் என்று சொன்னான்.அவன் இப்ப என்னோட யாழு-(கூட்டாளி) அவன் படிக்கிற பாட்டப் படிக்கிறேன் பாரு' என்று,சத்தத்தோடு ஒரு பாடல் பாடினான்.
மணலின் அடிப்பாகத்தில்,தனது கால் பெருவிரல் நகத்தால் மணலை கிண்டிக்கொண்டிருந்த கவிதா.
'டேய் தம்பி அம்மா உனக்கு என்ன சொன்னா?
இப்பிடி தொண்டை போட்டுப் பாட்டுப் படி என்று சொன்னதா'? சிறுவனுக்கு ஆறுவயது கவிதாவுக்கு எட்டு வயது அம்மா அடிக்கடி சிறுமியிடம் சொல்வது அவளுக்கு ஞாபகம் வந்தது.
'தம்பி சின்னப் பெடியன். நீ வளர்ந்த பிள்ளை,அதுவும் பொம்பிளப் பிள்ளை,தம்பி என்ன பிழை செய்தாலும் நீதான் திருத்தவேணும்'.
தனது பாடல் உப்புச் சப்பில்லாது போனதை ஏற்றுக்கொள்ளாத சிறுவன்,
'நீ மட்டும் பாட்டுப் படிக்கலாம்.நான் மட்டும் பாட்டுப் படிக்கக்கூடாதோ? நல்லா இருக்கு நீ சும்மா வாயப் பொத்திக் கொண்டு இரு.'
துடிப்பான பதிலோடு உறுதிப்படக் கூறினான். 'நான் சத்தமாய் பாட்டுப் படிப்பேன்';. வெடுக்கென்று கூறி முகத்தை உம் என்று வைத்துக்கொண்டான்.தங்கள் வீட்டுப் பக்கமாய் முகத்தை திருப்பி 'அம்மா' என்று கூப்பிட்டாள் கவிதா.
அக்காவின்; முறைப்பாட்டுக்கான கூக்குரல் சற்றுச் சிறுவனை உலுக்கிவிட்டது.வட்டக் கழுத்து வெனியனுக்குள் புகுந்து,வழுகி நின்ற கறுப்புக் கால்சட்டையை இழுத்துவிட்டான்.நெற்றி அலை வடிவில் சுருங்கியது.அக்காவுடன் தொடர்ந்து மோதிக்கொள்ளமுடியாத நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டான். ஓர் இடைப்பொழுது சமாதானத்துக்கு குதிரை போல் எண்ணங்கள் தாவியது.
அம்மா சொன்ன அறிவுரைகள்,கண்டிப்பான கருத்துரைகள் இடித்த மாவை அரைப்பது போல் அரைத்துக் கொண்டிருந்தது.
'சுற்றம் சூழ சிங்கள ஆக்கள்,நம்மட குடும்பம் மட்டும் தான் இதுக்குள்ள தமிழ் ஆக்கள்,ஐயோ எண்டு சொன்னா ஓடி வர ஆள் இல்லை.தமிழிலகதைக்காதீங்க,அப்படி கதைத்தாலும்;;; சத்தம் போட்டுக் கதைக்;காதீங்க.
பட்ட சிறுப்பினைகள் போதும்,உரலுக்கு ஒரு பக்கம் இடி,மத்தாளத்துக்கு இரண்டு பக்கமும் இடி, கரைச்சல் குடுக்காதீங்க.தண்ணிய வெண்ணிய குடிச்சிட்டு சும்மா புத்தகத்த  எடுத்துப் படிங்க.அப்பா வேலையால வார நேரம் வீண் வம்ப விலைக்கு வேண்டாதீங்க.
மீண்டும் கவிதா 'அம்மா' என்று சத்தம் வைத்தாள்.
இருள் மேகம் போல் முகத்தை வைத்துக்கொண்டு,சரிவாக நின்ற செவ்விளனி மரத்தோடு சாய்ந்தான்.ஒருபுறம் தெரிந்த அக்காவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான்.
நெல்லி அக்காவின் சற்று உரத்;த சத்தம் கட்டிலில் படுத்திருந்த சூட்டி நங்கியையும் தட்டி எழுப்பிவிட்டது. 'ஐ அண்ட காணவா'-(ஏன் கூப்பிடுறீங்க?) என்று கேட்க வேண்டும் போல இருந்தது.; சட்டென்று கட்டிலில் இருந்து தவளைப்பாச்சலில் குதித்து இறங்கினால். குட்டையான தலைமுடியை வாரிக் கொண்டிருக்கும் தாயின் அருகில் சென்றாள். இவளை கணக்கெடுக்காமல் சிடுசிடுப்பாக இருந்தால் பிரேமலதா. திடீர் என குழந்தை மீது ஒரு பரிவு பிறந்தததும் மிருதுவாய் குழந்தையின் தலையை கோதியபடி பிரேமலதா கூறினாள். 'இஞ்ச பார் மகள் அவங்களோட தேவையில்லாம கனக்க கதை பேச்சு வைச்சுக்கொள்ளக்கூடாது.'
'அதுதாம்மா ஏன் கதைக்கக்கூடாது.'
'அது தேவையில்லாத பிரச்சனை வரும்'
'நாங்க சண்டை பிடிக்காமத்தானே ஒற்றுமையா விளையாடுகின்றோம்.அப்ப ஏன் பிரச்சனை வருது.'?
'அது வேற பெரிய கதை அது உங்களுக்குத் தேவையில்லை.' பெரிய கதையா? அப்பிடிண்டா சொல்லுங்க'? நீங்க சின்னப் பிள்ளைகள் இப்ப உங்களுக்கு அவசியமில்லை'.
'நான் ஒருவருக்கும் சொல்லமாட்டன்.எனக்குச் சொல்லுங்கம்மாசொல்லுங்க'
'அது அவங்கட ஆக்களுக்கும்,எங்கட ஆக்களுக்கும் இடையில் முந்தியிருந்தே சண்டை.
'ஏன் சண்டை வந்தது'?
'நீ இப்படி கேக்காதை'
'அப்ப நான் எபபடி கேக்க'?
'நான் சொல்லுறத மட்டும் கேளு'.
'உங்களுக்குள்ள வாற சின்னச் சின்ன சண்டையிண்டா பரவாயில்லை உடனே அடுத்த நிமிஷம் சேந்திடலாம்;;.
ஆனால்?  அது அப்படி இல்லை.
நம்மட சீயாட காலத்துக்கு முந்தி வெள்ளக்காரண்ட ஆட்சிக்கு முந்தி இருந்து தொடங்கின சண்டை சச்சரவு.
'அடேங்கப்பா அவ்வளவு காலமாச் சண்டையா? இந்தச் சண்டையை மூட்டிவிட்டது யார்?

'அதுபற்றி எனக்குத் தெரியாது.ஆனா வெள்ளைக்காரனுக்கு முந்தி அரசர்களிட காலத்திலயும் சண்டை நடந்திருக்கு'.
'யாரோட யார் மோதினாங்க'?
யானையிலயா?குதிரையிலயா? சண்டை போட்டாங்க?
(அநய் ஹேகாணவா) 'ஏன் சத்தமாக் கத்துறா? மெதுவாக் கதைக்க தெரியாதா உனக்கு?
'நான் மெதுவாத்தானே கதைத்தேன்';.
'அந்தக் காலத்தில இந்தியாவில இலங்கையில எல்லாம் மன்னர்களிட ஆட்சி தான் நடந்தது. தமிழ் அரசர்களிடையே சண்டை அதே மாதிரி சிங்களஅரசர்களிடையேயும் சண்டை.தமிழ் அரசர்களுக்கும் சிங்களஅரசர்களுக்கும் சண்டை.
'இதெல்லாம் எங்கம்மா நடந்தது.'?
'இந்தியாவில அதே மாதிரி இலங்கையில நடந்தது.'
'அவங்க ஏம்மா சண்டை போட்டாங்க'?
'நிலத்துக்கு'
'நிலம் ஏம்மா ஓடிப்புடிச்சு விளையாடவா'?
'இல்ல ஆட்சிக்காக,அதிகாரத்துக்காக'
அப்ப நெல்லியக்காமாதிரிஆக்களுக்கும் ,நம்மள மாதிரி ஆட்களுக்கும்ஆட்சிக்காக. அதிகாரத்துக்காக சண்டை வந்ததா?அவங்க அடிபட்டுச் செத்தாங்களா?
'அப்படி நடந்ததா நான் சரித்திரப் புத்தகத்தில படிக்கல,எனக்கு யாரும் படிப்பிச்சதாவும் ஞாபகம் இல்ல.'
வெள்ளக்காரனுக்கும்,ராசாமாருக்கும் பைத்தியம் பிடிச்சா நமக்கென்னம்மா.?
நான் இண்டைக்கு மட்டும் நெல்லியக்கா வீட்ட போய் விளையாடிற்று வாறேனம்மா.'?
'உம்ப ஹட்ட தெங் வெடி மங்ஹஹனவா'-(உனக்கு வாய் இப்ப கூட நான் அடிப்பன் ).யாருக்குப் பைத்தியம் பிடிச்சாத்தான் உனக்கு என்ன?வர வர கதையும் பேச்சும் கூடிப் போச்சு.எல்லாம் அக்கம் பக்கத்துக்குப் போறதால தான்.உனக்கு இப்ப நாக்கு நீண்டு போச்சு'.
ஒரு நகரப்புரத்தின் யந்திரச் சுழற்சியுள் எத்தனையோ பரபரப்பான வேலைகளிடையே, பொறுமையுடன் பிரேமலதா சூட்டிநங்கிக்கு இவ்வளவு கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
மகளுடைய கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டால்,அத்தோடு மகள் அலட்டாமல் அடங்கிவிடுவாள்.இன்னுமொரு முக்கியமான விடயமும் இருந்தது.தனது கணவர் இராணுவத்தில் இருப்பவர்.இல்லாதது பொல்லாதது எல்லாம் அவள் கதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பக்கத்தில ஒரு தமிழ் குடும்பம் புதுசா வாடகைக்கு குடியிருக்க வந்தது.நமக்கு அது தொல்லையாப் போச்சு.சூட்டி நங்கியை கட்டுப்பாடா வீட்டோட வச்சுக்கொள்;ளுறதுதான்எல்லாத்துக்கும் நல்லது.தனக்குள்ளாக சிந்தித்தபடி ஒரு முடிவுக்கு வரத்தொடங்கினாள்.  மீண்டும் மெதுவாக விட்ட குறையிலிருந்து கதையைத் தொடங்கினாள்;.
'ஓயாம ரெண்டு பகுதிகளுக்கும் சண்டை.'
'இந்தச் சண்டையில யாரு வெண்டா?' சிங்கள ஆக்களிட அதே மாதிரி தழிழ் ஆட்களிட தரித்திர புத்தகங்களில என்ன எழுதியிருக்கு'?
'தரித்திரப் புத்தகமில்லை மாடு அது சரித்திரப் புத்தகம். (சிங்கள ஆக்களிட அதே மாதிரி தழிழ் ஆட்களிட தரித்திர புத்தகங்களில என்ன எழுதியிருக்கு'?
'தரித்திரப் புத்தகமில்லை மாடு அது சரித்திரப் புத்தகம்.)
மாறி மாறி  அதையும்,இதையும் கேட்டுக் கேட்டு ஆக்கினை குடுக்காத,பேசாம உன்ர பாட்டப் பாரு. இடக்கு முடக்கா இவ எதையாவது கேட்டுத் துளைப்பா.'
 'இது என்ன சண்டையாமே நான் எத்தின பேரோடு கோவம் போட்டு பிறகு நேசமாகிவிட்டன்.அம்மா சொல்லுறது உண்மையா இருக்குமா? என்றவாறு தன் மனசுக்குள் எண்ணிக் கொண்டது குழந்தை.
நெல்லிக்காய்கள் தான் சூட்டி நங்கியுடன் அயல் வீட்டுக்குழந்தைகள் நட்பாய் இருக்ககாரணம்.
 அடுத்த வீட்டு உரிமையாளர், அவரது இன்னுமோர் வீட்டில், பத்தரமுல்லையில் குடியிருப்பதால் இளநீர், மாங்காய், நெல்லிக்காய்கள் இவற்றுக்கு வாடகை வீட்டாரே சொந்தங்கொண்டாடுவது வழக்கம்.
சில வாரங்களின் முன்னர், ஒரு நாள், நெல்லி மரத்தின் காய்களை கவிதாவும், அவள் தம்பியும் நீளமான தடியைக் கொண்டு தட்டினார்கள். தங்கள் வீட்டுப் படலை ஓரமாக, சூட்டி நங்கி பார்த்துக்கொண்டு நின்றாள்.
தடியால் ஓங்கி அடிக்கும் வேளை குலை, குலையாக கிடந்த நெல்லிக்காய்கள், குழியில் போடும் ஜில் போளைகள் போன்று சிதறியது.
தடியைக் கீழே போட்டு விட்டு இன்பம் நின்றுலாவும் சிட்டு மனசோடு போட்டி போட்டுக் கொண்டு பரபரப்பாய் பொறுக்கி எடுத்தனர்.
பின்னர் அருகில் வைத்திருந்த கிண்ணத்துள் போட்டு நிரப்பினர். சூட்டி நங்கியின் அருகில் சென்று சிறிதளவு நெல்லிக் காய்களை அள்ளி நீட்டினாள் கவிதா.
வேண்டுவதா? எப்பா (வேண்டாம்) என்று சொல்வதா? சற்றுத் தடுமாற்றத்துடன் துரு துருவென விழித்தாள். பின்னர் குடு குடுவென்று தாயிடம் சென்று, திரும்பி வந்து வேண்டிக் கொண்டாள். அன்று தொட்டு கவிதாவை அவள் நெல்லி அக்கே என்றே அழைப்பது வழக்கம்.
அந்த அறிமுகத்தின் பின்னர் அவ்வரங்கில் சூட்டி நங்கியும், கவிதாவும், சிறுவனும் கடிவாளம் இட்ட கன்றுக்குட்டிகளாய் சில தினங்களின் பின்னர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கவிதாவும் ஓரளவு சிங்களம் பேசக்கூடியதாக இருந்ததாலும், தம்பியும் சிறுவர் பாடசாலையில் சிங்களம் படித்ததாலும், சூட்டி நங்கியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு இலகுவாக இருந்தது.
வலது கரத்தின் விரல்களை வாயின் முன்னே மடக்கி, ஒலி வாங்கியின் முன்பேசுவது போல் நின்ற கவிதா,
 'தற்போது தரம் ஒன்றில் தமிழ் படிக்கும் தனது தம்பியை பாடல் பாடும்படி மேடைக்கு அழைத்தாள';. சட்டென்று நேர்க்கோடு போல் ஆகியவன் வகுப்பில் தாங்கள்   குசு குசுவென படிக்கும் பாடல் நினைவுக்கு வரவே

'விக்ஸ் விக்ஸ் விக்ஸ்
வீட்டு நம்பர் சிக்ஸ்
அதோ பாரு ரெயிலு
ரெயிலு மேலே குயிலு
குயிலப் பாத்துச் சையிற்றடிச்சா
ஆறு மாதம் ஜெயிலு
ஜெயில விட்டு வெளிய வந்தா
சுப்பர் சாரு சையிலு'
பாடி முடிந்த கையோடு சூட்டி நங்கியும் கவிதாவும் கைதட்டினார்கள். பெருமிதத்துடன் சிறுவன் மேடையை விட்டு இறங்கினான்.
'அடுத்ததாக சூட்டி நங்கி ஒரு பாடல் பாடுவார்.' தலையை ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுச் சென்றவள்
'பிசு பூசா நேவா
சென் பவுடர் தெம்மா
பொண்ணக் கிவ்வே தேவத்துற
பகீலா தியென்னே மடவத்துற
கண்ணக் கிவ்வே பாஸ்போட்
அறங் தியன்னே காட்போட்

தம்பியுடன் சேர்ந்து கவிதாவும் குலுங்கி குலுங்கிச் சிரித்தாள். பாடலின் பொருளை சிறிது புரிந்து      கொள்ளாத தம்பி விளக்கம் கேட்க,
'அதுடா தம்பி ஒரு பைத்தியப் பூனை முழுகிச்சாம், பிறகு வாசப் பவுடர் போட்டுதாம், குடிக்கச் சொன்னது தேத்தண்ணி, ஆனா குடிச்சது சேற்றுத் தண்ணி, எடுக்கச் சொன்னது பாஸ்போட், எடுத்தது காட்போட்';.
பாடலின் பொருளை முழுதும் புரிந்து கொண்டான் சிறுவன். ஆதன் பின்னர் அருகில் கிடந்த சிறு தடியை  எடுத்துக் கொண்ட சூட்டி நங்கி, 'ஏய் பிள்ளைகளே! எல்லாரும் வாங்க, நான் சொல்லுறத வடிவாக் கேளுங்க.'
சிறுவனிடம் கணக்குகள் கேட்டாள்.பிழையாக சொன்னவுடன் பிரம்பால் அடித்தாள்.
'இண்டைக்கு எங்கட அப்பாட்ட சொல்லித் தாறன்'.
தம்பிக்கு அடித்தவுடன் கோபங் கொண்ட கவிதா,சூட்டி நங்கியின் முகத்தோடு முகத்தை முட்டுமாற் போல் நின்று
'தம்பிக்கு ஏன் அடித்தீங்க'?
'நான் ரீச்சர் அது தான் அடித்தேன்'.
அப்பிடி அடிக்க ஏலா,
'நான் ரீச்சர் என்றா  அடிப்பன்.
நான் எங்கட பள்ளிகூடத்தில எத்தின அடி வேண்டி இருக்கிறன் தெரியுமா உங்களுக்கு?
சூட்டி நங்கியின் ராங்கியான வார்த்தைகள்,சின்னவனை அடிபட்ட நாகம் போல் கோபம் கொள்ள வைத்தது.
மெழுகுவர்த்தியில் வடியும் மெழுகு போன்று கன்னங்கள் வழியே கண்ணீர் ஓயாது வடிந்து கொண்டிருந்தது.தம்பியையும் அணைத்துக்கொண்டு அம்மாவிடம் செல்ல எண்ணிய கவிதா,திடீரென சற்றுத் தயங்கினாள்.
சூட்டிநங்கியின் மனமும் ,ஏதேதோ ஆதங்கப்படத் தொடங்கியது.சின்னவன் தனது வீட்டிற்குள் நுழைய,அவளும் தனது வீட்டுக்குப் பாய்தோடி விட்டாள்.
'அவங்களுக்கும் நமக்கும்முந்திக் காலத்தில இருந்தே சண்டையாமே
அதுதான் போல எங்களுக்கும் சண்டை வந்திருக்கு.அவங்கட வீட்ட வந்த மீசைக்கார ஆக்கள் எங்களோட சண்டைக்கு வருவாங்களோ?அம்மாவும்,நானும் தானே வீட்டில் தனியா இருக்கிறோம்.நான் சிங்களம் இல்லைத்தானே?ரீச்சர் தானே அதுதானே அடிச்சன்.அதுவும் மெதுவாகத்தானே, இப்பிடி எங்கள மாதிரி விளையாட்டில தான் தமிழ் ஆக்களுக்கும்,சிங்கள ஆக்களுக்கும் சண்டை வந்திருக்கும் போல அம்மாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுப் போடுவா.கையில் வைத்திருந்த பிரம்பை உற்றுப் பார்த்தாள் சூட்டி நங்கி.பின்னர் ஏய் சனியனே!நீதான் எங்களுக்குள்ள சண்டையை உண்டாக்கின.சின்னத்தம்பி பாவம் தானே?நீ வேணாம் எனக்கு.நீ வேணாம் எனக்கு.என்றபடி முழங்காலை மடக்கி இரண்டு மூன்று துண்டுகளாய் உடைத்து வேலியோரம் வீசி விட்டு யன்னல் கம்பிகளின் வழியே எட்டி எட்டிப் பார்த்தாள்.
குழந்தையின் மனதினுள்ளே பயபீதி ஊடுருவி நின்றது.முகத்தில் கவலையின் குறியீடு காணப்பட்டது.
'சின்னத்தம்பி பாவம் நெல்லியக்காவும் நல்லவ.அவங்களுக்கு பிஸ்கற் கொண்டு போய் கொடுப்போமா?ஐயோ (மட்டபே) -எனக்கு ஏலா-அவங்கட வீட்ட போக பயமா இருக்கு.
சின்னவனும்,கவிதாவும் தங்கள் தாயிடம் முறைப்பாடு சொல்லப் புறப்பட்டாலும் பின்னர் தயங்கி நின்றார்கள்.
'அம்மா சொல்லுவா கீரியும்,பாம்பும் போல அவங்களுக்கும் நமக்கும் பகை.சொல்லச் சொல்ல கேட்காம விளையாடப் போறீங்க.மெத்தக் கவனம்.சின்னப் பிரச்சனை எனறாலும் அவங்க கத்தியையும்,கம்பு தடிகளையும் தூக்கிக்கொண்டு வருவாங்க.முந்திக் காலத்தில இருந்து இன்று வரைக்கும் மாறி,மாறி எவ்வளவோ பிரச்சனை நடந்து வருகுது.
நீங்க சின்னப்பிள்ளைகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது.அவங்க வேற இனம் நாம வேற இனம்.அதால தான் நான் சொல்லுறன் மெத்தக் கவனம்.நடு றோட்டில நின்று நக்குப்பட்ட சீவியம் சீவக்கிறம்.இதெல்லாம் என்னத்தால வந்தது என்று நினைக்கிறீங்க?இந்த நாசம் விழுந்த சண்டையால தான்.இந்தச் சண்டை எப்ப ஓயுதோ?; ஊரில இருந்த பாடில்லை,அங்க ஒழுங்காவும் இருக்க விடமாட்டாங்க.அப்பாவுக்குப் பெரிய நாட்டுக்கு போற வாய்ப்பும் இல்லை.சின்ன நாட்டுக்குப் போற வாய்ப்பும் இல்லை.நமக்கு உதவ வெளிநாட்டில யார் இருக்கிறாh?;.வீட்டு வாடகைக்கு மாதா மாதம் காச அள்ளி இறைக்கனும்.எந்த நேரமும் நம்ம தலையில இடி விழலாம்.தாய் பிள்ளைகளையும் சொந்த பந்தங்களையும் கண்டு கதைக்காமலேயே செத்துப்போய்விடுவோம் போல ஊரிலயும்,அயலிலயும் எத்தின செத்த வீடுகள் நடந்தது.யாரிட முகத்தில முழிச்சோம்.பொலிசும்,ராணுவமும் நடுச்சாமத்திலயும் வந்து கதவத் தட்டி துலைப்பாங்கள்.சின்னஞ்சிறுசுகளையும்,குமர் குட்டிகளையும் வைத்துக் கொண்டு,பாஷையும் தெரியாம எங்கட ஈரல் குல கலங்கும்.எந்த நேரமும் எதுவும் நடக்கும்.நாலும் நடந்தாலும் நமக்காக கேட்கப் பறிக்க யார் இருக்கிறாங்க.? சடுதியாய் சாகிறதுக்கெண்டே நாம பிறந்திருக்கிற மாதிரி,காலத்துக்கு காலம் கலவரம் வரும்.தமிழறாப் பிறந்திட்டோம் அதனால தான் இந்தத் துயரமோ தெரியாது.எங்கட காலத்தோட தலை முழுகிடலாம் எண்டு பார்த்தா அது மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில ஏறின கதையா மாறி வருது.வீடு வாசல்களோட போய் குந்தியிருந்து நாலுபிடிச்சோறு எப்ப நிம்மதியாச் சாப்பிடப் போகிறோம்.அதுக்குப் பிறகு தான் நமக்கெல்லாம் நிம்மதி.அது வரைக்கும் நமக்குச் சிறுப்பினை மாறாது.'
அம்மா என்றோ கூறிய கதையெல்லாம் நினைவுக்கு வர இருவரும் தயங்கி நின்றார்கள்.
 சுp தினங்கனிள் பின் பின்னர் ஓர் நாள் தொலைபேசித்தொடார்பு மின்னல் வேகத்தில் பொறுப்பான இராணுவ முகாம்களிடையே குசுகுசுத்தன.
மின் காந்தம் பாய்ச்சப்பட்ட சுருள் சுருள் கம்பிகள் முகாமைச் சுற்றியிருந்தன.பொறுப்பான அதிகாரிகளால் திட்டம் ஒன்று போடப்பட்டது.அத்திட்டத்தின்படி கரிய இருள் மண்டிய இரவொன்றில் கவிதாவின் வீட்டைச் சுற்றி இராணுவத் துருப்பினர் குவிக்கப்பட்டனர்.சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக துருப்பினர் ஓட்டி வந்த ரக்வண்டிகளையும்,ஐPப்வண்டிகளையும் சுமார் இருநூறு மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிறுத்தி இருந்தனர்.கிடைக்கப்பெற்ற தகவல் உண்மை தான்.
அவர்களது வீட்டின் தென்கிழக்கு மூலையில் பப்பாசி மரத்தின் அருகாக ஆழமாய் தோண்டி இரவு வேளையில் புதைத்திருக்கிறார்கள்.
கவிதா வீட்டார் புதைத்ததற்கு போதிய ஆதாரம் உண்டு.
அருகிலுள்ள மேல்மாடி வீடுகளில் இருந்தார்கள.; கண்ணூடாக கண்ட சம்பவம் இது.கறுப்பு பொலித்தீன் பையொன்றில் இருந்த பொருளைகவிதாவின் அம்மா கையிலிருந்த டோச் லைற்றைப் பிடிக்க கவிதாவின் அப்பா ஆழமான கிடங்கொன்றை வெட்டிப் புதைத்தார்.
பின்னர் அதன் மேல் நன்றாக மண் போட்டு மூடினார்கள்.அவர்களது குழந்தைகளுக்கு இது தெரியாது.இரவு வேளை என்பதால் குழந்தைகள் தூங்கிவிட்டார்கள்.
தகவல் பொய்யானது அல்ல நம்பகமானது.துருப்புக்கள் உசார் அடைந்தனர்.அவர்கள் வீட்டைச்சுற்றி காவல் போட்டனர்.
முக்கியமான சந்திகளிலும் ராணுவத்தினரை நிறுத்தினர்.மேலிடத்து உத்தரவு புதைக்கப்பட்ட பொருளை முதலில் தோண்டி எடுக்க வேண்டும்.அதன் பின்னர் குடும்ப தலைவரை கைது செய்ய வேண்டும்.
திட்டமிட்டபடி இயங்கும் முகமாக கையில் கொண்டு வந்த மண்வெட்டியால் மிக ஆர்வமும் எச்சரிக்கையும் பொதிந்த மனோநிலையில் உரிய இடத்தைத் தோண்டத் தொடங்கினர்.சிறிது தோண்டிய பின் அந்த கறுப்பு பொலித்தீன் பேக் கண்ணுக்குப் புலப்பட்டது.
பொது மக்கள் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல் உண்மையானது என உணர்ந்து கொண்டனர்.
மேலிடத்தில் இருந்து கைத்தொலைபேசி அழைப்புக்கள் அடிக்கடி மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
உரிய பொறுப்பானவர்கள் அதற்கு உரித்தான பதில்களை பேசிக் கொண்டிருந்தனர்.
மண்ணை அகற்றி மூக்கை வளைத்து ஒரு இராணுவவீரன் துணிகரமாக அந்தக் கறுப்பு பேக்கை மேலே தூக்கி வைத்தான்.
என்ன அதிசயம்!என்ன ஆச்சரியம்!
கிடங்கின் அருகில் குவிந்து நின்ற படையினர் சற்றுப் பின் வாங்கினர்.அவர்கள் எல்லோரினதும் வாயும் மூக்கும் வலது புறமாகவும்,இடது புறமாகவும் மாறி மாறிக் கோணத் தொடங்கின.மிக அருகில் நெருங்க முடியவில்லை.
அவ்வேளையில் அச்சூழலில் வாழ்ந்த மக்கள் நித்திரையில் துயில் கொண்டிருந்தனர்.நாற்புறமும் நாய்களின் குரைப்புச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தன. மேகங்கள் ஒன்றையொன்று துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தன.இரண்டு நாட்களின் முன் தினம் அவ்வீதியில் ஒரு பூனை காரில் அடிபட்டு செத்துக் கிடந்தது.அவ்வீதி வழியாகச் சென்N;றார் அனேகர் கண்டும் காணாதது போன்று சென்று கொண்டிருந்தனர்.
கவிதாவின் தாயும் தந்தையும் அன்று இரவு வேளை அதனை எடுத்துப் புதைத்தனர்.
ஊதிப் பருத்துப் புழுத்து நாறும் அந்த நாற்றத்தின் முன்னே நின்ற படையினர் திணறிப்போனார்கள்.மீண்டும் தோண்டியெடுத்த அந்த அபூர்வ பொதியை புதைத்து விட்டு கனரக வாகனங்களிலும் சாதாரண வாகனங்களிலும் புகையாகப் பறந்தனர். இவை எதுவும் அறியாது காவல் நிலையில் நின்று ஜீப்வண்டிக்குள்பாய்தேறிய பண்டார மெல்ல வீரசிங்காவின் காதுக்குள் இரகசியமாக என்ன மச்சான் புலியைப்பிடிச்சாச்சா? இல்லை மச்சான் புளுத்த பூணையை புடிச்சோம் என்றான்  கடுப்புடன். மறு நாட் காலையில் இச்சம்பவம் பரபரப்பாகப் பேசப்படடது.
கவிதாவின் தாய் தந்தையிடையே இச்சம்பவம் ஒருவித அச்சத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியிருந்தது.பிள்ளைகள் இருவரும் இது பற்றி எதுவும் அறியமாட்டார்கள்.
'நாம ஊரோட போய் வாழுறதே உசிதமான காரியம்.தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்கு காகம் என்று சொல்லுவாங்க.
செத்து தொலைந்தாலும் பரவாயில்லை நம்மட அயல்அட்டைகளோடையும் வயல் வாய்க்காலோடையும் ஒதுங்கிடுவோம்.'என்ற ஒரே முடிவுக்கு வந்தனர்.
'நான் சின்னத் தம்பிக்கு அடித்து சண்டை போடடேன் தானே அதுதான் அவர்கள் இந்த ஊரைவிட்டுப் போகப் போகின்றார்கள்.-(அனே பவ்வு தமாய் ஏ கட்டிய)- ஐயோ பாவம் தானே அவர்கள்.
எனது இந்தக் கெட்ட காரியத்தால் அவர்களது மனசு எவ்வளவோ துக்கப்பட்டு துன்பப்படுமல்லவா?நெல்லி அக்காவின் அம்மா ஒரு நாள் எனக்கு தோசே சம்போல் சாப்பிடத் தந்து தலையை அன்பாகத் தடவி விட்டார்.அக்காவுக்கும் தம்பிக்கும் நடுவில் நான் இருக்க அந்த அம்மா எனக்கும் சோற்றைக் குழைத்து ஊட்டிவிட்டார்.
நான் சின்னப் பிள்ளை தானே பெரியவர்கள் மாதிரி சண்டை போட்டு கொலை செய்தேனா?கொள்ளையடித்தேனா? இருக்கிற இடத்தை விட்டுத் துரத்தியடித்தேனா?அவர்கள் வீடு வாசலை நொறுக்கினேனா?முந்தி முந்திக் காலத்தில சண்டை பிடிச்ச மாதிரி சண்டை பிடிச்சுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.சேர்ந்து விளையாடத்தான் விருப்பம்.
கொஞ்ச நாள் தான் பழகி ஆனால் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.இனி எல்லாம் தொலைஞ்சு போகப் போகுதோ.எப்படியும் அவர்களை இங்கிருந்து போகவிடாமல் செய்ய வேண்டும்.அதற்கு என்ன வழி?
நெல்லியக்காவுக்கு ஒரு வடிவான பொம்மையும் சின்னத்தம்பிக்கு ஒருபச்சை நிறத்தில் நீளக் கோச்சியும் கொடுப்போம்.அதோட கோபமெல்லாம் மறைஞ்சு போயிடும்.
சூட்டிநங்கியின் சின்ன மனசுக்குள் ஒரு ரோஜா சிரிக்க ஆரம்பித்தது.அவர்கள் பயணத்தை நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
சில வாரங்களின் பின்;;
ஒரு போயா தினம் வந்த ஒர்நாள்.வீட்டைக்காலி பண்ணும் நோக்கில்கவிதா வீட்டார் சாமான் சட்டுக்களை லொறியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.விட்டில் பூச்சியாய் பறந்தடிக்கும் எண்ணத்தோடு தாய் பிரேமலதா கொடுத்த கிரிபத்தைச் சாப்பிட முனைந்தாள் சூட்டிநங்கி. 'டேய் சின்னத்தம்பி வாங்கி நா சொன்னா வெளங்கி இவ்வாறு கொச்சையாக தமிழ் கதைப்பதை பெருமிதமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
கவிதாவும்,தம்பியும் தங்கள் பாடப்புத்தகங்கள்,கொப்பிகள் என்று சேர்த்து அடுக்கினார்கள்.
எதை எதையோ எண்ணியபடி தாய் பிரேமலதாவுக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு பூனைகுட்டி போல பதுங்கிப் பதுங்கி. கவிதா வீட்டு முற்றத்தில் வந்து நின்றாள் சூட்டி நங்கி.
கையிலிருந்த பொம்மையையும் கோச்சியையும் இருவருக்கும் கொடுத்த பின்னர்
கவிதாவும்,சின்னத்தம்பியும் சூட்டி நங்கியின் அருகில் போய் நின்றார்கள்.
'நான் இனி உங்களோட சண்டை பிடிக்கமாட்டன்.நீங்கள் இங்கேயே இருங்க.'
திடீரென்று கவிதாவின் அம்மாவை நோக்கி குசினிக்குள் ஓடி,
'அன்ரி..... அன்ரி....நான் சின்னத்தம்பியோட சண்டை போடமாட்டன்.நீங்கள் இங்கேயே இருங்க.
தெரியாமத்தான் அன்ரி நான் சின்னத்தம்பிக்கு அடிச்சன்.நீங்க போக வேணாம் இஞ்சேயே இருங்க.இனி நான் அவனுக்கு அடிக்கமாட்டன.; கவனமாய் பார்த்துக்கொள்ளுவன்' என்ற வண்ணம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
'நாங்க வேறு வீடு பாத்திற்றம்.அங்கதான் போகப்போறம்.'என்றாள் கவிதாவின் தாயார்.
பரபரப்பாக சாமான் சட்டுக்களை வாகனத்தில் ஏற்றி முடித்தார்கள்.
பின்னர் விரைந்து செல்ல தயாராகி நின்ற வாகனத்தில் வீட்டார் ஏறிக் கொண்டார்கள்.
கவிதாவும்,சின்னத்தம்பியும்,சூட்டிநங்கியிடம் வழிப்பயணம் சொல்லி ஏறிக்கொள்ள, கிடங்கு முடங்கான பாதையில் ஆடி அசைந்து அவர்களைச் சுமந்தபடிஅவ்வாகனம் அவ்விடத்தை விட்டு மறைந்தது.
கூடி விளையாடும் மணல்மேட்டில் அவர்கள் சென்ற வீதியையே இமைகொட்டாமல், பார்த்தபடி தனியாக நின்றாள் சூட்டி நங்கி.

முற்றும்.




Sunday, April 13, 2014

தமிழ்,சிங்கள புது வருட வாழ்த்துக்கள் !!!!!!!




உணர்வையும் ,அழகையும் சொல்வதற்கு வார்த்தைகள் தேவையற்றுப்போன அற்புதமான படமும் ,வாழ்த்தும் இது .நன்றி தோழா ! . 'உலகச் சமநிலையில் எங்களைப் பகடைக்காயாக்கிக் கொள்ள இடமளிக்காதிருக்க எவையெல்லாம் அவசியமோ அவற்றை முன்னெடுப்போம்!' தமிழ்,சிங்கள புது வருட வாழ்த்துக்கள் !!!!!!!

சிறுகதை- மல்லியப்புசந்தி திலகர்

வலி 

 -
 


கனம்,
அன்புள்ள பாப்பாவுங்க அப்பா, பெரிய பாப்பா, சின்ன பாப்பா, மகன் பிரசாந் அனைவருக்கும். நான் நல்ல சுகம். நீங்கள் எல்லோரும் நல்ல சுகமா. நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விடயம் அறிந்தேன். பெரிய பாப்பாவுக்கு கால் சுகம் எப்படி. கவனமா பார்த்துக்கங்க. நான் முதல் கடிதத்தில எழுதுன மாதிரி வேலை செய்யிற இடம் அவ்வளவு நல்லம் இல்லனு நினைக்கிறேன். வீட்டுகார பெரிய ஆளு ரொம்ப பேச மாட்டது. அங்கிட்டு இங்கிட்டுப் போகும் போது பார்த்துட்டு பார்த்துட்டு மட்டும் போவது. ஆனால் மூத்த மகன்காரன்தான் போறப்ப வாறப்ப எல்லாம் ஏதாவது சொல்லுவான். எனக்கு ஒன்னும் வெளங்காது.
ஒருநா வீட்டுக்கார நோனா ஏசுனாங்க. எனக்கு ஒன்னும விளங்கல.. தும்புக்கட்ட கம்பை எடுத்து மண்டையில அடிச்சிட்டா. வலி தாங்க ஏலாம அடிக்காதீங்கனு கையெடுத்து கும்பிட்டேன். அதுக்கு பெறகுதான் ரொம்ப ஏசி கூடவே அடிச்சிப்புட்டா. அப்புறந்தான் எனக்கு விசயமே விளங்கினுச்சி. நான் முக்காடு போடலை. நான் முஸ்லிமு இல்லனு அவுங்களுக்கு தெரிஞ்சுவிட்டது. நான் முக்காடு போடாம இருந்திருக்கேன். அதுனாலதான் கோவம்.  நம்ம வீட்டு சீலைய இறுக்கமா இடுப்புல சுத்திகிட்டு வேலை செஞ்ச எனக்கு இங்க முக்காட போட்டுக்கிட்டு முழுசா கவுன போட்டுகிட்டு ஓடியாடி வேல செய்ய முடியல. சரி அதவுடுங்க. ஏன்னோட தலை எழுத்து. அத நெனச்சி கவல படாதீங்க. எல்லா ஒங்களுக்காகத்ததான் கஷ்டப்படுறேன். இப்ப அரபி கொஞ்சம் வெளங்குது. மூனு பேரும் நல்லா படிங்க.
பெரிய பாப்பாவுக்கு தோட்டத்து ஆஸ்பத்திரி மருந்துக்கு சொகமாகலைனா பிரவட்ல மருந்து கட்டி ஊசி போடுங்க. கறல் பிடிச்ச ஆணி குத்துனா வெசமாகிறபோவுது.
தம்பிய தவறாம பள்ளிக்குடம் அனுப்பிருங்க. நான் வந்த பெறகு அழுதுகிட்டே இருந்தானு சென்னீங்களே. இப்பவும் அப்பிடியா.. எனக்கு அவன் நாவகமேதான். படிப்புதான் முக்கியம். சின்ன பாப்பாவும் நல்லா படிகக்கனும். இந்த வருசம் கவர்மண்ட் டெஸ்ட் வருதுதானே. நீங்கள்ளாம் படிச்சு நல்ல வேலை செய்யனும் எங்கமாதிரி கச்;டப்படவேணாம். உங்கள படிக்க வைக்கத்தான் நான் இப்பிடி தண்ணியில்லாத ஊருக்கெல்லாம் வந்திருக்கேன். சவுதில ஏங்க பார்த்தாலும் மணலாதான் கெடக்குது. பச்ச தேயில மலைய பார்த்துட்டு கெடந்த எனக்கு  இங்கு பச்ச கலரே கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. வீட்டுக்குள்ளேயே கெடக்குறேன். பெரிய பாப்பா கால் நனையாம பார்த்துக்கொள்ளவும். கால் நனைஞ்சு சலம் வச்சிட்டா பெரிய வருத்தமா போயிரும்.
பாப்பாவுங்க அப்பா ரொம்ப குடிக்காதீங்க. நல்லனா பெருனாளுக்கு கொஞ்சம் குடிச்சா பரவால்ல. எந்த நாளும் குடிக்காதீங்க. ஒங்கள நம்பிதான் பிள்ளைகள உட்டுட்டு வந்திருக்கேன். அடுத்த மாசம் காசு அனுப்பி வைக்கிறேன். பெரியபாப்பாவையும் கூட்டிக்கிட்டு போயிட்டு பிரவட்ல மருந்து கட்டுங்க. கொமரு புள்ள. நாளைக்கு ஒன்னுக்காட்டி ஒன்னு ஆகிரிச்சுனா. அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு. கவனமா பாருங்க.
தம்பி எப்பிடியிருக்கான். ஏந்நேரமும் கிரிக்கெட் அடிக்க விடாதீங்க. பாப்பாவுங்க அப்பா அவன அடிக்காதீங்க. சின்ன பாப்பா டிவி நாடகம் பார்க்காம படிக்கவும். டெஸ்ட் முடிஞ்சதும் வீட்லேருந்து நாடகம் பார்த்துக்கலாம்.
அடுத்த வீட்டு சின்னபுள்ள அபி எப்பிடியிருக்குது. நான் வேலை செய்யிற வீட்ல ஒரு சின்ன பாப்பா இருக்கு. எனக்கு அபி நெனவேதான் வரும். மூனு வயசு இருக்கும். நாடகத்துல வாற அபி மாதிரியே இந்தபுள்ளயும் அழகா இருக்கும். அத நான்தான் பார்த்துக்குவேன். அது வீட்ல அஞ்சாவது புள்ள. மத்தவுங்க எல்லாம் பெரிய புள்ளக. எல்லாருட்டு உடுப்பும் கழுவும்போது எனக்கு ஒங்க எல்லா நாபகம்தான் வரும். டொமி எப்பிடியிருக்கு. இங்க வீட்ல நாய் எல்லாம் வளக்க மாட்டாங்க.
பெரிய பாப்பாதான் பொறுப்பா எல்லாத்தையும் பார்த்துக்கனும். கால கவனமா பார்த்துக் கொள்ளவும்.
எல்லாரையும் கேட்டேனு சொல்லவும்..
விரைவில் பதில் போடவும்.
இப்படிக்கு
அன்புள்ள
முத்துலெச்சுமி

                      அம்மாவிடம் இருந்து வந்திருந்த கடிதத்தை பார்த்த கமலாவுக்கு ஒரு பக்கம் கவலை. அடிக்கொரு தடவை தன் காலில் ஆணி குத்திய காயத்தைப்;பற்றியே  கவலைப்பட்டு  எழுதியிருக்கும் அம்மா மேல் இரக்கமாக வந்;தது. கண்கலங்கினாள்.   மறுபக்கம் கனவும் வந்தது. அம்மா பணம் அனுப்பப் போகிறார். ஹட்டன் போனால்  காலுக்கும் மருந்துக்கட்டிக்கொண்டு தனக்கு தேவையான மேக்கப் சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற கனவுதான். வீட்டில் எல்லோருக்கும் கடிதத்தை வாசித்துக்காட்டினாள்.
முத்துலெட்சுமிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் கமலாதேவி. சாதாரண தரம் வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். கணிதத்தில் கோட்டைவிட்டதால் உயர்தரம் படிக்க முடியவில்லை. இப்போது இருக்கிற படிப்பை வைத்துக்கொண்டு ஏதாவது வேலை தேடுவது அவளது வேலை. லட்சணமானவளும் கூட. தன்னை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவாள்.
இளையவள் தேவிகா. இந்த முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகிறாள். கடைசி பிள்ளை பிரசாந் எட்டாம் வகுப்பு படிக்கிறான். கணவன் மணிவேலு தோட்டத் தொழிலாளி.
மூன்று பிள்ளைகளையும்; படிக்க வைத்து குடும்பம் நடாத்துவது என்பது தோட்டத்து சம்பளத்தில் குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஓவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யும் போதும் ஏதாவது கூடும் என எதிர்பார்த்தாலும் கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சுதான் கூடுமே தவிர சம்பளம் கூடாது. தேயிலைத் தோட்டங்களும் முன்பு போல் பராமரிக்கப்படுவதில்லை. இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மக்களின் எதிர்காலம் மிகுந்த கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. அவர்கள் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. அவரவர் வசதிக்கும் திறமைக்கும் ஏற்றாற்;போல வேறு வேறு தொழில்களை தேடிக்கொண்டு செல்கிறார்கள். வீட்டுச் சுமை அழுத்தத்தைக் கொடுக்க பெண்களே முதலில் அடுத்தத் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் அதில் கொழும்பு பங்களாக்களில் வீட்டு வேலைக்குப் போவதும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதும் அதிகமாக நடக்கிறது. இந்த அவலம் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு இட்டுச்செல்கிறது.
இந்த அவலத்தைப் பற்றியெல்லாம் யோசிக்க முத்துலெட்சுமிக்கு அறிவுபோதாது.  ஏட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு தோட்டத்தில் பேர் பதிந்து வேலைக்கு சேர்ந்தவள்;. மணிவேலுவுக்கு வாக்கப்பட்டு இருபது வருடங்களாகப்போகிறது. மூன்று பிள்ளைகளையும் கரை சேர்க்க அவளும் படாத பாடில்லை. மணிவேலுவும் தானுமாக நிறைய முயற்சிகளை எடுத்தும் வீட்டுச்சுமைகளை சமாளிக்க முடியவில்லை. மாடு வளர்த்துப்பார்த்தார்கள்.
மாடு வளர்ப்பது மலையகத்தில் தனிக்கலை. மற்றைய ஊர்களைப் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அந்திப்பொழுதில் கட்டிப்போட்டு பால் கறக்கும் நிலைமை மலையகத்தில் இல்லை. வெளியில் மேய விட்டு வளர்த்தால் அது தெயிலைத் தொட்டத்துக்குள் புகுந்துவிடும். பிறகு தொழிலாளி தான் செய்யும் தொழிலையம் இழந்து தோட்டத்து காரியாலயத்தில் விசாரணைக்கு நிற்கவேண்டியிருக்கும். அதனால் மாட்டுக்கு பட்டிக் கட்ட வேண்டும். மழையோ, வெயிலோ மூன்று வேளைக்கும் மாட்டுக்கு புல் கொண்டு வந்து போடவேண்டும். காசுக்கு புண்ணாக்கு வாங்கி காலையும் மாலையும் மாட்டுக்குத் தண்ணி வைக்க வேண்டும். இரவைக்கு காடியில் கிடந்த புல்லை அள்ளி மாட்டுக்கு படுக்கைப் புல் போடவேண்டும். ஆக, தன்னை விட சொகுசாக மாட்டை வளர்த்தால்;தான் அதில்; இருந்து ஏதும் வருமானம் பார்க்கலாம்.
முத்துலெட்சுமி மலை வேலை முடிந்த கையோடு ஒரு கட்டுப்புல்லை தலையில் சுமந்தபடிதான் வீடு வந்து சேருவாள். மணிவேலுவும் அப்படியே. பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்லை. வாகனத்தில் வந்து பால் சேகரிப்போருக்கு அதனை விற்பார்கள். அவர்களிடமே புண்ணாக்கும் வாங்கிக்கொள்வார்கள். பால் கணக்கு புத்தகத்தில் தினமும் விற்கப்படும் பாலின் அளவு எழுதப்படும். புண்ணாக்குக் கணக்கும் எழுதப்படும்.  தோட்டத்துச் சம்பளம் போலவே அதுவும் மாதத்திற்கு ஒரு முறை கணக்குப்பார்த்து புண்ணாக்கு செலவுக்குப்போக எஞ்சியது கையில் கிடைக்கும். கூட்டு ஒப்பந்தம் இல்லாத இன்னொரு கூலி முறை அது. அவ்வளவுதான். அவர்களின் உடல் உழைப்புக்கு ஏற்றதாக அந்த வருமானம்  இருக்காது.
இந்தத் தொழிலை முறைப்படி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கலாம். 'கொத்மலை'யும், 'அம்பேவலை'யும் கூட மலையகத்தில்தானே இருக்கிறது. ஆனால் மலையக மக்களிடம் இந்த தொழிலை முறையாக முன்னெடுக்கும் திட்டங்களதான் முன் வைக்கப்படவில்லை. மாடு வளர்க்கும் தொழிலாளிகளும் சிறுபண்ணையாளர்களும் தங்களது தொழிலை முறைமையாக்குமாறு கோரி ஹட்டன் நகரில் பால்குளியல் போராட்டம் நடாத்தியும் பார்த்தார்கள். ஹட்டன் பாதைகளில் 'பாலாறு' ஓடிய காட்சிகள் மட்டுமே வரலாறாகியது. எதும் நடந்த பாட்டையென்றால் காணோம். ஆனால் மாடு வளர்ப்புக்கான மந்திரி பதவிகள்; மட்டும் அவர்களின் தலைவர்களிடம்தான் வருஷ காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மாடுகள் மீதும் மந்திரிகள் மீதும் நம்பிக்கை இழந்து போனதால்தான் முத்துலெட்சுமி,  'முனவ்வரா பேகம்' ஆக மாறி சவுதி போனாள்.
ழூழூ
'நாளைக்கு ஹட்டன் போறேண்டி.....' கமலாவின் குரல் உற்சாகமாய் ஒலித்தது.
மறுமுனையில் கிடைத்த பதில்கள் அவளுக்குள் பூரிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கமலா கையில் இருந்த 'மொபைல்' தொலபேசியில் மின்னிய கலர் வெளிச்சங்கள் அந்த உரையாடலின் சந்தோஷத்தைக் காட்டியது.
'அப்பாவும் நானும் தான் வாறோன்...டீ'
'.......'
'அதுவொன்னும் பிரச்சினையில்ல...டீ. நான் எப்பிடி சமாளிக்கிறேன்னு பாரு..டீ'
அடிக்கடி 'டீ' போட்டு 'டீ' போட்டு பேசினாள். அடுத்தப்பக்கம் தோழியாக இருக்க வேண்டும்.
மணிவெலுவும் மகள் கமலாதேவியும் போகிற போக்கில் தங்களது பட்டியலை சரிபார்த்துக் கொண்டார்கள்.
'வீட்டுக்கு ஒரு சிற்றிலிங்க் போன் வாங்குவோம்பா... அப்பதான் அம்மாகூட எல்லாரும் அடிக்கடி பேசலாம். இல்லாட்டி என்னோட மொபைலுக்கு தானே அம்மா எடுக்கிறாங்க'
தன்னுடைய கைக்குள் மாத்திரமே கைப்பேசியை வைத்திருக்க புது 'ஐடியா' வைக் கொடுத்தாள் கமலா.
கமலாவின் கோரிக்கை நியாயமாகத் தெரிந்தது மணிவேலுக்கு. சிற்றிலிங்க். பட்டியலில் முதலிடம். புpடித்தது.
'அப்புறம் மறக்காமல் ... கேபிள் டிவி காசு கட்டிரனும்'
'அப்புறம், எனக்கு ஒரு மூவாயிரம் கையில தாங்கப்பா... எனக்கும் தங்கச்சிக்கும் தேவையான சாமான்கள கொஞ்சம் வாங்கனும்'
குமர் பிள்ளைகளின் தேவைகளை  உணர்ந்தவனாய் தலையாட்டினான் மணிவேலு.
'தம்பிக்கும் ஏதாவது வாங்கிக் குடுங்க..பிள்ளைகளா...'
;சரிங்கப்பா... அவன் ரெண்டு கொப்பியும்... 'பென்டன்' சிடியும் , கிரிக்கெட் பெட்டும் கேட்டான். அம்மா போன் பண்ணுனப்போ சொன்னுச்சி ... பெட்டு கேட்டு கரச்சல் பண்ணுறான். நானும் இல்லாத நேரம் அவன் வெளையாண்டானாவது என்னை மறந்துட்டு இருப்பான்... வாங்கிக்கொடுங்கனு..'
பட்;டியல்கள் நீண்டன.....குண்டும் குழியுமான பாதையில்; ஆடியாடி நகர்ந்த பஸ் நகரத்தை அடைந்தது.
வங்கிக்கு சென்று கணக்கு புத்தகத்தை நீட்டியவர்களுக்கு சந்தோஷம் தாளவில்லை. முத்துலெட்சுமி சொன்னது போலவே இருபதினாயிரம் அனுப்பியிருந்தாள்.
சொன்னபடி சாமான்களை வாங்கிய மணிவேலு. கமலா கையில் மூவாயிரத்தை கொடுத்தான்.
'அப்பா.... காலுக்கு மருந்து கட்டச் சல்லி'
'அதான் அடுத்தடுத்து தோட்டத்து ஆஸ்பத்திரியில கட்டுனோமே...'
'இல்லப்பா..அங்க அதே மருந்ததான் ...திரும்;ப திரும்ப.. கட்டுறாங்க. அம்மா டவுனுக்குப் போனா பிரவட்ல கட்ட சொல்லி கடுதாசில எழுதியிருந்திச்சு... மறந்துட்டீங்களா..?'
'ம்ம்...எங்க காலத்துல எந்த எழவு காலுல குத்துனாலும் அத இன்னும் கொஞ்சம் குத்தி.. மஞ்சளையும், உப்புக்கல்லையும் நுணுக்கி, வெளக்கெண்ணையும் வச்சு சின்னதா ஒரு சூடு போட்டா காஞ்சி போயிரும்.... நீயும் ஒங்கமமா போன ஒரு வருஷமா... காலு வருத்தம் காலு வருத்தம்னு மருந்து கட்டுற... ஏன்...புள்ள ஒரு ஆணி குத்துனா.. இம்புட்டு நாளைக்குமா ஆற மாட்டேங்கது'
'இல்லப்பா அது... கறல் புடிச்ச ஆணியினால அடிக்கடி ஊசி போடனும்னு பிரவட் டொக்டர் சொன்னாருப்பா'
ஏதோ இளம் பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு சொல்லி மூவாயிரமும் சொல்லாமல் ஐநூறும் கேட்பதாய் எண்ணிய மணிவேலு இன்னுமொரு ஐநூறையும் கொடுத்தான்.
கமலாவுக்கு மகிழ்ச்சி...
'நான் வந்துட்டேன்..டீ... நீ எங்கே நிற்கிற....' தோழிக்கு அழைப்பெடுத்தாள்.
மறுமுனை பதிலை செவிமடுத்தவள். சுற்றி முற்றி பார்த்தாள். ஏதோ உணர்ந்தவளாய்...
'சரி நான் வந்திடுறேன்...டீ'  என அப்பாவுக்கு விடை கொடுத்தாள்.
மகளை தனியாக அனுப்ப மணிவேலுவுக்கு விருப்பமில்லைதான்.
'குமர் பிள்ளைகள் தங்களுக்கு தேவையான சாமான்களை வாங்கப் போகுதுகள்..நாம போனாள் அதுகளுக்கு அசௌகரியமாக இருக்கும்' என மனதுக்குள் எண்ணியவனாக..
'சரிம்மா..... மருந்தக் கட்டிக்கிட்டு..சாமான்களையும் வாங்கிட்டு மூனு மணி பஸ்ஸுக்கே  பத்திரமா... வீட்டுக்குப் போயிடு. இன்னும் ரெண்டு வேலையிருக்கு அதை முடிச்சிக்கிட்டு வீட்டுச் சாமான்களையும் வாங்கிட்டு நான் அந்திக்குத்தான் வருவேன்...'
'சரிங்கப்பா...'      விரைந்தாள் கமலா.
ஒரு பக்கம் மகள் கமலா தனியே கழன்று போவதும் மணிவேலுக்கு வசதியாகத்தான்  இருந்தது. மெதுவாக நடந்து மேட்டு வீதியில் ஒதுக்குப்பறமாக இருக்கும் 'பார்'க்குள் நுழைந்தான்.
மணிவேலு பெரிய குடிகாரன் கிடையாது. அவ்வப்போது கொஞ்சம் எடுப்பான். ஆனால் முத்துலெட்சுமி வெளிநாடு போன பிறகு கையில் கொஞ்சம் காசு புழங்கியது. அந்திப்பட்டால் ஒரு 'கால்' எடுத்துவிட்டு படுத்துவிடுவான். முத்துலெட்சுமி இல்லாத கவலையில் சில நாளைகளில் அது 'முக்காலாகவும்' போவதுண்டு. அப்போதெல்லாம் நாலு காலில் தான் வீட்டுக்கே வந்து சேருவான். இதைக் கேள்விபட்ட முத்துலெட்சுமி 'பாப்பாவுஙக அப்பா .. ரொம்ப குடிக்க வேணாம்' என எழுதாமல் கடிதங்களை முடிப்பதேயில்லை.
ழூழூ
முன்னிரவை வரவேற்கும் மலையகத்தின் கறுத்த மாலைப் பொழுதில் தலைக்கு மேலே மூடையுடன்.. தலைக்குள்ளே போதையுடன் வீடு வந்து சேர்ந்த மணிவேலுவை தேவிகாவும், பிரசாந்தும் சூழ்ந்து கொண்டார்கள்.
'இந்தாங்கடா..கண்ணுகளா' என தான் வாங்கிக்கொண்டு வந்தவற்றில் 'சிற்றிலிங்கை' விஷேசமாக எடுத்து நீட்டினான் மணிவேலு.
'ஹய்யா... இனிமே ஒரு கோல் எடுக்க அக்காகிட்ட செல்போனுக்கு தொன்னாந்துகிட்டு இருக்க தேவையில்ல..'
என புதுப் போனை எடுத்து இயக்கிப்பார்த்தாள் தேவிகா..
நன..நன...நனனனனன.... மெல்லிய இன்னியசையோடு இயக்கத்தை ஆரம்பித்தது சிற்றிலிங்க்.
'உங்களுக்குத்தான் அக்கா ஏதேதோ..வாங்கியாரேனுச்சே...தம்பி உனக்கு என்னடா வாங்கியாந்துச்சு' என்று மகன் தோளைத் தட்டினான்.
'அக்கா எங்கப்பா..?' என தனது சாமான்களை பார்க்க ஆவலாகக் கேட்டான் பிரசாந்;த்.
'அடே... அது மூனு மணி பஸ்ஸுக்கே வந்திடுச்சிடா..' என்றான் மணிவேலு, சிரித்துக்கொண்டே...
'இல்லப்பா .. நானும் தம்பியும் ஸ்கூல் முடிச்சு..டியுஷனுக்கும் போயிட்டு... அஞ்சு மணிக்குத்தான் வந்தோம். வீடு பூட்டிதான் இருந்திச்சு... ஆறாயி அம்மாகிட்ட சாவிய வாங்கி நான்தான் வீட்டைத் தொறந்தேன்... அக்கா இன்னும் வரலையே.. நீங்க ரெண்டு பேரும் வாறிங்கனுதான் நாங்க இருந்தோம்'
தேவிகா விபரமாச் சொல்ல மணிவேலுவின் போதை கொஞ்சம் குறையுமாப்போல் இருந்தது. அந்திக் குளிரிலும் கொஞ்சம் வியர்;த்தது.
'அக்காளுக்கு கோலைப் போடு'
'நீங்கள் அழைத்த தொலைபேசி இலக்கம்..நிறுத்திவைக்கப்பட்டுள்ளது'
'அப்பா...அக்காவுட்டு போன்னும் வேலை செய்யலங்ப்பா....'
தேவிகாவின் பதில்  அவனை என்னமோ செய்தது. மணிவேலு கலவரமடைந்தான்.
அக்கம் பக்கம் உள்ளவர்களை விசாரித்தான். மூனு மணி பஸ்ஸில் வரும் பாடசாலைகளை பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லி தேவிகாவை அனுப்பினான்.
'அக்கா மூனு மணி பஸ்ஸில வரலையாம்... ஆனால், ஹட்டன்ல ஒரு அண்ணன்கூட பேசிக்கொண்டு நின்னத ஒரு பிள்ள பார்த்தேனு சொல்லுது' தகவல் தேடி வந்தாள் தேவிகா.
மணிவேலுவுக்கு சந்தேகம் வந்தது. 'அக்காளுட்டு கூட்டாளிமாருங்களுக்கு போனை போடு..'
'யாரோ..ஒரு கூட்டாளியோடத்தானே பேசிக்கிட்டு பிரவேட் ஆஸ்பத்திரி..போறேன்னுச்சு...' மணிவேலுவின் வார்த்தைகள் நம்பிக்கையிழந்தன.
 நாட்டில் நடக்கும் செய்திகளை நினைத்து அவனுக்குள் ஒரு படபடப்பு வரத்தொடங்கியது
'சிற்றிலிங்க்' வந்ததும் வராததுமாக சுழன்றுகொண்டிருந்தது தேவிகா தனக்கு தெரிஞ்ச அக்காவின் எல்லா கூட்டாளிகளுக்கும் அழைப்பு எடுத்துப்பார்த்தாள். எங்கும் சாதகமான பதில் இல்லை.
'அப்பா எனக்கு ஒரு சந்தேகம்... அந்தப் பொண்ணு, ஒரு அண்ணனோட அக்காவை பார்த்தேனு ..சொன்னிச்சே... அடிக்கடி அக்கா யாருகிட்டையோ போன்ல பேசிக்கிட்டே இருக்கும்பா....' தேவிகா தனது சந்தேகத்தைச் சொன்னாள்.
மணிவேலுவின்..தலைசுற்றியது.. இது போதையினால் அல்ல. பிள்ளைகளை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு இரவோடிரவாக அங்கும் இங்கும் விசாரிக்கத் தொடங்கினான். வேகமாக நடந்தான். ஆட்டோ ஒன்றை  எடுத்துக்கொண்டு அவசரமாக டவுனுக்கு புறப்பட்டான். அதிகம் கலவரப்பட்டான். ஆட்டோ டிரைவருக்கு இவனைப்பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்.
'இனி தேடி பிரயோசனம் இல்லண்ணே..... எனக்கு தெரிஞ்சப்பையன்தான்... அவங்க ரெண்டு; பேத்துக்கும் ரொம்ப நாள் பழக்கம்..'
அட்டன் போய் சேரும் முன்னமே ஆட்டோ டிரைவரிடமே விடை கிடைத்து விட்டது. அவனும் ஆட்டோ டிரைவர் தானாம். கமலா ஓடித்தான் போய்விட்டாள்....
காலுக்கு மருந்து கட்டுவதாகச்சொல்லி காதலுக்கு மருந்துப்போட்டிருக்கிறாள் கமலா.
விக்கித்து நின்ற மணிவேலுவிற்கு விடை கிடைத்து விட்டது.
ஆனால் மணிவேலு மனதில் வினாக்கள் எழுந்துகொண்டிருந்தன.
முத்துலெட்சுமிக்கு என்ன பதில் சொல்வேன்....?
கமலா 'டீ' போட்டு 'டீ' போட்டு பேசியது அவள் தோழிக்குத்தானா..?
என் குடிப்பழக்கம்தானா இந்த நிலைமைக்கு ஆளாக்கியது..?
முத்துலெட்சுமி இருந்திருந்தால் இது நடந்திருக்குமா...?
இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் அவனைக் குடைந்தன.. ஆனால்  மனதிற்கு  கிடைத்த ஒரே பதில்
'விடிந்தால் மானம் போயிடும்....!
வேறு வழியில்லை. வீட்டுக்குத்தான் போகவேண்டும். எஞ்சிய இரண்டு பிள்ளைகளையாவது.......
நாட்கள் மாதங்களாயின... மகள் ஓடிப்போனதை நினைத்து இப்போது அதிகமாகவே குடிக்க ஆரம்பித்துவிட்டான் மணிவேலு. இரண்டாவது மகளும் பரீட்சையில் உரிய பெறுபேற்றைப் பெறவில்லை. மகன் ஏதோ பாடசாலை போய்க் கொண்டிருந்தான். அந்த ஆட்டோ போகும்போது தனது நண்பர்கள் தன்னைக் கேலி செய்வதாக அடிக்கடி தேவிகாவிடம் சொல்லி கவலைப்படுவான்.
முத்துலெட்சுமியிடம் கடிதத்துக்குப் பதிலாக  இடைக்கிடை தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம்.. கமலா காலுக்கு மருந்து கட்டப் போய்விட்டதாகச் சொல்லி சமாளித்தார்கள்.
ஆணி குத்திய இடம் சலம் பிடித்துவிட்டதால் அடிக்கடி மருந்து கட்ட இருப்பதாக கமலா தனக்குச் சொன்ன பொய்யை மணிவேலு இப்போது முத்துலெட்சுமிக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.  பிள்ளைகளையும் அதே பொய்யைச் சொல்லச் சொன்னான். தேவிகா சொல்லமாட்டாள் என நினைத்தாலும் ஆனால் மகன் உளறிவிடுவானோ என்ற பயம் வேறு இருந்தது. அதனால் முத்துலெட்சுமி தொலைபேசி எடுக்காவிட்டால் நல்லது என்பது போலவே எண்ணத் தொடங்கினான். அதுபோலவே முத்துலெட்சுமியிடம் இருந்து அழைப்புகள் வருவதும் குறைவடைந்தது. கவலையிருந்தாலும் அதை விரும்பினான் மணிவேலு.
ழூழூ
கமலா கர்ப்பமானாள். ஆட்டோ ஓட்டிய அசதியில், அந்தியில் அரை போதையில்; வீட்டுக்கு வரும் கணவன்  சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவான்.  அம்மா அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது கமலாவுக்கு. தாய்மையடையும் போதுதானே அம்மாவின் வலி தெரியும்.
அம்மாவுக்கும் தன் குடும்பத்துக்கும் துரோகம் செய்ததை நினைத்து அடிக்கடி வருந்தினாள். தோழியின் உதவியுடன் வீட்டு தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டவள் ஒரு நாள் தயக்கத்துடன் அழைப்பெடுத்தாள். தங்கை தேவிகாதான் பேசினாள். அம்மாவுக்கு விசயம் தெரியாது என்றும் அம்மாவுடன் ஆறுமாத காலமாக எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவிகா சொன்னது கமலாவுக்கு மேலும் கவலையைத் தந்தது.
கணவனுடன் 'கிளினிக்' புறப்பட்டாள். அதே பிரைவட் ஆஸ்பத்திரிக்கு. கணவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு செல்ல பின் சீட்டில் தனியாய் அமர்ந்திருந்தவளுக்கு அருகில் அம்மா இருக்க வேண்டும் போல் இருந்தது. ஒவ்வொரு முறை 'கிளினிக்' போகும்போதும் என்றோ ஆறிவிட்ட காயத்தைச் சொல்லியே அம்மாவிடம் காசு கறந்ததையும், காதலுக்காக அந்த காயத்தை காட்டி அப்பாவை ஏமாற்றியதையும்  நினைத்து வருந்தினாள்.
'அம்மானா சும்மா இல்லடா...அவ இல்லனா யாரும் இல்லடா' கணவனின் ஆட்டோவில் பாட்டு.. சத்தமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கமலாவுக்கு அம்மாவின் நினைப்பு அதிகமாகவே வந்துகொண்டு இருந்தது.
பிரைவட் ஆஸ்பத்திரியை சென்றடைந்தவள். தனது சுற்று வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கமலாவுக்கு வயிறு மட்டுமல்லாது மனமும் சுமையாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த  பெண்மணி கையில் இருந்த 'சூரியாந்தி' யில் எதேச்சையாக அந்த செயதியைப் படித்தாள் கமலா.
'சவூதிக்கு வேலைக்குச் சென்ற பெண்ணின் உடலில் ஆணியேற்றப்பட்டு கொடுரம்-
நாட்டுக்கு அழைத்துவரப்பட்டப் பெண் வைத்தியசாலையில் அனுமதி'
செய்;தியோடு பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தை சற்று உற்றுப்பார்த்தாள் கமலா.
'அம்மா.........!!!!'  கமலாவின் அலறல் ஆஸ்பத்திரியையே ஆட்டியெடுத்தது..
மயங்கி சரிந்த  அவளை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 'ஸ்ரெச்சஸில்' ஏற்றினார்கள். கமலாவின் கால்களில் ஆணி குத்திய தழும்புகள் கூட மறைந்திருந்தன. ஆனால் அவளுக்கு வலி தாங்க முடியாது துடித்தாள்....

(முற்றும்)

Friday, April 11, 2014

வவுனியா வடக்கு , நெடுங்கேணி - தள ஆய்வு

வவுனியா வடக்கு
வற்றாத நீரும்,வற்றிய குருதியுமாய் வாழும் அம்மண்ணை இத்தளம் தேடிச் சென்றது.வன்னி என்றால் நெருப்பு என்னும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு - நெடுங்கேணி
ற்றா ஊற்றும் வளம்மிகு கேணிகளும் நிறைந்த வனப்புறு மண்தான் நெடுங்கேணிப் பிரதேசமாகும்.
ுளமும் வயலும் குளிர்தரு சோலையும் நிறைந்த இப் பிரதேசத்திலே நிறைவுகள் இருக்குமளவிற்கு
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய வேலைகளும் தேவையை ஒட்டி தவிர்க்க முடியாமல் இருக்கின்றன.
                        காட்டைத் திருத்திக் களனியாக்கிய மனிதனின் கனவு 1956ம் ஆண்டிலிருந்து 30 வருடங்கள் செழுமை கண்டது. அதன் பின்னர் வேண்டா வெறுப்பாகப் பயிரிடுதலும், போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் பெருவாரியான விளைச்சலைக் காணுடியாத ஒரு துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டது. இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக மண்ணைத்ாய் போல் நேசிக்கிற பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.எல்லோரும் பெருமகிழ்வோடு வரவேற்கிற சமுதாய மாற்றமும், உழைப்பாளிகளின் மனதில் புதிய நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.அந்த விவசாய மக்களுக்கு பயிர்ச் செய்கைக்குரிய ஆலோசனைகளும்,நீர்நிலைகளை வருடாவருடம் ஆழப்படுத்தலும் அவசியமாகின்றது. அத்துடன் கோடைகாலப் பயிர்களாகிய எள்ளு,பயறு, உழுந்து,வரக, குரக்கன்,சாமை போன்ற சிறுதானியங்களுக்கும் நெடுங்கேணி மண் பிரசித்தி பெற்றது.அந்த விவசாயிகளுக்கு தானிய விதைகள்,உரவகைகள் தாமதமின்றி வழங்குவதுடன் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.வங்கிக்கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.
                 யுத்தத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து வந்து வவுனியாவில் வாழுகின்ற நிலமற்ற ஏழை விவசாய மக்கள் - கணிசமான அளவில் நெடுங்கேணி வயல்களில் இறங்கி வேலை செய்கிறார்கள்.பட்டினி இன்றி உண்ணவும், பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவும் அவர்களால் முடிகிறது. அந்த மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்படாமல் நம்பிக்கையும்,ஊக்கமும் கொடுக்கப்படவேண்டியது  அவசியமாகும்.யாழ்ப்பாணத்தில், முல்லைத்தீவில் தமக்குச் சொந்த நிலம் இல்லாததனால் வவுனியா
நெடுங்கேணிப் பிரதேசத்தையே தமது தாய் வீடாக நேசிக்கத் தொடங்கி வாழ்கிறார்கள்.இப் பகுதியில் வசிப்போர் தொகை அதிகமாக இருப்பதனால் மாணவர்கள் தொகையும் அதிகமாகவே
இருக்கிறது.அவர்களது வசதியை முன்னிட்டு நூலகங்கள் கணனி வசதிகளுடன் கூடியதாகவும்
அமைத்தால் வரவேற்கக் கூடியதாக இருக்கும். சிறுவர், பாலர் பள்ளிகள்,நீச்சல் குளங்கள்,பொது

ிளையாட்டுத் திடல்கள்,சிறுவர்பூங்காக்கள் இன்னும் எண்ணிக்கையில் கூட்டப்படல் வேண்டும்.ஒரு மகப் பேற்று வைத்தியசாலையும் மிக மிக அவசியமாகும்.அங்கு இரவு பகல் கடமையாற்றக்கூடிய டாக்டர்,தாதிகள்.சிற்றூழியர்கள்,துப்புரவுத் தொழிலாளர்கள் எனப் பலதுறைகளையும் கவனித்துச்சேவையாற்றக் கூடிய நாட்டுப் பற்றுள்ளவர்களை நியமிக்க வேண்டும்.அவசரத் தேவையேற்படின் அரசாங்கப் பொது வைத்தியசாலைக்கோ, அன்றி அயல் மாவட்டத்திற்கோ செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் வசதியும் சாரதியும் நிரந்தரமாக வழங்கப் படல் வேண்டும்.வீதி ஒழுங்குகள் கடைப்பிடிக்கப் படல் வேண்டும்.சுத்தம், சுகாதாரம் பேணப்படல் வேண்டும்.கழிவு நீர் தேங்கி நிற்காமல் விழிப்புடன் இருக்கவேண்டும்.மலேரியா, டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் பரவாமல் தடுப்பதற்குப் பூச்சிக் கொல்லி மருந்து கிரமமாக, அதுவும் மாரி காலத்தில் மிக அக்கறையுடன் தெளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் மலசல கூடங்கள் முறைப்படி பராமரிக்கப் பட்டு வருகின்றனவா? எனப் பொதுச் சுகாதார உத்தியோதத்தர் பரீட்சித்து அறிக்கை
சமர்ப்பித்தல் வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கும்,பள்ளிக்கும் செல்பவராயின்
சுகாதாரப் பரிசோதகர் அப்பகுதிக்கு பரீட்சிக்க வருகைதர இருக்கும் தினத்தை முன்கூட்டியே
அறிவிக்க வேண்டும்.குடிக்கும் நீரைக் கொதிக்கவைத்து வடிகட்டிக் டிக்கவேண்டும்.குடியிருக்கும் வளவுகளில் சேருகின்ற குப்பைகளை நகரசபை வாகனங்களுக்கு ஒப்படைக்கிற ஒழுங்கு முறைகள் கிரமமாகச் செயற்படல் வேண்டும்.சிறப்பாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சகல விடயங்களிலும் அக்கறையுடன் செயற்பட்டால் நெடுங்கேணிப் பகுதி ஒரு முன்னுதாரணப் பகுதியாகக் கணக்கிடப்படும்.


பண்டாரவன்னியன் காலத்திற்கு முன்பிருந்தே வன்னிமண்ணில் வாழ்ந்து வரும் தமிழ்க்குடி
மக்கள் தங்கள் வியர்வையை மண்ணுக்கு நீராகப் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தவர்கள்.வாழ்ந்த மண்ணை வளப்படுத்தியவர்கள்.மண்ணை விட்டு போக மனமின்றி யுத்தகாலத்தில் கூட மண்ணுக்கு உரமாகிப் போனவர்கள்.தாம்பெற்ற பிள்ளைகளுக்கு நிறைவான கல்வியையும்,உயர்வான சிந்தையையும் கொடுத்தவர்கள்.கிழக்கு மாவட்டத்திலிருந்தும்,மலையகத்திலிருந்தும் வந்த மக்களுக்கு வயிற்றுப் பசியாற்றித் தங்க இடங்கொடுத்த இரக்க சிந்தனை உள்ளவர்கள்.மனோநிலையைப் பொறுத்த மட்டில் வீரமும்,தீரமும் வாய்ந்தவர்கள்.அந்த மக்களுக்கு வசதி வாய்ப்புக்களை அவர்கள் கேட்காமலே வழங்குதல் மனித தர்மமும்,அரசுக் கடமையுமாகும்.
 
சில விசேட விபரங்கள்
1 - மொத்தச் சனத்தொகை..............................................    13,398
2 - பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை.......   8,267
3 - குடும்பங்களின் எண்ணிக்கை ........................................ 3,976
4 - வீட்டுக்கூறுகளின் எண்ணிக்கை..................................  3,582

வவுனியா மாவட்டத்தில் மக்கள் செறிந்து வாழும் கிராமங்கள் சில 
வெடிவைத்தகல்லு ஊஞ்சால் கட்டி மருதோடை பட்டிகுடியிருப்பு கற்குளம்
நெடுங்கேணி தெற்கு நெடுங்கேணி வடக்கு ஒலுமடு மாமடு குளவி சுட்டான்
மாறஇலுப்பை பரந்தன் அனந்தபுளியங்குளம் நைனாமடு சின்னடம்பன்
புளியங்குளம் தெற்குபுளியங்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு
கனகராயன்குளம் வடக்கு மன்னகுளம்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்பிரிவு - நிர்வாகக் கட்டமைப்பு
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1- கி-சே-பிரிவுகளின் எண்ணிக்கை---- 20
2 -கிராமங்களின் எண்ணிக்கை--------- 115
3- கம நல சேவை நிலையங்கள்-----   2
4- உள்ளூராட்சி சபைகள்---
  பிரதேச சபை---------------------------    1
 பிரதேசசபை உப காரியாலயம்  2
5-போலிஸ் நிலையங்கள்-----------------   2
* அத்துடன் கால்நடை வைத்தியப் பிரிவும்,பொதுச் சுகாதார வைத்தியப் பிரிவும் உள்ளது.

நல்ல செழிப்பான நிலவளமும்,நிலையான வனவளமும் கொண்ட பகுதியே கனகராயன்ஆறு,
சிற்றாறு போன்ற குளத்திலிருந்து ஆரம்பமாகி மணலாற்றுக்கு ஊடாகப் பாய்ந்து கொக்கிளாய்
ஏரியில் கலக்கின்றது.அவ்வேரி முல்லத்தீவின் கிழக்குக் கரையோரமாகப் பாய்ந்து இந்து சமு
த்திரத்துள் சங்கமிக்க விடாமல் பாதுகாக்கப் படல்வேண்டும்.


மேலும் வவுனியா வடக்கும்,நெடுங்கேணி பற்றிய தகவல்களும்  புதிய தளம் -2 இல் கிடைக்கும் .